தமிழ்நாட்டில் கவனம் ஈர்த்த மலையாள சினிமாக்கள் புதிய தலைமுறை
சினிமா

மலையாள படங்களுக்கு ஓஹோவென ஆதரவு கொடுப்பதன் நிஜ பின்னணி என்ன? தமிழ்ஆடியன்ஸ் மீதான விமர்சனங்கள் சரியா?

தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு மலையாள சினிமாக்களின் மீது இப்படி திடீரென்று மிகையாக பாசம் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுவதில் எத்தனை சதவீதம் உண்மையிருக்கிறது? பார்க்கலாம்.

சுரேஷ் கண்ணன்

விவேக் நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சியில், ஓமனப் பெண்ணின் மீது ஏற்படும் பிரேமையால் ஸ்டேட் மாறி விடுவார். “இனி என்டே மதர் டங் மலையாளம், என்டே ஸ்டேட் கேரளம், என்டே சிஎம் நாயனார், என்டே நடனம் கதகளி” என்று வேட்டி, நம்பூதிரி குடுமி வைத்து ‘சேட்டனாக’ உருமாறி அலப்பறை செய்வார்.

பட்ஜெட் பத்மநாபன் | விவேக் காமெடி

விவேக்கின் அந்த காமெடிக் காட்சி போல தமிழ் சினிமாவின் பார்வையாளர்களும் இப்படி திடீரென கட்சி மாறி விட்டார்களா? 

சமீப காலத்தில் பார்த்தால், தமிழ் சினிமாக்களை விடவும் மலையாள சினிமாக்களுக்கு அதிகமான ஆதரவும் வரவேற்பும் தருகிறார்களா? தமிழில் நல்ல கதையம்சங்கள் உள்ள சிறுமுதலீட்டுப் படங்கள் வெளியாவதில்லையா? அவற்றை கண்டு கொள்ளாமல் மலையாள சினிமாவை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது ஏன்? 

இப்படி சில கேள்விகள் தமிழ் சினிமாவின் இன்னொரு தரப்பு ரசிகர்களிடமிருந்து ஆவேசமாக எழுந்திருக்கின்றன. அதற்கான காரணம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ என்னும் மலையாளத் திரைப்படம் சமீபத்தில் அடைந்திருக்கும் பிரமாண்டமான வெற்றி.

மஞ்ஞுமல் பாய்ஸ்

அது மலையாளப் படமாக இருந்தாலும் கேரளத்தை விடவும் அதிகமான அளவிற்கு தமிழகத்தில் பேயோட்டமாக ஓடி இருநூறு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்திருக்கிறது. இந்த அசாதாரணமான வரவேற்பை சேட்டன்மார்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மலையாள சினிமாவின் வரலாற்றிலேயே 200 கோடி வணிகத்தை முதலில் எட்டிய படம் ‘‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’தான்.  

இந்தத் திரைப்படம் மட்டுமல்லாமல், சமீபத்தில் வெளியான பிரேமலு, பிரம்மயுகம், ஆவேஷம் போன்ற மலையாளத் திரைப்படங்களையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். 

தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு மலையாள சினிமாக்களின் மீது இப்படி திடீரென்று மிகையாக பாசம் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுவதில் எத்தனை சதவீதம் உண்மையிருக்கிறது? மேற்குறித்த விமர்சனங்கள் மற்றும் புகார்கள் சரிதானா?  பார்க்கலாம்.

கலாசாரத் தடைகளை தகர்த்தெறியும் வெற்றிகள்

அண்டை மாநில திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் பிரம்மாண்டமான ஆதரவு தருவது புதிதான விஷயமில்லை. அதற்கென்று ஏதாவதொரு விசேஷமான அம்சம் அடிப்படையான காரணமாக இருந்திருக்கும். 1978-ல் பாலசந்தர் இயக்கத்தில் ‘மரோசரித்ரா’ என்றொரு திரைப்படம் வெளியானது. இது தெலுங்குப் படமாக இருந்தாலும் கூட தமிழர்களுக்கு அதுவொரு பிரச்னையாக இல்லை. சென்னை சபையர் தியேட்டரில் இந்தப் படம் 600 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை புரிந்தது. கோயம்புத்தூர் ராயல் தியேட்டரில் 500 நாட்கள். தமிழ்நாடு முழுக்க அப்போது இதுதான் நிலைமை.

மரோசரித்ரா

ஒரு தமிழ்ப் பையனுக்கும் தெலுங்குப் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் காதலும் அதைத் தொடரும் சிக்கலும்தான் இந்தப் படத்தின் மையம். இதன் டிராஜிடியான முடிவு உருக்கத்தை ஏற்படுத்தியது. ஹீரோவான கமல்ஹாசன் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்தார்.

சரிதா இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். பாலசந்தரின் திறமையான இயக்கம், சுவாரசியமான காட்சிகள், எம்.எஸ்.வியின் அட்டகாசமான பாடல்கள் போன்றவை இந்தப் படத்தின் வெற்றிக்கு பிரதானமாக காரணமாக இருந்தன. அடிப்படையில் இது தெலுங்குப் படமாக இருந்தாலும், தமிழ்ப் பையன் ஹீரோ என்கிற அளவில் தமிழ்ப் பார்வையாளர்கள் தன்னிச்சையான பிணைப்பு கொண்டார்கள். எனவே டப்பிங் செய்யப்படாமலேயே இந்தப் படம் தமிழகத்தில் பெரிய வெற்றியைக் கண்டது. இது போல் சில உதாரணங்களைச் சொல்லலாம். 

மரோசரித்ரா படத்தில் கமல்ஹாசன் - சரிதா

ஆக.. ஏதோவொரு விசேஷமான பிணைப்பு அல்லது பிரத்யேகமான காரணம் அல்லாமல் தமிழ் ரசிகர்கள் ஒரு அயல்மொழி திரைப்படத்தைக் கண்மூடித்தனமாக கொண்டாடுவதில்லை. 

ரசனை மிகுந்த தமிழ் சினிமா பார்வையாளர்கள்

சமீபத்திய 'மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாளத் திரைப்படத்தின் தமிழக வெற்றிக்கும் ஒரு பிரத்யேகமான காரணம் இருக்கிறது. அது இளையராஜாவின் இசை. அந்தப் படத்திற்குள் சுவாரசியமான காட்சிகள், பதைபதைப்பை ஏற்படுத்தும்  சஸ்பென்ஸ், உணர்ச்சிகரமான சித்திரிப்பு போன்ற  நல்ல அம்சங்கள் பல இருந்தாலும் ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல’ என்கிற ‘குணா’ திரைப்படத்தின் பாடலை சரியான இடத்தில் பொருத்திய போது ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று பரவசப்பட்டு கண்ணீர் மல்கியது. அந்தப் பரவசத்திற்கு காரணம் இளையராஜா இசையின் மீது தமிழகம் கொண்டுள்ள பிரத்யேகமான பிரியம்.  எனவே தங்கள் மண்ணின் படமாக கருதி உரிமையோடு கொண்டாடினார்கள் எனலாம்.

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் எந்தவொரு இன  வேற்றுமையையும், பாரபட்சத்தையும்  பார்ப்பதில்லை. சிறந்த படைப்பை எங்கு கண்டாலும் கொண்டாடும் திரை ரசனையைக் கொண்டவர்கள்.

அதனால்தான் பிரேமம், Bangalore Days, ஹிருதயம், லூசிஃபர், 2018 என்று பல மலையாளத் திரைப்படங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடியுள்ளன. இது மட்டுமல்லாமல் பாகுபலி, KGF, RRR, புஷ்பா, காந்தாரா என்று இதர தென்னிந்திய மொழித் திரைப்படங்களும் இங்கு வசூலை வாரிக் குவித்துள்ளன. சுவாரசியமான சினிமாவாக இருக்கிறதா என்பதுதான் தமிழ் சினிமா ரசிகனின் ஒரே அளவுகோல். 

இணையம் ஏற்படுத்தியிருக்கும் திரைப்புரட்சி

முன்பெல்லாம் ஒரு அண்டை மாநில மொழித் திரைப்படம் தமிழில் வருவதென்றால் அதற்கு சில நடைமுறைப் பிரச்னைகள் இருக்கும். கலாசாரப் பிரச்சினைகளைக் கொண்டதாக இருக்கும். அந்தத் திரைப்படம் மோசமான முறையில் டப்பிங் செய்யப்பட்டதாக இருக்கும். மிகக் குறைவான திரையரங்குகள்தான் தமிழகத்தில் கிடைக்கும். மல்டிபெக்ஸ் அரங்குகளில் இரவுக்காட்சிகளில் மட்டும்தான் பார்க்க முடியும். இப்படி சில நடைமுறைச் சிரமங்கள்.

ஆனால் இன்று இணையத்தில் ஏற்பட்டிருக்கும் நுட்பம் சார்ந்த புரட்சி அனைத்தையும் தலைகீழாக  மாற்றியுள்ளது. OTT வழியாக விரும்பிய மொழியின் உரையெழுத்தோடு (subtitle) எந்தவொரு மொழித் திரைப்படத்தையும் விரும்பிய நேரத்தில் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் வசதிகள் பெருகியுள்ளன.

டப்பிங் நுட்பம் கூட அயல் பார்வையாளரை உறுத்தாதவாறு  பன்மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே ‘சிறந்தது’ என்று வாய்மொழியாக புகழப்படும் எந்தவொரு படத்தையும் காணும் வாய்ப்பு சட்டென்று கிடைத்து விடுகிறது. அண்டை மாநிலத் திரைப்படங்களுக்கான வரவேற்பு தமிழகத்தில் பெருகுவதற்கு இந்த அம்சங்களும் காரணமாக இருக்கின்றன. 

சிறந்த படங்களை தொடர்ந்து தரும் மலையாளம்

பொதுவாக இந்தியச் சினிமாவில் ‘ஆர்ட் பிலிம்’ எனப்படும் கலை சார்ந்த திரைப்படங்களை உருவாக்குவதில் மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்கள்தான் பெரும்பாலும் முன்னிலை வகித்துக் கொண்டிருந்தன. இந்த இரண்டு பிரதேசங்களிலும் மிகச்சிறந்த திரையாளுமைகள் உருவாகியிருக்கிறார்கள். இந்தியச் சினிமாவிற்கு சர்வதேச அங்கீகாரம் தந்திருக்கும் படைப்புகளை இயக்கியிருக்கிறார்கள்.

மலையாள சினிமாக்கள்

எனவே மலையாளம் என்றாலே அங்கு உருவாகும் படங்கள் தரமானதாக இருக்கும் என்றொரு பொதுவான மனப்பதிவு நம்மிடம் இருக்கிறது. யதார்த்தத்திற்கு நெருக்கமான கதையம்சம், இயல்பான நடிப்பு, அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகள், இயற்கை பிரதேசங்களின் அழகு  என்று மலையாளத் திரைப்படம் இயங்கும் பாணியானது, சினிமா ரசனை கொண்டவர்களை தன்னிச்சையாக ஈர்க்கும் தன்மை கொண்டது. 

ஆனால் இதர தென்னிந்திய மொழிகளில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் அவற்றில் சினிமாத்தன்மை மிகையாக  இருக்கும். அதிலும் தெலுங்கு சினிமாக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மசாலா சுவை தூக்கலாக இருந்தால்தான் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும். 

மலையாள சினிமாவிலும் இவ்வகையான போக்கு உண்டுதான். ஆனால் சிறப்பான முறையில் உருவாகும் மலையாளத் திரைப்படங்களை, ரசனையுள்ள தமிழ் ரசிகர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டாடுவதில் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 

பரிசோதனை முயற்சியில் இறங்கத் தயங்காத ஸ்டார் நடிகர்கள்!

மலையாளத்தில் ஸ்டார் நடிகர்களாக இருந்தாலும் கூட வித்தியாசமான கதையம்சமுள்ள, பரிசோதனை முயற்சிகளைக் கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தயங்கவே மாட்டார்கள். மாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான மம்முட்டி சமீபத்தில் நடித்த பிரேமயுகம், Kaathal - The Core, நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய திரைப்படங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

நண்பகல் நேரத்து மயக்கம், Kaathal - The Core, பிரேமயுகம்

ஒவ்வொன்றுமே வித்தியாசமான பாத்திரங்கள். சவாலான, சர்ச்சையான கேரக்டர்கள். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு முன்னணி கதாநாயக நடிகர், இத்தனை சர்ச்சையான பாத்திரங்களை ஏற்பது இந்தியாவின் வேறெந்த சினிமாத்துறையிலும் நிகழாத விஷயம். இப்படிப்பட்ட போக்கு கூட மலையாளத் திரைப்படங்கள் அதிகமாக விரும்பப்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

இதெல்லாம் சரி.

தமிழில் மட்டும் நல்ல சிறுமுதலீட்டு திரைப்படங்கள், மாற்று முயற்சிகள் போன்றவை நிகழ்வதில்லையா?
அவற்றையெல்லாம் பற்றி தமிழ் ரசிகர்கள் ஏன் சிறிது கூட பேசுவதில்லை?
மலையாளத் திரைப்படங்களுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை இவற்றிற்கு தராமல் போவது நியாயமா?

இது போன்ற கேள்விகள் எல்லாம் புறக்கணிக்கப்படக்கூடாதவை.

தமிழ் சினிமாவிலும் நிகழும் நல்ல முயற்சிகள்

ஆம். தமிழில் நிகழும் சில நல்ல முயற்சிகளை தமிழ் ரசிகர்களே அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

கடைசி விவசாயி, சேத்துமான், எறும்பு, கூழாங்கல், கருமேகங்கள் கலைகின்றன என்று சமீபத்திய தமிழ் சினிமாவிலும் பல ஆரோக்கியமான முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த படைப்புகள்

ஆனால் அவற்றிற்கு போதிய ஆதரவோ, வரவேற்போ இல்லாததால் ஒரு சிறிய வட்டத்திற்குள் முடங்கிப் போகின்றன. அது போல் மேலும் நல்ல திரைப்படங்கள் வராமல் மாட்டிக் கொள்வதற்கு ரசிகர்கள் இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் போக்கும் ஒரு காரணமாகத்தான் இருக்கிறது.

ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. இவ்வாறு உருவாகும் சிறு முதலீட்டுத் திரைப்படங்களுக்கு வணிக நோக்கம் பிரதானமாக இருக்காது. அவை மக்களின் ரசனையை மேம்படுத்தும் நோக்கில், சிந்திக்க வைக்கும் வகையில் உருவாகின்றன என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அதே சமயத்தில் அவை எந்த அளவிற்கு சுவாரசியமாக இருக்கின்றன என்கிற கேள்வியும் முக்கியம். நல்ல திரைப்படம் என்றால் அது சலிப்பாக இருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை. 

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல முயற்சிகளை தமிழ் ரசிகர்களே கண்டுகொள்ளாமலிருக்கும் அவல நிலை இருப்பது நிதர்சனமாகத்தான் இருக்கிறது.
பார்வையாளர்களிடம் இருக்கும் இந்த  மாற்றாந்தாய் மனப்பான்மை நிச்சயம் மாற வேண்டும்.

இன்னொரு பக்கம் பார்த்தால் நல்ல திரைப்படங்கள் சுவாரசியமாக இருந்தால், அது எந்த மொழியில் இருந்தாலும் ஆதரிக்க ரசனை மிக்க தமிழ் ரசிகர்கள் தயங்க மாட்டார்கள் என்பதும் உண்மைதான். அத்தகைய வெற்றிடத்தை நிரப்புவதற்கு தமிழ் இயக்குநர்கள் நகர வேண்டும் என்பதுதான் இதற்கான தீர்வாக இருக்கும்.