vijay pt web
சினிமா

நெருங்கும் தேதி.. சந்தேகத்தில் லியோ வெற்றி விழா.. பின்னணியில் நடப்பது என்ன?

லியோ வெற்றி விழா தொடர்பாக காவல்துறையினரின் கேள்விகளுக்கு லியோ படக்குழு இன்னும் பதில் அளிக்காத நிலையில் வெற்றி விழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Angeshwar G

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் லியோ. 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலை பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த படத்திற்கான வெற்றி விழாவை நவம்பர் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இவ்விழாவில் நடிகர் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு கோரியும், விழாவுக்கு அனுமதி கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் கடிதம் அனுப்பியிருந்தார்.

லியோ

இந்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள காவல்துறை, கட்டுப்பாடுகள் விதித்து பல்வேறு கேள்விகளையும் முன்வைத்திருந்தது. விழா எத்தனை மணிக்கு தொடங்கும்? எத்தனை மணிக்கு முடிக்கப்படும்? எத்தனை டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன? முக்கிய விருந்தினர்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ள காவல்துறை, விழாவுக்கு 5 ஆயிரம் பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது.

இந்நிலையில், லியோ பட குழு நிர்வாகம் விழாவிற்கான காவல்துறை கேட்ட விவரங்களை தற்போது வரையும் வழங்கவில்லை என்றும் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையையும் இன்னும் செலுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தற்போது வரை இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்றும் காவல்துறை கேட்ட விளக்கங்களை லியோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் குழு வழங்கிய பிறகே அனுமதி அளிக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், பாதுகாப்பு காரணத்திற்காக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் வெற்றிவிழா நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு, எதிர்மறையான தகவல்கள் வெளிவரும் சூழலில் வெற்றி விழா நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது