உயிரே, இந்தியன், முதல்வன் படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கேன்சர் நோய்க்கு ஆட்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர். அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த அவர் கேன்சர் நோய்க்கான சிகிச்சையின் போது ஆறு மாத காலம் வரை ஒரு பூட்டிய அறைக்குள் தான் இருந்ததால் கொரோனா கால பேரிடர் சூழலும், ஊரடங்கு நாட்களையும் கடப்பது தனக்கு எளிது என தெரிவித்துள்ளார்.
“நான் என் வாழ்க்கையில் ஏற்கெனவே பல மோசமான புயல்களை எதிர்கொண்டவள். அதோடு ஒப்பிட்டு பார்க்கும்போது உலகம் முழுவதும் நிலவும் கொரோனா சூழல் என்னை பயமுறுத்தவில்லை. கொரோனா காலத்தில் ஏற்படுகின்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க தியான பயிற்சி செய்வதால் அமைதியாகவும், நிம்மதியாகவும் உணர்கிறேன். என் வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளோடு நேரம் செலவிடுகிறேன். பல வருடங்களுக்குப் பிறகு மும்பையில் இப்போது பறவைகளின் கீச்சுகளை கேட்கிறேன். குடும்பத்தாரோடு இணைந்து பொழுதை இனிதாக செலவழிக்கிறேன்” என சொல்லியுள்ளார்.
அதோடு மனிஷா கொய்ராலா இப்போது எழுத்து பணிகளில் ஆர்வம் செலுத்தி வருவதாகவும், அடுத்தடுத்த நாட்களில் அது திரைக்கதையா அல்லது புத்தகமா என்பதை முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.