சினிமா

'த்ரிஷ்யம்' சீன ரீமேக்... திரைக்கதையில் பக்குவமாக கைவத்த இயக்குநர்!

'த்ரிஷ்யம்' சீன ரீமேக்... திரைக்கதையில் பக்குவமாக கைவத்த இயக்குநர்!

நிவேதா ஜெகராஜா

'த்ரிஷ்யம்' படத்தின் சீன ரீமேக் உரிமை தொடர்பாக சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சீன சட்ட திட்டங்களுக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கேரளா மட்டுமல்லாது உலகம் முழுக்க வெளி்யாகி 500 மில்லியன் குவித்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை 'த்ரிஷ்யம்' பெற்றது. அதோடு சீனாவில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற சாதனையும் படைத்தது. 'வூ ஷா' (Wù Shā) எனப் பெயரிடப்பட்ட சீன ரீமேக் (ஆங்கில டைட்டில் Sheep Without a Shepherd) 2019 டிசம்பர் மதம் வெளியானது. சாம் குவா (Sam Quah) என்பவர் இந்த ரீமேக்கை இயக்கியிருந்தார்.

ஐந்து வருடம் கழித்து ரீமேக்கை சாம் குவா எடுக்க காரணம் உள்ளது. மலையாள 'த்ரிஷ்யம்' கதையை அப்படியே எடுக்க விரும்பினார் சாம். ஆனால் அப்படியே எடுப்பதில் சிக்கல் இருந்தது. காரணம், மலையாள த்ரிஷ்யத்தில் மோகன்லால் குடும்பத்தை போலீசார் சித்ரவதை செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். சீனாவில் இப்படி சீன போலீஸ் சித்ரவதை செய்வதுபோல் காண்பிக்க முடியாது. அப்படி காண்பிக்க நினைத்தால் சென்சார் போர்டை தாண்டி வெளியே வராது. சீன சட்டதிட்டங்கள் அப்படி.

இந்த உண்மையை சாம் குவா நண்பர்களும் அவரின் படத்துக்காக பணம் முதலீடு செய்தவர்களும் சொல்ல, நிலைமை உணர்ந்து அப்படியே ரீமேக் செய்யும் கனவை கைவிட்டுவிட்டு, கதையில் சில மாற்றங்கள் செய்தார். அதன்படி, கதை நடக்கும் இடத்தை ஒரு கற்பனை நகரமாக மாற்றிய சாம், நாயகனின் குடும்பத்தை சித்ரவதை செய்யும் காட்சிகளில் சீன போலீஸுக்குப் பதில் வேறு போலீஸை காண்பித்தார். இதேபோல் இறுதிக்காட்சியில் மோகன்லால் மற்றும் அவரின் குடும்பம் நிரபராதிகள் என விடுவிக்கப்படுவார்கள். ஆனால் இந்தக் காட்சியில் மாற்றங்கள் செய்த சாம், நாயகன் சரணடைவது போல் காட்டினார். இந்த மாற்றங்கள் செய்தபின்னரே படம் சீனாவில் வெளியாக முடிந்தது.

மிக குறைந்த பொருட்செலவில் தயாரான சீன ரீமேக், 2019 டிசம்பர் 13 சீனாவில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் காரணமாக இந்தப் படம் 168 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதே தருணத்தில் வெளியாகி சாதனை படைத்திருந்த டோனி யென் நடித்த 'IP Man 4' படத்தின் வசூலை 'த்ரிஷ்யம்' சீன ரீமேக் முறியடித்தது.

இந்த நிலையில்தான் 'த்ரிஷ்யம் 2' படம் இந்த வருடம் பிப்ரவரியில் நேரடியாக ஓடிடியில் வெளியானது. முதல் பாகத்தை போலவே ட்விஸ்ட் நிறைந்த காட்சியமைப்புகளுடன் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தெலுங்கு, இந்தி, கன்னட ரீமேக்குகள் தயாராகி வருகின்றன. இதில் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதற்கிடையே, இதன் சீன ரீமேக் உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு கைமாறியுள்ளது என மலையாள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. முதல் பாகத்தை இயக்கிய சாம் தான், இரண்டாம் பாகத்தையும் சீன சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து எடுக்க இருக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 'த்ரிஷ்யம் 2' இன்னொரு சாதனையை செய்துள்ளது. ஓடிடி பிளாட்பாரத்தில் பிளாக்பஸ்டர் என்பதை நிரூபித்த நிலையில் 'த்ரிஷ்யம் 2' தொலைக்காட்சி பிரீமியரிலும் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் பிரீமியர் ஷோ மோகன்லாலின் பிறந்த நாளான மே 21 அன்று ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்படி, இந்தப் படம் மலையாள மினிஸ்கிரீன் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது படமாக மாறியுள்ளது. முதல் இரண்டு இடங்களில் அதே மோகன்லாலின் 'புலிமுருகன்' படமும், பிரபாஸ் நடித்த 'பாகுபலி' படமும் இடம்பெற்றுள்ளது.