சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பைனான்சியர் அன்புச்செழியனின் மேலாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த வாரம் திடீரென தற்கொலை செய்துகொண்டார். பைனான்சியர் அன்புச்செழியன் துன்புறுத்தலால்தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரை அடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அத்துடன் தலைமறைவான அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, லுக்அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் அளித்துள்ளனர். இதனால் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்புச்செழியன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அன்புச்செழியனின் மேலாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அன்புச்செழியனின் இருப்பிடம் குறித்தும், அசோக்குமார் தற்கொலை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.