சினிமா

காட்சி நேரம் மாற்றமா, முற்றிலும் மூடலா? - திரையரங்க உரிமையாளர்கள் நாளை முடிவு

JustinDurai

கொரோனா இரண்டாம் அலையின் எதிரொலியாக, தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் திரையரங்குகளின் நிலை என்ன என்பது குறித்து அவற்றின் உரிமையாளர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை செய்கின்றனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், திரையரங்குகளுக்கும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய படங்களின் வெளியீடு தள்ளிச் சென்றுள்ளது.

இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை செய்யவுள்ளனர். அதில் திரையரங்குகளில் திரையிடப்படும் நேரங்களை மாற்றி அமைக்கலாமா அல்லது திரையரங்குகளை மூடலாமா என்று ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி நேரம் மாற்றப்பட்டால், மால்களில் உள்ள திரையரங்குகளில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், மதிய காட்சி 12 மற்றும் 3 மணிக்கும், இறுதிக் காட்சி 6 மணிக்கும் திரையிடலாம் என்று ஆலோசிக்கவுள்ளனர் என கூறப்படுகிறது.

அதேபோல் தனி திரையரங்குகள் காலை 10:00 மணிக்கும், மதிய காட்சிகள் 1 மற்றும் 3 மணிக்கும், இறுதிக் காட்சியை இரவு 7 மணிக்கும் திரையிடலாம் என்று ஆலோசிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால், புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றால் திரையரங்கை மூடவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.