சினிமா

சாதிய மனோ பாவத்தின் மீது ஜாப்யா எறிந்த கல்...! ஃபான்றி...!

சாதிய மனோ பாவத்தின் மீது ஜாப்யா எறிந்த கல்...! ஃபான்றி...!

subramani

"இப்பல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு, மாப்ள கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு” இதை பலரும் அவ்வப்போது சொல்ல கேட்டிருப்பீர்கள். உண்மையான நிலை அப்டித்தான் இருக்கிறதா..? என்றால் நிச்சயாமாக இல்லை. இந்த தேசத்தில், இந்த மாநிலத்தில், இந்த மொழி பேசும் இந்த மதத்தை சேர்ந்த குறிப்பிட்ட சாதியின் உட்பிரிவுக்குள் ஒளிந்திருக்கும் உங்கள் வாழ்க்கை துணையினை தேடுகிற போது ஏற்படும் மாயை தான் அது. நம் வாழ்க்கைத் துணைக்கான தேடலின் எல்லையினை விரிவு படுத்தும் போது இப்படியொரு கேள்வி எழுவதே இல்லை. எல்லையை உடைக்க நீங்கள் தயாராக இருக்கும் போது, உங்களுக்கு விருப்பமான ஒரு பாலினத்தை துணையாக தேர்வு செய்து கொள்வது கடினமாக இருக்காது. சாதி ஒழிந்து விட்டதாக நினைக்கும் இடங்களில் கூட சாதி சற்று ஒளிந்து கிடப்பதை கவனிக்க முடிகிறது. சாதி எனும் மனநோயிலிருந்து மனித மனங்கள் தெளிவு பெறும் போது, சக மனித நேசத்திற்கான வாசலை நாம் திறக்கத் தயாராகும் போது, சாதியானது உலக உருண்டைக்கு வெளியே அநாதையாக வீசி எறியப்படும். 

தேசத்தின் வளர்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சாதியும், ஆதிக்க மனோ நிலையும் பட்டியலின சிறுவன் ஜாப்யாவை எப்படி அணுகுகிறது என்பது குறித்து பேசுகிறது 2014’ல் வெளியான ஃபான்றி எனும் மராத்திய மொழி திரைப்படம். மஹாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது அகோல்னர் எனும் சிறிய கிராமம். கைக்காடி எனும் மொழியினை பேசும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஜாப்யா. வறுமையான ஜாப்யாவின் குடும்பமானது அவ்வூரில் உயர் சாதியினர் என கருதிக் கொள்வோர் கொடுக்கும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வாழ்கிறது. அவர்களது குடிசையானது ஊருக்கு வெளியே தனியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல நாட்கள் வேண்டா வெறுப்பாக வேலைக்கு செல்லும் ஜாப்யா மற்ற நாட்களில் பள்ளி செல்கிறான். 

அவ்வூர் பள்ளியில் படிக்கும் தனது சக வகுப்புத் தோழியும், அந்த ஊரில் உயர் சாதியாக கருதப்படும் சமூகத்தின் பெண்ணுமான ஷாலுவின் மீது தீரா அன்பு ஜாப்யாவிற்கு உண்டு. ஷாலுவின் வீட்டின் எதிரில் இருக்கும் மெக்கானிக் கடையில் இருக்கும் இளைஞர்கள் அங்கு கேரம் போர்டு விளையாடுவதும், ஜாப்யா அங்கு ஷாலுவின் வீட்டை பார்த்தவாறே அமர்ந்திருப்பதும் வாடிக்கையான ஒன்று. மெக்கானிக் வேடத்தில் நடித்திருக்கும் ‘நாகராஜ் மஞ்சுளே’ தான் இப்படத்தின் இயக்குனர். இவர் நிஜத்தில் தலித் பண்பாடு மற்றும் அவர்களின் வாழ்வியலைப் பேசும் கவிஞரும் கூட. 

ஃபான்றி திரைப்படத்தில் ஊர் திருவிழா ஒன்று நடக்கிறது. அதில் சாமி ஊர்வலத்தின் போது பன்றியொன்று குறுக்கே வந்து இடையூறு செய்துவிடுகிறது. அதை தீட்டாக கருதி ஊரில் உள்ள பன்றிகளையெல்லாம் விரட்டியடிக்கும் பொறுப்பு ஜாப்யாவின் தந்தை மீது சுமத்தப்படுகிறது. தன் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டிய விசயத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அவர், ஜாப்யா உட்பட தனது குடும்ப உறுப்பினர்களோடு பன்றிகளை விரட்டும் வேலையில் இறங்குகிறார். திருவிழாவில் மிகுந்த உற்சாகமும் கொண்டாட்டமுமாக கலந்து கொண்டு ஊர்வலத்தில் ஆட்டம் ஆடுகிறான் ஜாப்யா. ஆனால் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் அவனது தலையில் ஒரு தாங்கு விளக்கை சுமத்திவிடுகிறார் அவனது தந்தை. அவனது கைகால்கள் கட்டப்பட்டது போல அந்த விளக்கை சுமந்து நடக்கிறான் அவன். 

ஒளிவீசும் விளக்கின் அடியில் விழுந்து கிடக்கும் இருட்டுக்குள் ஜாப்யா அழுகிறான். இக்காட்சியில் விக்ரம் அம்லாடியின் கேமரா விளக்கின் மேலிருந்து அவனது முகம் நோக்கி இறங்குகிறது. கொண்டாட்டம் பறிக்கப்பட்ட ஜாப்யாவின் கண்ணீரை, அவனது துக்கத்தை, அவனிடமிருந்து திருடப்படும் குழந்தைமையினை சாதியத்திற்கு எதிராக செயலற்றுக் கிடக்கும் தேசத்தின் நரம்புகளின் மீது வாசித்துச் செல்கிறார் இசையமைப்பாளார் அலோக்நந்தா தாஸ் குப்தா. திருவிழாவின் குதூகல மேள சத்தத்தில் ஜாப்யா அழுவதை யாரும் அறியவில்லை. இப்படி இந்தியா முழுக்க எத்தனையோ ஜாப்யாக்களின் அழுகுரல், அழுகிய அரசியல் திருவிழா சத்தத்தில் நமது காதுகளை எட்டாமலேயே போய்விட்டிருக்கிறன. 

ஜாப்யா, ஷாலுவிடம் தனது அன்பைச் சொல்ல நெருங்கும் போது பள்ளி மைதானத்தில் ஷாலுவின் அருகிலிருந்த அவளது தோழியை ஒரு பன்றி உரசி ஓடுகிறது. ‘அவளை யாரும் தொடாதீர்கள், தீட்டு’ என ஷாலு கேலியாக சிரித்துக் கொண்டே சொல்கிறாள். அவளுக்கு அப்படித் தான் போதிக்கப் பட்டிருக்கிறது. பன்றி உரசியதால் உண்டானதாக கருதப்படும் தீட்டு மாட்டு மூத்திரம் தெளித்து சரி செய்யப்படுகிறது. 

தான் படிக்கும் பள்ளியின் அருகில் சக மாணவர்களின்  முன்னிலையில் அதுவும் தான் விரும்பும் பெண் வேடிக்கை பார்க்க பன்றிகளை துரத்தும் செயலை ஜாப்யா தன் குடும்பத்தோடு செய்ய வேண்டி இருக்கிறது. இதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். ஊரே கூடி ஜாப்யாவின் குடும்பம் பன்றி பிடிப்பதை வேடிக்கை பார்த்து சிரிக்கிறது. அங்கு ஏற்படும் அவமானத்தில் சிக்கித் தவிக்கிறான் ஜாப்யா. ஜாப்யாவின் குடும்பம் சிரமப்பட்டு பன்றிகளை விரட்டிப் பிடிக்கும் காட்சியை சர்க்கஸ் பார்ப்பது போல நின்று ரசிக்கிறார்கள் ஊர் மக்கள். ஜாப்யாவின் சாதி குறித்த வசைகளையும் கிண்டல்களையும் குதூகலத்துடன் எறிகிறார்கள் ஊரார். 

அப்போது பள்ளியிலிருந்து தேசிய கீதம் ஒலிக்கும் சத்தம் கேட்கிறது. சாதிய வசை பாடியோர், ஜாப்யாவின் குடும்பம் என அனைவரும் நேராக நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துகிறார்கள். தேசப் பண் முடிந்ததும், சாதிய வார்த்தைச் சாடல்களுடன் பன்றி பிடிக்கும் படலம் தொடர்கிறது. சாதியால் தலைகுனிந்திருக்கும் நாடு தேசிய கீதத்திற்கு நிமிர்ந்து நிற்பதால் மட்டும் கவுரவம் பெற்றுவிடப் போவதில்லை என இக்காட்சியின் மூலம் சொல்கிறார் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க இயலாமல் கேலி செய்கிறவர்களை மிகுந்த ஆக்ரோஷத்தோடு ஜாப்யா தாக்கத் துவங்குகிறான், அவன் எறியும் ஒரு கல் திரையை கிழித்துக்கொண்டு பார்வையாளனின் அகத்தில் வந்து விழுகிறது. 

மும்பை சர்வதேச திரைப்பட விழா, புனே சர்வதேச திரைப்பட விழா, இண்டர் நேஷனல் பெடரேஷன் ஆஃப் பிலிம் கிரிடிக்ஸ் விருது, சிறந்த இந்திய திரைப்படத்துக்கான லாஸ் ஏஞ்சல்ஸ் விருது, ரீல் ஆசியன் விருது என பல சர்வதேச விருதுகளையும் இந்திய அரசின் தேசிய விருதையும் பெற்ற இத் திரைப்படத்தில் ஜாப்யாவின் அப்பாவாக நடித்திருப்பவரைத் தவிர பலரும் தொழில் முறை நடிகர்கள் இல்லை. இயக்குனர் ‘நாகராஜ் மஞ்சுளே’வின் முதல் முழு நீள திரைப்படம் இது, என்றாலும் இதற்கு முன் தனது குறும்படத்திற்காகவும் கவிதைகளுக்காகவும் பரவலாக கவனம் பெற்றவர் அவர். இப்படத்திற்கு பிறகு நாகராஜ் மஞ்சுளே இயக்கிய சாய்ராட் திரைப்படம் ஆணவக் கொலையினை மைய கருத்தாகக் கொண்டு களமாடியது.

தலித் மக்களின் வாழ்வியலையும் அவர்கள் மீதான அடக்கு முறைகளையும் ஒரு சிறிய குடும்பத்தை முன் வைத்து இப்படம் பேசுகிறது என குறுகிய வட்டத்துக்குள் இச்சித்திரத்தை அடைத்து விட முடியாது. இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இசைக்கருவிகள் உட்பட பல விசயங்கள் ஃபான்றியை முழுமையான தலித் வாழ்வியல் கலைப் படைப்பாக மாற்றியிருக்கிறது., அவர்களின் வாழ்வியல் முறையினை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. சாதிய நிறம் படிந்த சமகால இந்தியாவின் ஆவணமாக ஜாப்யா இருக்கிறான். ஒரு பானை இந்தியாவுக்கு ஒரு சிறுவன் ஜாப்யா பதம் என்பது போல ஜாப்யாவை முன்னிறுத்தி மொத்த தேசத்தின் சாதித் தோலினை உரித்து நறுக்கென அம்பலப்படுத்துகிறது ஃபான்றி.