பிகில் படக்கதை தொடர்பான பதிப்புரிமை வழக்கில் படத்தை வெளியிட தடை கோரி புதிதாக தொடரப்பட்டுள்ள வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
‘பிகில்’ கதைக்கு உரிமை கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் தனது "பிரேசில்" கதையையும் அட்லி எடுத்துள்ள "பிகில்" கதையையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் தன் கதையை பயன்படுத்தியதற்காக ரூபாய் 10 லட்ச இழப்பீடு வழங்க இயக்குனர் அட்லீ, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என அவரது சார்பில் முறையிடப்பட்டுள்ளது.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கால்பந்தாட்டத்தை அடிப்படையாக கொண்டு 2014 ஜூன் 12 தொடங்கி 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து உருவாக்கி வருகிறேன். இது
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கதை. சர்வதேச நட்சத்திரங்களை கொண்டு படமாக்கினால் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாயை ஈட்டும். என் கதையை மேற்கு அமெரிக்க எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளேன். பதிப்புரிமை சான்றிதழ் வருவதற்காக காத்திருக்கிறேன்.
‘பிரேசில்’ கதையில், வறுமையில் வாழும் இளைஞர்களிடம் உள்ள கால்பந்தாட்ட திறமையை கண்டறியும் ராயப்பன் என்ற நடுத்தர வயது ரவுடி ஒருவர், இளம் வயது பயிற்சியாளருடன் சேர்ந்து அந்த இளைஞர்களை முன்னேற்றுவதும், அதற்கு இடையூறாக உள்ள கால்பந்தாட்ட பெடரேசன் மற்றும் அதன் கட்டமைப்பை எதிர்த்து போராடுவதும், தடைகளை தாண்டி அந்த அணி சாதிப்பது என எனது கதைக்கு பதிப்புரிமை பெற்றுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று காலை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.