தமிழ் சினிமாவில் நடிகர் சேதுவின் மரணம் பல திடீர் மரணங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
நடிகரும் தோல் சிகிச்சை மருத்துவருமான டாக்டர் சேதுராமனின் மரணச் செய்தி வெளியான போது பலரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலகத்தை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் இவரது மரணம் நிகழ்ந்துள்ளது. இவ்வளவு சின்ன வயதில் நடந்துள்ள சேதுராமனின் மரணம் பலரது கவனத்தைச் சிதைத்துள்ளது. அவர் டாக்டர் என்பதை மீறி ஒரு திரைப் பிரபலம் என்பதால் அதிகப்படியான கவனத்தை இம்மரணம் ஈர்த்துள்ளது. இந்த இளம் வயது நடிகரின் மரணத்தைப் போல திரைத்துறையில் பல அதிரடியான மரணங்கள் நடந்துள்ளன. இன்று சேதுராமன். அன்று நடிகர் முரளி. இப்படி கோலிவுட் சினிமாவை உலுக்கிய ஐந்து மரணங்கள் பற்றிப் பார்க்கலாம்.
டாக்டர் சேதுராமன் என்கிற நடிகர் சேது - 2020
டாக்டர் வட்டாரத்தில் சேதுராமன் என அறியப்பட்ட இவர் திரைத்துறையில் சேது என்றே அறியப்பட்டார். இவர் தென்னிந்தியா வட்டாரத்தில் ஒரு முன்னணி தோல் சிகிச்சை மருத்துவராகவும் இருந்து வந்தார். இவருக்கு வயது 36 தான் ஆகிறது. மாரடைப்பு நோயினால் இவர் இறந்துள்ளார். ‘கண்ண லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா’', ‘சக்கை போடு போடு ராஜா’,'50 / 50 ' எனப் பல படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்தவர் இவர். நடிகர் சந்தானம் மூலம் திரை வாழ்க்கைக்கு அறிமுகமான சேது, தொடர்ந்து நகைச்சுவை கலந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவருக்குத் தொழில் ரீதியாக சினிமாவில் நல்ல நண்பர்கள் உண்டு. இவரிடம் சில முன்னணி நடிகைகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேலும், இவர் நடித்து கொண்டே முழுநேர தோல் சிகிச்சை மருத்துவராக இருந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு முதுகுத்தண்டில் ஒரு அறுவைச் சிகிச்சை நடந்தது. அதனையடுத்து அதிலிருந்து மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்பினார் சேது. இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத நேரத்தில் இவரது மரணம் திடீரென்று நடந்து முடிந்துள்ளது. இந்த மரணம் இவரை அறியாதவர்களைக் கூட பாதித்துள்ளது. இதன் மூலம் திரைத் துறையில் இறந்த இளம் நடிகர்களின் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார்.
அரசியல்வாதியும் நடிகருமான ஜே.கே.ரித்திஷ், அவரது 46 வயதில் மாரடைப்பினால்தான் காலமானார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார் ரித்திஷ். இவர் கடைசியாக நடித்த படம் ‘எல்.கே.ஜி'. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் இவர் இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். ஜே.கே.ரித்திஷின் திடீர் மறைவால் அரசியல்வாதிகள் மற்றும் கோலிவுட் நட்சத்திரங்கள் பெரும் அதிர்ச்சியைச் சந்தித்தனர். பெரிய அளவுக்கு இவரது மரணம் சோகத்தை உருக்கியிருந்தது. திரைத்துறைக்கு வந்த கொஞ்ச காலங்களிலேயே பெரிய புகழை ஈட்டிய இவர், அந்தச் செல்வாக்கை வைத்து அரசியலில் இறங்கினார். அப்படியே மக்களவை உறுப்பினர் ஆகும் அளவுக்கு வளர்ந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒருநாளில் அவரது திடீர் மரணம் நடந்தேறியது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஐகான் எனப் போற்றப்பட்டவர். பின் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறினார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற ஸ்ரீதேவி, சினிமாவை தாண்டிய புகழை சம்பாதித்தார். கடந்த பிப்ரவரி 2018 இல் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் இவரது மரணம் நடந்தது. இவர் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் எனச் செய்திகள் வெளியாகின. இவர், 54 வயதில் மரணமடைந்தார். இங்கு இவர் தனது மருமகனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவரது கணவர் போனி கபூருடன் பயணம் மேற்கொண்டிருந்தார். இவர்களுடன் மகள் குஷி கபூர் சென்றிருந்தார். இளமை மாறாமல் இறுதிவரை ஆரோக்கியமான ஸ்ரீதேவியின் திடீர் மரணம் பலரை உலுக்கியது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அவரது மறைவுக்குப் பிறகு துக்கத்தில் சிக்கித் தவித்தார். சமீபத்தில் இப்போது கூட, இவர் தனது நேர்காணல் ஒன்றில் தன் மனைவி ஸ்ரீதேவியைப் பற்றி பேசும் போது தழுதழுத்தார்.
பாடலாசிரியர் ந. முத்துக்குமார் - 2016
திரைத்துறையில் பிரபல பாடலாசிரியர் வலம் வந்த நா முத்துக்குமார், இறக்கும்போது அவருக்கு வெறும் 41 வயது. மஞ்சள் காமாலை காரணமாக இவர் இறந்தார். அவரது மரணத்தைக் கேட்ட திரை ரசிகர்கள் திரண்டு போய் அவர் வீட்டின் முன் நின்றனர். திரைத்துறையில் தன் பாடல்கள் மூலமாக அழுத்தமான தடத்தை ஏற்படுத்திய முத்துக்குமார் விட்டுப்போன இடம் இன்னும் காலியாகவே உள்ளது. சில இசையமைப்பாளர்கள் உண்மையில் இந்தப் பாடலாசிரியரை இழந்து தவிக்கிறார்கள். அன்பு, கோபம், பசி போன்ற சில மனித உணர்ச்சிகளை தன் பாடல்களின் மூலம் ந முத்துக்குமார் கோட்டையாக கட்டி எழுப்பினார். மீட்டுக் காட்டினார். இதுவரை ந. முத்துக்குமார் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 2012 ஆம் ஆண்டில் மட்டும் 103 பாடல்களை எழுதிய மாபெரும் சாதனையைப் படைத்தார்.
பலருக்கு இவர் நடிகர் முரளி. ஆனால் இன்னும் இவரை ‘இதயம்’ முரளி என அழைப்பவர்கள் உண்டு. கடந்த 8 செப்டம்பர் 2010 அன்று நடிகர் முரளி அதிகாலை வேளை ஒன்றில் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்து போனார். முரளி மரணம் அடைந்த போது அவருக்கு 46 வயது. கடந்த சில வருடங்களில் திரைத்துறையில் நடந்த அதிர்ச்சியான மரணங்களில் முரளியின் மரணம் முதன்மையானது. இவரது மரணம் தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1984 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர்ஜன் இயக்கிய 'பூவிலங்கு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கடைசியாக 2010 ஆம் ஆண்டு அவரது மகன் அதர்வா அறிமுகமான 'பானா கத்தாடி' படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானவர்களின் பட்டியலில் டாக்டர் சேதுராமனும் இணைந்துள்ளார். இதுவே கடைசி இழப்பாக இருக்க வேண்டும் என்பது நல்ல இதயங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.