`மஞ்ஞுமல் பாய்ஸ்’ குட்டனாக, இப்போது கேரளாவைத் தாண்டி, தமிழ்நாட்டின் பல நகரங்கள் வரை சென்று சேர்ந்திருக்கிறார் சௌபின் சாஹிர். சினிமாவில் இந்த உயரத்தை எட்டியிருக்கும் சௌபின் சினிமா பயணமும், மெல்ல மெல்ல அவருக்கு கிடைத்த அங்கீகாரமும் சுவாரஸ்யமானவை.
சௌபினுக்கு சினிமா ஆசை வர வெளியிருந்து பெரிய காரணங்கள் ஒன்றும் தேவை இல்லை. காரணம் அவரது தந்தை பாபு சாஹிர் சினிமாவில் உதவி இயக்குநர் மற்றும் புரொடக்ஷன் கண்ட்ரோலர்.
பாசிலின் `Manichithrathazhu’, சித்திக் - லாலின் `Godfather’, `In Harihar Nagar’ போன்ற படங்களில் பணியாற்றினார். இந்தப் பரிட்சயத்தால் `Vietnam Colony', `Pappayude Swantham Appoos', `Kabooliwala' சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார் சௌபின்.
+12 பரிட்சைகள் முடிந்த சமயத்தில், தன் தந்தை பணியாற்றிய `Kaiyethum Doorath' படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கிறேன் என கேட்க சரி என அவரும் அழைத்துச் சென்றிருக்கிறார். படத்தின் இயக்குநர் பாசில், ஹீரோவாக தனது மகன் ஃபகத் பாசிலை அப்படத்தில் அறிமுகப்படுத்தினார். `Kaiyethum Doorath' படத்தின் ஷூட்டிங் தளமான கொடைக்கானலுக்கு, படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்ற சௌபின், மெல்ல மெல்ல படப்பிடிப்பு தளத்தில் பொறுப்பாக வேலைகளை எடுத்து செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
படத்தில் முகம் காட்டாத ஒரு ரோலிலும் நடித்து, தானே எதிர்பார்க்காத வகையில் நடிப்பு பயணத்தை ஃபஹத்துடன் துவங்கினார்.
ஆனால் உண்மையில் சௌபினுக்குள் இருந்தது இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆர்வம். அப்பா பாபுவிடம் தான் ஒரு உதவி இயக்குநராக சேர வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவிக்க, சௌபினை இயக்குநர் சித்திக்கிடம் உதவி இயக்குநராக சேர்த்து விடுகிறார். உதவி இயக்குநராக சௌபினுக்கு முதல் படமே மம்மூட்டி நடிப்பில் உருவான `Chronic Bachelor’ (தமிழில் `எங்கள் அண்ணா’ என ரீமேக் ஆனது).
இப்படத்தில் மம்மூட்டி - சௌபின் இடையே நடந்த நிகழ்வும் குறிப்பிட வேண்டியது. `Chronic Bachelor’ ஷூட்டிங் நடக்கும் துவங்கிய போது கல்லூரி முதலாமாண்டு சேர்ந்திருந்தார் சௌபின். சில தினங்கள் கழித்து மம்மூட்டி படப்பிடிப்பில் இணையும் போது, ஷாட் ரெடி என சொல்ல மம்மூட்டியிடம் சென்றிருக்கிறார் சௌபின்.
சின்ன பையனாக இருந்த சௌபினிடம்,
மம்மூட்டி: “நீ என்ன பண்ற?”
சௌபின்: “நான் அசிஸ்டென்ட் டைரக்டர் சார்”
மும்மூட்டி: “அட அதில்லப்பா என்ன படிக்கிற?”
சௌபின்: ”காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்”
“சரி நீ கிளம்பு, படிச்சு முடிச்சிட்டு சினிமாவுக்கு வந்தா போதும்” என்றிருக்கிறார் மம்மூட்டி.
பதறிப்போன சௌபின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த தன் தந்தை பாபுவிடம் விஷயத்தை கூற, அவர் மம்மூட்டியிடம் சென்று “இவன் என் கடைசி பையன், படிப்புல அவனுக்குப் பெரிய விருப்பமில்ல. சினிமாலதான் ஆர்வமா இருக்கான்” என சமாதானம் செய்ய,
அதைக் கேட்ட மம்மூட்டி ”எல்லாம் சரிதான். ஆனா படிப்ப விட்றாத. படிப்பு முடியுற சமயத்தில கேட்பேன். நீ டிகிரி முடிச்சிருக்கணும்” என செல்லமாக வார்னிங் கொடுத்திருக்கிறார் மம்மூட்டி. இதை சில பேட்டிகளில் நினைவுகூர்ந்திருப்பார் சௌபின். அப்படித் தொடங்கிய அவரது பயணத்தில் பாசில், சித்திக், ராஃபி, சந்தோஷ் சிவன், ராஜீவ் ரவி என பல இயக்குநர்களின் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
குழந்தை பருவத்திலேயே கேமிரா முன் நின்ற சௌபினை கவனிக்கத் தக்க நடிகராக மாற்றியது ராஜீவ் ரவி இயக்கத்தில் உருவான Annayum Rasoolum. ஃபஹத் நடித்த முதல் படத்தின் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கப் போன சௌபின் இப்போது, அதே ஃபஹத் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இயக்குநர் ராஜீவின் வற்புறுத்தலின் பேரில் நடிப்பைத் துவங்கிய சௌபின், அதன்பின் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்த்திருக்க மாட்டார். அதற்கு வழி செய்து கொடுத்தது இரு படங்கள்.
ஒன்று அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் உருவான `Premam’. படம் முழுக்க ஆங்காங்கே வந்து PET மாஸ்டராக சிரிக்க வைத்திருப்பார். இரண்டாவது திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடித்த `Maheshinte Prathikaaram'. ஃப்லெக்ஸ் போர்டு கடையில் போட்டோஷாப் செய்யும் க்றிஸ்பின் கதாப்பாத்திரம். சிறிய வேடம் என்றாலும், படத்தில் சௌபின் பாடிய ஜூஸ் ஜூஸ் மிகப் பிரபலம். மேலும் ஒரு எமோஷனலான தருணத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
தொடர்ந்து ஹீரோ ஃப்ரெண்டு, காமெடி ரோல் எனப் பிரயாணித்த சௌபின் உள்ளே ஒரு பிரம்மாதமான நடிகனின் இருப்பை வெளிக் கொண்டு வந்தது. 2018ல் அவர் லீட் ரோலில் நடித்து ஸக்ரியா இயக்கத்தில் வெளியான `Sudani from Nigeria'. ஆப்பிரிக்க கால்பந்து விளையாட்டு வீரருக்கும், லோக்கல் க்ளப் மேனேஜருக்கும் இடையிலான கதை.
படம் முழுக்க காமெடியாக நகர்ந்தாலும், கால்பந்து வீரர் சாமுவேலை வழியனுப்பும் போதும், தந்தையை வீட்டுக்கும் அழைத்து வரும் காட்சியின் போதும் பீரிட்டு வரும் அழுகையை யாராலும் அடக்க முடியாது.
சௌபினின் இந்த அழுத்தமான நடிப்புக்கு, சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருது உட்பட பல விருதுகள் கிடைத்தது.
2019 மலையாளத் திரையுலகில் முழுக்கவே சௌபினின் ஆண்டுதான். உடைந்து போன குடும்பத்தின் ஒரு தலைமகனாக, குற்றவுணர்வில் டாக்டரின் தோளில் சரிந்து அழும் சஜியாக `Kumbalangi Nights'. நிபா வைரஸின் தீவிரத்தைக் காட்டும் உன்னி கிருஷ்ணனாக `Virus', மனதளவில் குழந்தையாக இருந்த போதும், தன் காதலை காப்பாற்ற வெகுளித்தனமாக போராடும் அம்பிலியாக `Ambili', விளையாட்டாக ஒரு வீடியோ எடுக்கப்போய் அதன் விளைவுகளை சந்திக்கும் சமீராக `Vikruthi', தன்னுடைய வெற்றிடத்தை நிரப்ப தன் தந்தைக்கு ரோபோவைக் கொடுக்கும் சுப்ரமணியாக `Android Kunjappan Version 5.25' என வித விதமாக கதாப்பாத்திரங்களில் திரையை அலங்கரித்தார்.
தொடர்ச்சியாக பல தரப்பட்ட கதாப்பாத்திரங்களில் அசத்தினார் சௌபின். சென்ற வருட பிப்ரவரியில் அவர் லீட் ரோலில் நடித்து வெளியான `Romancham' திகிலும், காமெடியும் கலந்த பெரிய ஹிட். இதோ இந்த பிப்ரவரியைப் பார்த்தால், `Manjummel Boys'. கொண்டாட்டமாக பயணத்திற்கு கிளம்பு, நண்பனைக் காப்பாற்றப் போராடும் ஒரு கதாப்பாத்திரம். அதிலும் நம்மைக் கவர்ந்து அசத்தியிருக்கிறார்.
உதவி இயக்குநராக துவங்கிய பயணம் நடிப்பு நோக்கி திரும்பினாலும் சௌபின் உள்ளே இருந்த இயக்குநரை 2017ல் வெளியான `Parava' மூலம் காட்டினார். அதே படத்தில் ஒரு கொடூரமான வில்லனாகவும் நடித்து அசத்தினார். இயக்குநர் ஆக வேண்டும் என்ற சௌபினின் கனவு நிறைவேறி இருந்தாலும், ஒரு வகையில் இது சௌபின் தந்தை பாபு சாஹிரின் கனவு.
சௌபினின் தந்தை, பல படங்களில் புரொடக்ஷன் கன்ட்ரோலர் என்றாலும், பல இயக்குநர்கள் பழக்கம் என்றாலும் தான் ஒரு படத்தை சொந்தமாக இயக்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். அவரது ஆசையை மகன் சௌபின் நிஜமாக்கி காட்டினார். அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் `Othiram Kadakam’ படத்தை இயக்குவதாக அறிவித்தார். அந்தப் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
“என் தந்தை, ஒவ்வொரு படம் முடிந்து வீட்டுக்கு வரும் போதும், எல்லோரையும் பயணத்திற்கு அழைத்துக் கொண்டு செல்வார். அப்படி ஒரு முறை கிஷ்கிந்தா சென்ற போது, நான் ஆடிய ஆட்டமும், அதற்கு கிடைத்த பரிசையும் பார்த்த பின்பு, எனக்குள் கலை ஆர்வம் இருப்பது, என் தந்தைக்கு புரிந்திருக்ககூடும்” என ஒரு பேட்டியில் நகைச்சுவையாகக் கூறினார் சௌபின்.
இப்போது ஒரு நடிகனாக நீங்கள் போடும் ஆட்டம் உண்மையில் நீங்கள் யார் எனப் பலருக்கும் உணர்த்தியிருக்கிறது சௌபின்.