சினிமா

கொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்

கொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்

Sinekadhara


கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் பாதியிலேயே நின்றுபோயின. அதனால் பலரும் பொருளாதார பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது பல தொழில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், வேலையிழந்த பலர் சுயதொழிலில் இறங்கியுள்ளனர்.

ஹிந்தியில் மிகவும் பிரபலமான டிவி சீரியல் பாலிகா வாது. இந்த சீரியலின் இயக்குநர் ராம் விருக்‌ஷா கவுர், உத்தரபிரதேச மாநிலம் அசாம்காரில் தற்போது காய்கறி விற்பனை செய்துகொண்டிருக்கிறார் என ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுபற்றி கவுர் கூறுகையில், ’’நாங்கள் அசாம்காருக்கு ஒரு திரைக்கதைப் பற்றி கலந்தாலோசிக்க வந்தோம். திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. மும்பைக்கு திரும்பிச் செல்லவும் முடியவில்லை. நாங்கள் ஏற்கெனவே வேலைசெய்துகொண்டிருந்த படப்பிடிப்பு இந்த ஆண்டு நடைபெறாது, மீண்டும் தொடங்க ஒரு ஆண்டுக்கும் மேலாகும் என தயாரிப்பாளரும் தெரிவித்துவிட்டார். எனவே நான் எனது அப்பாவின் தொழிலான காய்கறி விற்பனையை செய்யலாம் என முடிவெடுத்துவிட்டேன். இந்த தொழிலில் எனக்கு கொஞ்சம் அனுபவமிருக்கிறது. இந்த தொழிலை செய்வதற்கு நான் வருத்தப்படவில்லை’’ என செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், மும்பையில் தனது அனுபவத்தைப் பற்றிக் கூறுகையில், ‘’நான் 2002ஆம் ஆண்டு எனது நண்பர் மற்றும் எழுத்தாளர் ஷனாவாஸ்கான் உதவியுடன் மும்பைக்குச் சென்றேன். முதலில் லைட்டிங் துறையில் வேலைபார்த்தேன். பிறகு டிவி நிகழ்ச்சிகளில் தயாரிப்புப் பிரிவில் இருந்தேன். பிறகு சில சீரியல்களில் துணை இயக்குநராக வேலைபார்த்தேன். அதன்பிறகுதான் ‘’பாலிகா வாது’’ சீரியலில் எபிசோட் மற்றும் யூனிட் இயக்குநராக பணியாற்றினேன்’’ என அவர் கூறியுள்ளார்.

சீரியல் தவிர, திரைப்பட இயக்குநர்கள் யாஷ்பல் ஷர்மா, மிலிண்ட் குணாஜி, ராஜ்பால் யாதவ், ரன்தீப் கூடா மற்றும் சுனியெல் ஷெட்டி போன்றோருடன் துணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.