சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கங்குவா’. கடந்த 14 ஆம் தேதி திரைக்கு வந்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஒரு தரப்பினர் படத்தின் முயற்சியை பாராட்டினாலும், ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை ஜோதிகா கங்குவா திரைப்படத்திற்கு ஆதரவாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதல் நாளிலேயே இத்தனை எதிர்மறை விமர்சனத்தை பரப்பியது வேதனை அளிக்கிறது. 3 மணி நேர திரைப்படத்தில் அரை மணி நேரம் மட்டுமே சரியில்லை. 3டியை உருவாக்க படக்குழு எடுத்த முயற்சிக்கு பாராட்டு தரவேண்டிய நிலையில், எதிர்மறை விமர்சனம் செய்யப்படுகிறது.
மிகப் பழைய கதைகளுடனான, அறிவுக்கு மாறான பெரிய பட்ஜெட் படங்களுக்கோ, பெண்களை பின்தொடருதல், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த, அதிகம் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களுக்கோ இந்த அளவிற்கு விமர்சனம் செய்யப்படவில்லை” என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய சினிமா விமர்சகர் கோடங்கி, “ஜோதிகா சொன்னதில் ஒரு விஷயம் சரியாக இருக்கிறது. சூர்யா எனும் ஒருவர் கார்னர் செய்யப்படுகிறாரா எனத் தோன்றுகிறது. படத்தில் எனக்கும் மாறுபட்ட கருத்து இருக்கிறது. படத்தில் சத்தம் அதிகமாக இருந்தது. கதையிலும், திரைக்கதையிலும் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். மூன்றாயிரம் பேருக்கும் மேல் இரண்டாண்டுக்கும் மேலாக உழைத்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல முடியாத விஷயத்தை சொல்ல நினைத்தது என அனைத்தையும் அங்கீகரிக்கிறோம்.
விமர்சனம் என்பது தனிமனித தாக்குதலாக மாறிவிட்டது. கங்குவா படத்தின் மீது அது அதிகமாகவே இருந்தது. கங்குவாவை விமர்சிக்காமல் சூர்யாவை திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். விமர்சனம் எனும் பெயரில் தனிமனித தாக்குதல்கள் செய்யப்படுவதால், அனைவரும் அதே கருத்தை கொண்டிருப்பதாக தோற்றம் வந்துவிடுகிறது” என தெரிவித்துள்ளார்.