படப்பிடிப்பில் விபத்து நடந்ததாக வெளியான செய்தி குறித்து நடிகர் டாக்டர் ராஜசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
’இதுதாண்டா போலீஸ்’ உட்பட பல படங்களில் நடித்தவர் டாக்டர் ராஜசேகர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் இப்போது கல்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் வர்மா என்பவர் இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் குளு மணாலியில் நடந்து வருகிறது.
அப்போது ஏற்பட்ட விபத்தில் ராஜசேகர் படுகாயம் அடைந்ததாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. புகைப்படத்துடன் வெளியான இந்த செய்தி கண்டு தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில் இதுபற்றி டாக்டர் ராஜசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ‘கடந்த 10 நாட்களுக்கு முன் ’கல்கி’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பின்போது காயம் அடைந்தேன். இருந்தாலும் ஷூட்டிங் நிறுத்தப்படவில்லை. ஏனென்றால் ஏராளமான நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள், ஒரு நாள் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றாலும் கால்ஷீட் பிரச்னை ஏற்படும் என்பதால் தொடர்ந்து ஷூட்டிங் நடந்தது. இப்போது குணமாகி வருகிறேன். இந்நிலை யில் நாங்கள் குடும்பத்துடன் படப்பிடிப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது, வழியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதுகுறித்து அறிந்து ஏராளமானோர் விசாரித்து வருகின்றனர். குறுஞ்செய்திகளும் வருகின்றன. நான் நலமாக உள்ளேன். எப்போதோ நான் விபத்தில் சிக்கிய புகைப்படத்தை இணைத்து இப்போது செய்தி வெளியிட வேண்டாம் என்று மீடியாவிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.