சினிமா

'எதற்கும் துணிந்தவன்' விமர்சனம்: மகளிர் தினத்தன்றுதானே வெளியிட்டிருக்க வேண்டும் சூர்யா!?

'எதற்கும் துணிந்தவன்' விமர்சனம்: மகளிர் தினத்தன்றுதானே வெளியிட்டிருக்க வேண்டும் சூர்யா!?

sharpana

ஆஸ்கர் வரை சென்ற ‘ஜெய்பீம்’ படம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையால் மிரட்டல்கள், உருட்டல்கள் வந்தபோதும் எதற்கும் அஞ்சாமல் தியேட்டர்களில் துணிந்து வெளியாகியிருக்கிறது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’.

’காப்பான்’ படத்திற்குப்பிறகு சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’, ‘நவரசா’, ‘ஜெய் பீம்’ படங்கள் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் ஆகின. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தியேட்டர்களில் நுழைந்திருக்கும் படம், ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்குப்பிறகு இரண்டரை ஆண்டுகள் கழித்து வெளியாகும் பாண்டிராஜ் படம், சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடனும் எதிர்ப்புகளுடனும் வெளியாகியிருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ பார்த்த பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?

ஒன்லைன்:

அந்தரங்க வீடியோக்களை எடுத்து ப்ளாக்மெயில் செய்யும் பாலியல் கொடூரன்களை, பெண்கள் ’எதற்கும் துணிந்து’ எப்படி எதிர்கொள்வது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

மார்ச்-8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று ரிலீஸ் ஆகியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். அந்தளவுக்கு மகளிருக்கான ‘வலிமை’ அப்டேட்டுகளை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறது ’எதற்கும் துணிந்தவன்’.  படத்தின் தலைப்பையும்கூட ‘எதற்கும் துணிந்தவள்’ என்றே வைத்திருக்கலாம்.

படத்தின் ஆரம்பக்காட்சிகளில் தென்னாடு, வடநாடு என இரண்டு பகுதிகள் உள்ளன. தென்னாட்டில் வழக்கறிஞர் கண்ணபிரானாக சூர்யா. வடநாட்டில் அமைச்சரின் மகன் இன்பாவாக வினய். இளம்பெண்களை காதல் என்கிற பெயரில் நண்பர்கள் மூலம் வீழ்த்தி, அவர்களுக்கு தெரியாமல் அந்தரங்கமாக வீடியோ எடுத்து ப்ளாக்மெயில் செய்து பாலியல் ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் பயன்படுத்திக்கொள்ளும் கொடூரனாக நடித்துள்ளார் வினய்.  ‘அண்ணா அடிக்காதீங்கண்ணா ப்ளீஸ்ண்ணா’ என்று இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்து, இந்தியாவையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை மையப்படுத்திதான் திரைக்கதை துணிந்து செல்கிறது.

‘ஜெய்பீம்’ படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக கருப்பு கோட் அணிந்து சட்டப்போரோட்டம் நடத்திய சூர்யா, இந்தப் படத்தில் வழக்கறிஞர் கண்ணபிரானாக மீண்டும் கருப்பு கோட் அணிந்துள்ளார். ஆனால்…கருப்பு கோட்டுடன் சட்டப்போராட்டத்தைத் தொடர்கிறாரா என்பதுதான் ட்விஸ்ட்.

காதல் காட்சிகளில் சூர்யா சுண்டியிழுக்கிறார். பாதிக்கப்படும் பெண்களுக்காக களத்தில் இறங்கும்போது திடீரென்று பொறுப்புள்ள அண்ணனாகிவிடுகிறார். எந்த இடத்திலாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டால் உடனடியாக தமிழக அரசின் ‘காவலன்- ஆப்’ செல்ஃபோனில் டவுன்லோடு செய்து, உங்கள் குடும்பத்தினருக்கும் காவல்துறைக்கும் தெரியப்படுத்தலாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்.

ஆரம்பத்தில் 20 நிமிடங்கள் இயக்குநர் பாண்டிராஜ் தனது வழக்கமான படங்களைப் போலவே டீட்டெய்ல்ஸ் கொடுத்து ‘நம்பள எங்க கூட்டிக்கிட்டு போறாருன்னு தெரியலையே’ என்று குழப்பமாகி பார்த்துக்கொண்டிருக்கும்போது… சில நிமிடங்களில் ’கன் பாயிண்ட்’போல் சரியான திசையை நோக்கி கூட்டிச் சென்றுவிடுகிறார். அதற்குப்பிறகு, என்ன ஆகுமோ ஏதாகுமோ என்கிற பதைபதைப்பான திரைக்கதையை அமைத்து நம்மை திகிலூட்டுகிறார்.

அமைச்சரின் மகனாக வரும் வினய், திடீர் திடீரென்று விபத்துக்குள்ளாகும் மாணவிகளின் காட்சிகள் அப்படியே பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தையும் அதற்குபின்னால் நடந்த விபத்துகளையும் நினைவுவூட்டி கண்கலங்க வைக்கின்றன. அதேபோல, பாலியல் வக்கிர ஆசிரியராக வரும் சுப்பு பஞ்சு அருணாச்சலம் சமீபத்தில் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்களை நினைவூட்டுகிறார். ”அண்ணா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று சூர்யாவை தனியாக அழைத்து சென்று தகவல் கொடுக்கும் பெண் போலீஸ் கான்ஸ்டபிள், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரும் போலீஸாரால் அடித்து லாக்-அப் படுகொலை செய்யப்பட்டபோது, தைரியமாக சாட்சியம் அளித்த பெண் போலீஸ் ரேவதியை நினைவூட்டுகிறார். இப்படி கதையில் வரும் ஒவ்வொரு காதாப்பாத்திரங்களும் நாம் உண்மைச் சம்பவங்களில் படித்த, பார்த்தவர்களை பிரதிபலிக்கிறது.

சூரி, ராமர், தங்கதுரை, புகழ் என காமெடிக்காக பலர் களமிறக்கப்பட்டாலும் பார்வையாளர்களை கல கலப்பூட்டியிருப்பது சரண்யாவும் தேவதர்ஷினியும்தான். இவர்களது நகைச்சுவைக்கு இன்னும் சுவை கூட்டுகிறார்கள் சத்யராஜும் இளவரசுவும்.

’நம்ப புள்ளைய திட்டாதீங்க’ என்று அப்பாக்களிடம் சப்போர்ட் செய்து உரிமைச் சண்டை போடுவதாகட்டும், மகனின் காதல் என்றாலும் இட்ஸ் ஓகே சொல்லிவிட்டு ’நான் இருக்கேண்டா உனக்கு’ என்று தோள்கொடுத்து துணை நிற்பதாகட்டும், வருங்கால மருமகளை இன்முகத்தோடு புன்சிரிப்போடு ரசித்து வரவேற்பாகத்தாட்டும் வழக்கமான சரண்யாவாக இருந்தாலும் இப்படியொரு அம்மா கிடைக்கம்மாட்டாரா? என ஒவ்வொரு படத்திலும் ஏங்கவைக்கும் அதே காதாப்பாத்திரத்தை ஏந்தி நிற்கும் அம்மாவாக இதிலும் ரசிக்கவைக்கிறார். ’கேர்ள் பெஸ்டி, பாய் பெஸ்டி’ போல் கதாநாயகர்களுக்கு ‘தாய் பெஸ்டி’ என்றால் அது சரண்யா பொன்வண்ணன்தான். பெத்த தாய்களையே பொறாமைப்படவைக்கும் கதாநாயகர்களின் தாயாக அன்பையும் அரவணைப்பையும் போட்டி போட்டுக்கொண்டு பொழியும் சரண்யாவின் கதாப்பாத்திரம், இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலைகளையும் செய்ய முயற்சித்திருக்கிறது.

’எதற்கும் துணிந்தவளாக’ உருவாக்கப்பட்டிருக்கிறது பிரியங்கா மோகனின் கதாபாத்திரம். காதல் காட்சிகளில் கலர்ஃபுல் ’கதகளி’ ஆடி பார்வையாளர்களுக்கு ‘பிரியம்’க்கா ஆகிவிடுகிறார். ‘டாக்டர்’ படத்தில் “அழகா இருக்கிறப் பொண்ணுங்க லூசா இருப்பாங்க” என்ற வசனம் கொஞ்சம் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நாயகி பிரியங்காவை ”பொண்ணுக்கு அழகு தைரியமும் தன்னம்பிக்கையும்தான்” என்று பேச வைத்து சமூக சீர்த்திருத்த ‘டாக்டராகி’ இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். பொதுவாக நாயகிகளிடம் நகைச்சுவை என்னும் நவரசத்தை பெரும்பாலான இயக்குநர்கள் வெளிக்கொண்டு வருவதில்லை. ஆனால், பிரியங்காவிடம் நகைச்சுவை, கோபம், அழுகை என பல ரசங்களை வெளிக்கொண்டுவந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

அதுவும் படத்தில் நாயகியை கடத்தப்போகும் காட்சியில் செம்ம ட்விஸ்ட் அடிக்கிறார் சூர்யா. எப்படி கடத்தப்போகிறார் என்று பார்த்துக்கொண்டிருக்கும்போது இப்படி நடக்கும் என்பது யூகிக்கமுடியாத சுவாரஸ்யம். குறிப்பாக, குடும்பத்தோடு ப்ளான் செய்யும்போது, வேர்ல்டு லெவல் ப்ளான் போடும் ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸின் பி.ஜி.எம் ஒலிப்பது வேற லெவல்.



வில்லன் வினய் காட்சிகள் டைம் லூப் காட்சி போல, ஒர்ர்ர்ரே லொகேஷனில் திரும்பத் திரும்ப ரிப்பீட் அடிப்பது கொஞ்சம் போர். அவரே சொந்தக் குரலில் பேசி நடித்திருப்பது பாராட்டுக்குரியது என்றாலும் தமிழ்நாட்டிலுள்ள வடநாடு என்னும் ஊரிலிருந்து பேசுவதுபோல் அல்லாமல், இந்தியாவின் வடநாட்டிலிருந்து வடநாட்டுக்காரரே பேசுவதுபோல் உள்ளது.

இமான் பின்னணி இசை பல்வேறு பட ஆல்பங்களின் இசையை மின்னல் வேகத்தில் நினைவூட்டினாலும் ‘உள்ளம் உருதைய்யா உன்ன உத்து உத்து பார்க்கயில’ பாடலில் உள்ளத்தை உருக வைக்கிறார். ஆடியோ வெளியானபோது இப்பாடலை ரசிக்காதவர்களைக்கூட படத்தில் ரசிக்க வைத்து படம் முடிந்தப் பின்னர் யூடியூப் சென்று சர்ச் பண்ண வைக்கும். ஒளிப்பதிவாளர் ரத்ன ‘வேல்’, முருகராக நடித்திருக்கும் சூர்யாவையும் பிரமிக்க வைக்கும் பிரம்மாண்ட அரங்கையும் இப்படாலில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். பாடலில் மட்டுமல்ல படத்திலும் அவரது கேமரா ரசிக்க வைக்கிறது.

பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை காவல்துறையும் நீதிமன்றமும் கைவிட்ட நிலையில், வழக்கமான அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிடுகிறார் சூர்யா. எந்த குற்றம் செய்தாலும் அதற்குப் பழிக்குப் பழியாக தூக்கு தண்டனையோ கொலையோ தீர்வாகாது. சமூகத்தின் மனநிலை மாறுவதே தீர்வு என்பது நமக்கு மட்டுமல்ல இயக்குநருக்கும் தெரிந்திருக்கிறது. அதனால்தான், “விவரம் தெரிஞ்ச நாளுல இருந்து ஒரு பொண்ணை எப்படி பார்க்கணும், பழகணும்னு என் மகன் கிட்ட சொல்லி சொல்லி வளர்த்திருக்கேன” என்று சூர்யாவின் தாய் சரண்யா கதாபாத்திரம், “பெண்களுக்கு புத்திமதி சொல்லி வளர்ப்பதைவிட ஆண் குழந்தைகளை வளர்க்கும்போதே எப்படி வளர்க்க வேண்டும் என்று சமூகத்திற்கு அழுத்தமான உண்மையைச் சொல்கிறது.

அதோடு, ”ஆம்பள புள்ளைங்க அழக்கூடாதுன்னு வளர்க்கிறதைவிட பொம்பளைப் பிள்ளைங்களை அழ வைக்கக்கூடாதுன்னு வளங்க சார்” , “பெத்து போடுறவன் எல்லாம் அப்பன் இல்ல, புள்ளையை வளர்க்கத் தெரிஞ்சவன் தான் அப்பன்” என்று சூர்யா பேசும் வசனங்கள் மூலமும் முதலில் ஆண் குழந்தைகளிடம் பெண்களை எப்படி சமமாக நடத்தவேண்டும் என்பதையும் முற்போக்குடன் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் பாண்டிராஜ். படத்தில் எந்த இடத்திலும் பெண்களுக்கு புத்திமதி செய்யவில்லை. மாறாக, சமூகத்திற்கே ‘புத்தி’யுணர்வு ஊட்டியிருக்கிறார். “ஒரு பொண்ணு பாலியல் வன்புணர்வால பாதிக்கப்பட்டா அவ போட்டுக்கிட்டிருந்த ட்ரெஸ் செக்ஸியா இருக்குன்னு சொல்வாங்களே தவிர, பாதிப்பை ஏற்படுத்தினவனை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க”.. “பொண்ணு உடல் ஆபாசம் இல்ல. உன் வக்கிரத்தை விட என் உடல் ஆபாசம் இல்லை”... ”இந்த வீடியோவை எடுத்தவன், ரிலீஸ் பண்ணினவன்தான் வெட்கப்படணும்” என்று படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டி போராடவைக்கிறது. ஆனால், பெண்களின் பேராற்றலை மையப்படுத்திய படத்தில்… சிவகார்த்திகேயன் வரிகளில் ‘சும்மா சுர்ருன்னு பாடலில் “உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான். சிங்கம் போல் ஆட்டம் வெரப்பா இருப்பான்” என்று வரிகள் அமைந்திருப்பது கொஞ்சம் நெருட வைக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு என்றாலே குறிப்பிட்ட சமுதாயத்தினரை டார்கெட் செய்து படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், சாதிய ரீதியாக டார்கெட் செய்யாமல் உண்மைச் சம்பவங்களை துணிச்சலோடு படமாக எடுத்த இயக்குநர் பாண்டிராஜும் எதற்கும் துணிந்தவர்தான். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்கள் மூலம் எளிதில் பழக்கமாகி பெண்களுக்கு வலைவிரிக்கிறார்கள் என்ற அலெர்ட்டையும் செய்திருக்கிறார். பாதிக்கப்படும் பெண்களையே ‘துப்பட்டா போடுங்க தோழி’ ரேஞ்சுக்கு அட்வைஸ் செய்யாமல், பாதிப்பை உண்டாக்குகிறவர்களை ஆட்டம் காணவைத்த பாண்டிராஜுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். பாலியல் கொடூரன்களுக்கு படத்தில் கொடுக்கப்படும் தண்டனை என்பது எமோஷனலாக இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது. காமெடி, ஆக்‌ஷன், சோகம், ட்விஸ்ட் என ஒன்றுகொன்று பின்னிக்கொண்டு செல்வதால் படம் கொஞ்சம்கூட போர் அடிக்காமல் பயணிக்கிறது. ’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு ஒருமுறை அல்ல, குடும்பத்தோடு அனைவரும் பலமுறை துணிந்து செல்லலாம்.

படத்தின் க்ளைமாக்ஸில் “ஊருக்கே ஒரு நல்ல புள்ளையா கொடுத்திருக்க கோசலை” என்று ஒரு குரல் ஓங்கி ஒலிக்கும். உண்மையில் அப்படித்தான் கூக்குரலிடவைக்கிறது ’எதற்கும் துணிந்து’ இப்படிப்பட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சூர்யாவின் பெற்றோர் சிவக்குமார் - லட்சுமியைப் பார்த்து. 

- வினி சர்பனா