நோட்டா படத்தை தெலங்கானாவில் இப்போது ரிலீஸ் செய்யக்கூடாது என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர், தமிழில் அறிமுகமாகும் படம், ’நோட்டா’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். மெஹ்ரின் ஹீரோயின். சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங் கில் உருவாகியுள்ள அரசியல் த்ரில்லர் படமான இது, வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்வதை தேர்தல் ஆணையம் தள்ளி வைக்க வேண்டும் என்று மாநில தணிக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஷ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலை தேர்தல் ஆணையத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்; ’இந்த படத்தின் தலைப்பு, யாருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை என்பதை குறிக்கும் ’நோட்டா’ என்று இருக்கிறது. தெலங்கானாவில் விரை வில் சட்டப்பேரவை நடக்க இருக்கும் நிலையில் இந்தப் படம் வாக்காளர்களை திசைத் திருப்ப வாய்ப்பிருக்கிறது. இதில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டாவுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு. இதனால் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை இந்த படம் தவறாக வழி நடத்தவும், நோட்டோவுக்கு வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. இதனால் இந்தப் படத்தை மாநிலத்தில் தேர்தல் முடியும் வரை ரிலீஸ் செய்யக் கூடாது. படத்தை டிஜிபி, தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளர் மற்றும் சட்ட நிபுணர்கள் சேர்ந்து பார்த்தபின்பே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.