சினிமா

திரைப்பட கருத்துகளை திரையரங்குகளிலேயே விட்டுவிட்டு வரவேண்டும்: நடிகர் ராதாரவி

திரைப்பட கருத்துகளை திரையரங்குகளிலேயே விட்டுவிட்டு வரவேண்டும்: நடிகர் ராதாரவி

Veeramani

ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகள் குறித்து சர்ச்சை ஏற்பட்ட நிலையில், திரைப்பட கருத்துகளை திரையரங்குகளிலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள ஆன்டி இண்டியன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது திரைப்பட கருத்துக்களை திரையரங்குகளிலேயே விட்டு விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

ஜெய்பீம் திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  மேலும் ஜெய்பீம் படத்தின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அவர், தற்போது ஒரு திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆன்டி இண்டியன் திரைப்படம் வெளியாகும்போது அந்த திரைப்படத்தை பற்றி பேசுவார்கள், விமர்சிப்பார்கள் என தெரிவித்தார். எனவே திரைப்பட கருத்துக்களை திரையரங்கோடு விட்டுவிட்டு வருவதே சிறந்தது என அவர் பேசினார்.

ஆன்டி இண்டியன் திரைப்படத்திலும் பல சர்ச்சைகள் உள்ளது. இருந்தாலும் சிறந்த முறையில் இயக்குனர் கையாண்டு உள்ளார் எனவும் ராதாரவி கூறினார். தற்போதைய சூழலில் உண்மை கதை என்று பெயர்களை மாற்றி மாற்றி எடுக்க கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன, அதுபோல பல திரைப்படங்களை எடுக்க முடியுமெனவும் ராதாரவி விமர்சித்தார்.  தற்போதைய சூழலில் ஓ.டி.டியில் பல திரைப்படங்கள் வெளியாகின்றன, ஐந்து ஆண்டுகள் கழித்து நடிகர்களின் சம்பளங்களை ஓ.டி.டி நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கப் போகின்றன எனவும் அவர் கூறினார்.

- செந்தில்ராஜா