இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வசூலிலும் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.
படம் வெளியாகும் நாளில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தாலும், காம்ஸ் ஸ்கோர் வெளியிட்டுள்ள தகவலின் படி, முதல் நான்கு நாட்களில் உலகளவில் லியோ ரூ.243.96 கோடிகளை வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலில் ‘வில்லன் யாரு?’ என்ற பாடல் வெளியாகி இருந்தது.
தற்போது Ordinary Person Lyric வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்கள் சந்திக்கும் Copycat விவகாரத்தில் இப்பாடலும் சிக்கியுள்ளது.
Peaky Blinders தொடரில் இடம்பெற்றிருந்த, பின்னணிப்பாடகி ஒட்னிகாவின் 'Where are you?' பாடலைப் போன்று Ordinary Person உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இது குறித்து பதிவொன்றிற்கு பதிலளித்துள்ள ஒட்னிகா, “யாரோ ஒருவர் என் பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளாரா? அது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது” என்று பதிலளித்துள்ளார்.
மற்றொரு பதிவில், “அப்பாடலுக்கு பதிப்புரிமை இல்லை. அப்படியே பதிப்புரிமை வழங்கப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட கலைஞருக்குத் தெரியாமல் அதற்கு உரிமம் வழங்க முடியாது. இதுகுறித்து என்னையும் என் குழுவையும் யாரும் தொடர்புகொள்ளவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ள ஒட்னிகா, “லியோ திரைப்படம் குறித்த நூற்றுக்கணக்கான குறுஞ்செய்திகளுக்கு நன்றி. நான் அனைத்தையும் பார்க்கின்றேன். ஆனால் அனைவருக்கும் பதிலளிப்பது என்பது முடியாத காரியம்.
மெயிலில் அனுப்பப்படும் மெசேஜ்களால் மெயிலும் நிரம்பி வழிகிறது. அதேபோல் இன்ஸ்டாகிராம், யூ டியூப் வீடியோக்களின் கீழ் 'Where are you?' பாடல் குறித்த கமெண்ட்களும் அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது எந்த நிலைமையும் தெளிவாக இல்லை. விசாரித்து சொல்கிறோம். நன்றி” என தெரிவித்துள்ளார். இதனால் அனிருத்தின் இசை மீண்டுமொருமுறை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.