செய்தியாளர் - புனிதா பாலாஜி
தமிழக ரசிகர்களின் மனதை எல்லாம் கொள்ளை அடித்திருக்கிறது, மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம். இதில் கமல்ஹாசனின் குணா படமும், அதில் காண்பிக்கப்படும் குகையையும் மட்டுமின்றி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மீதும் கவனம் குவிந்துள்ளது. அவர்தான், குட்டன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷௌபின் ஷாகிர்.
இவர், மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். இவரை சட்டென நினைவில் கொண்டுவர வேண்டுமென்றால், சாய் பல்லவி நடித்த பிரேமம் படத்தை நினைவு கூறவேண்டும். முகத்தில் பாவனையே இல்லாத நடிப்பின் மூலம் பார்ப்பவர்களை எல்லாம் ரசிக்க வைத்திருப்பார், ஷௌபின் ஷாகிர்.
மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில், உயிருக்கு போராடும் நண்பனை காப்பாற்ற மன உறுதியோடு குழிக்குள் இறங்கும் முக்கிய கதாபாத்திரம் இவருடையது. அதை அத்தனை சிறப்பாக செய்திருக்கும் ஷௌபினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நிறைய சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவர், மலையாள சினிமாவின் முக்கிய கலைஞராக உருவெடுத்த நிகழ்வு சுவாரஸ்யமானது. மோகன்லாலின் நடிப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான வியட்நாம் காலனி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன்பின் சில படங்களில், சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், அவருக்கு உரிய அடையாளம் கிடைக்கவில்லை. பின்னர், உதவி இயக்குநராக சினிமா பயணத்தை தொடங்கியவருக்கு, ராஜீவ் ரவியின் அன்னையும் ரசூலும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் COLLIN எனும் கதாபாத்திரத்தை ஏற்றார் ஷௌபின். அது அவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பின் வித்யாசமான கதாபாத்திரங்கள் அவரைத் தேடி வந்தன. துல்கர் சல்மானின் கம்மட்டிப்பாடம் படத்தில் கோபக்கார கராத்தே மாஸ்டர், ஃபஹத் ஃபாசிலின் கும்பளாங்கி நைட்ஸ் படத்தில் பாசக்கார அண்ணன் என வித்யாசமான கதாபாத்திரங்களில் கவனம் பெறத் தொடங்கினார். இதில் 2018ஆம் ஆண்டு வெளியான SOODANI FROM NIGERIA, இருள் என முக்கிய படங்களில் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்றார், ஷௌபின்.
நடிகராக மட்டுமின்றி இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். பரவா என்ற திரைப்படத்தை துல்கர் சல்மானை வைத்து இயக்கியுள்ளார்.
குழந்தை நட்சத்திரம், நடிகர், இயக்குநர் என சினிமாவின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தவர், மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அது அவருக்கு கேரளாவில் மட்டுமின்றி, தமிழகத்திலும் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது கூடுதல் சுவாரஸ்யம்!