மலையாள மொழி திரைப்படங்கள் ஏன் ரூ.200 கோடி, ரூ.300 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் பற்றி கவலைப்படுவதில்லை என்பது குறித்து முன்னணி நடிகர் ஃபஹத் ஃபாசில் விரிவாக பேசியுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வியாழக்கிழமை வெளியாகும் திரைப்படம் 'மாலிக்'. உண்மைக்கதை ஒன்றை மையமாக வைத்து அரசியல் த்ரில்லராக தயாராகியுள்ள இந்தப் படம் தியேட்டர் ரிலீசாக இல்லாமல் நெட்ஃபிளிக்ஸ்அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே, 'பாலிவுட் லைஃப்' இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள ஃபகத் ஃபாசில், மற்ற இந்திய மொழி திரைப்படங்களை போல மலையாள மொழி திரைப்படங்கள் ஏன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் பற்றி மெனக்கெடுவதில்லை என்பது குறித்து பேசியிருக்கிறார்.
"ஒரு திரைப்படம்தான் அதன் பயணத்தை தீர்மானிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். எந்த அளவுக்கு பார்வையாளர்கள் படத்தை ரசிக்கிறார்கள் என்பதை ஒரு திரைப்படம்தான் தீர்மானிக்கும். அந்தப் படத்தின் படைப்பாளிகள் கூட அதை தீர்மானிக்க முடியாது.
இந்தப் படம் இவ்வளவு தூரம் செல்லப்போகிறது என ஒரு நடிகராக நானோ அல்லது அந்தப் படத்தின் இயக்குநரோ அல்லது தொழில்நுட்ப வல்லுநர்களோ படப்பிடிப்பின் முதல் நாளிலேயே தீர்மானிக்க முடியும் என நினைக்கவில்லை.
ஒரு திரைப்படம் என்பது ஒரு பயணம். நாம் ஒரு படத்தை தயாரித்து முடிக்கும்போது அதில் கற்றுக்கொண்ட, கண்டுபிடித்த பல விஷயங்கள் இருக்கும். அதுதான் உண்மையில் அழகான பயணமாக விஷயமாக இருக்கும். நீங்கள் ஒரு படம் செய்து, அதை வெளியே விடவேண்டும். அது எந்த எல்லைக்கு செல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.
இதேபோல் 'மாலிக்' பட இயக்குநர் மகேஷ் நாராயணன் இந்த விஷயம் தொடர்பாக பேசுகையில், "இப்போது வரை, எனது தயாரிப்பாளர்கள் யாரும் 200 கோடி, 300 கோடி பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இனியும் மலையாள சினிமா அப்படி செயல்படாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நாங்கள் தொடர்ந்து புதிய எண்ணங்களோடு புதிய விஷயங்களோடு திரைப்படங்களை எடுத்து வருகிறோம். ஏனென்றால் இதற்கு முன் காணப்படாத அல்லது செய்யப்படாத விஷயங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறோம். அதைத்தான் நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம். எனவேதான் ஒரு படம் எவ்வளவு வசூலிக்கும் என்பதைப் பற்றி ஒருபோதும் நாங்கள் நினைப்பதில்லை" என்று கூறியிருக்கிறார்.
கொரோனா காரணமாக போடபட்ட லாக்டவுனில் ஃபஹத் ஃபாசிலின் நான்காவது படமாக ஓடிடி தளத்தில் நாளை மறுநாள் வெளியாகிறது 'மாலிக்'. இந்தப் படத்தில் 20 வயது, 57 வயது என இரு வேறு வயதுடைய ஆளாக ஃபஹத் நடித்துள்ளார். இரு வேறு காலகட்டமாக உருவாகும் இந்தத் திரைப்படத்துக்காக ஃபஹத் 10 கிலோவுக்கும் அதிகமாக உடல் எடையை குறைத்துள்ளார். மெலிந்து போய் அடையாளமே தெரியாத அளவுக்கு ஃபஹத் மாறியிருந்தார். சில ஆண்டுகள் முன் மலையாளத்தில் 'டேக் ஆஃப்' திரைப்படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் 'மாலிக்' திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.