நயன்தாரா - செம்பருத்தி டீ விவகாரம் - The Liver Doc PT Web
சினிமா

செம்பருத்தி டீ உடலுக்கு நல்லதா? நயன்தாரா பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர்! முட்டிய மோதல்!

Rishan Vengai

“செம்பருத்தி டீ குடித்தால் நல்லது. அது சில நோய்களுக்கு ஆற்றாகவும் இருந்துவருகிறது” என்று நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டிருந்தார். அதை எதிர்த்து எக்ஸ் வலைதளத்தில் The Liver Doc என்று அழைக்கப்படும் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் (Cyriac Abby Philips) ஒரு பதிவிட்டார். அதில் அவர் “அதிக எண்ணிக்கையில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் பிரபலங்கள் (Celebrities who have More followers), தொடர்ந்து ஆதாரமில்லாத இதுபோன்ற கருத்துகளை பதிவிடக்கூடாது” என்று குறிப்பிட்டு, நயன்தாராவின் பதிவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

nayanthara hibiscus tea

இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் சில நிமிடங்களிலேயே ‘முட்டாள்களுடன் வாதிடாதீர்கள்’ என நயன் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

என்னதான் நடந்தது இந்த விஷயத்தில்? பார்க்கலாம்...

என்ன நடந்தது?

நயன்தாராவின் இன்ஸ்டா பதிவில் சொல்லப்பட்ட விஷயம் - “செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்துவருகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களுக்கு எதிராக பெரிதும் உதவுகிறது.

இது மிகவும் குளிர்ச்சியானது, எனவே முகப்பரு, தோலில் வெப்பக் கொதிப்பு உள்ளவர்களுக்கு இது சிறந்தது. உடன் செம்பருத்தி டீ மழைக்காலத்திற்கும் சிறந்தது, ஏனெனில் இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது மற்றும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலையில் வைக்கிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதோடு, பருவகால தொற்று நோயிலிருந்தும் பாதுகாக்கிறது” என்பதுதான்.

நயன்தாராவின் இந்த பதிவை கண்ட டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் (Cyriac Abby Philips), The Liver Doc என்ற தன் எக்ஸ் தள பக்கத்தில், “நடிகை சமந்தாவை விட அதிக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நடிகை நயன்தாரா, தன்னை பின்தொடரும் 8.7 மில்லியன் ஃபாலோயர்களுக்கு செம்பருத்தி டீ குறித்து தவறான தகவல்களை கொடுத்திருக்கிறார்” என்றார்.

(இவர் இதற்கு முன் ‘உடல் ஆரோக்கியம்’ தொடர்பான சமந்தாவின் ஒரு பதிவும் Misleading-ஆக இருப்பதாக கூறியிருந்தார். அது நடந்த சில காலத்துக்குள்ளேயே இதுவும் நடப்பதால், சமந்தா பெயரை இங்கு குறிப்பிட்டு, நயன்தாராவுக்கு எதிராக பேசியுள்ளார். சமந்தா விவகாரத்தில் நடந்தவை குறித்து, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

சரி விஷயத்துக்கு வருவோம்... தற்போது நடிகை நயன்தாராவின் இன்ஸ்டா பதிவு பற்றி பேசியிருக்கும் டாக்டர் சிரியா, “ ‘செம்பருத்தி டீ, மிகவும் சுவையானது’ என்பதுடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் அப்படி இல்லாமல் ஆரோக்கியம் பற்றி தனக்கு தெரியாததை எல்லாம் பேசியிருக்கிறார். குறிப்பாக ‘செம்பருத்தி டீ சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவைக்கு நல்லது. ஃபளூவில் இருந்து காக்கிறது’ என கூறியிருக்கிறார். அவர் சொன்ன அனைத்தும், நிரூபிக்கப்படாத கூற்றுகள்.

டயட் மற்றும் நியூட்ரிஷனில் மாஸ்டர்ஸ் டிகிரி வைத்திருக்கும் தனது செலபிரிட்டி நியூட்ரிஷனிஸ்ட்டுக்கு விளம்பரம் தேடித்தர நினைத்து நயன்தாரா இந்த போஸ்ட்டை போட்டது போன்று தெரிகிறது.

உண்மையில் செம்பருத்தி டீயை தினமும் குடிப்பதில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த போஸ்ட்டின்படி சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்திற்கு செம்பருத்தி டீ நல்லதாம். ஆனால் ‘டாக்டர்’ நயன்தாரா கூறியிருப்பது பொய். சர்க்கரை நோய்க்கு செம்பருத்தி டீ நல்லது என்பது கூறியிருப்பதும் சரியில்லை.

மேலும் பெண்கள் அந்த டீயை தினமும் குடித்து வந்தால் பூப்பெய்வது தள்ளிப் போவதுடன், குழந்தையின் எடையில் பிரச்னை வரும். எனவே, ரீப்ரொடக்டிவ் வயதில் இருக்கும் ஆண்களும், பெண்களும் செம்பருத்தி டியை தினமும் குடிக்கக் கூடாது.

உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உண்மையான டாக்டர்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் காட்டமாக இந்த விஷயத்தை சொல்லவில்லை என நினைக்கிறேன்” என கூறியிருந்தார்.

முட்டாள் என தொடங்கும் ஸ்டோரியை பதிவிட்ட நயன்தாரா..

டாக்டரின் கடுமையான எதிர்ப்புக்கு பிறகான சிறிது நேரத்தில் நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ நன்மைகள் குறித்த தன்னுடைய இன்ஸ்டா பதிவை டெலிட் செய்துவிட்டார். ஆனால், ‘அது சரியான தகவல்தானா? அல்லது தவறான தகவலா? மருத்துவர் சிரியாக் சொன்னது உண்மையென்பதால்தான் பதிவு டெலிட் செய்யப்பட்டதா?’ என்ற எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை.

நயன்தாராவின் இந்த பொறுப்பற்ற செயலை விமர்சித்த டாக்டர், “பதிவு நீக்கப்பட்டது. ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை. பொறுப்புக்கூறல்கூட எதுவும் சொல்லப்படவில்லை. இது பொது சுகாதாரத்தின் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல இருக்கிறது. இதுபோன்ற செலப்ரிடிகளின் சமூகத்தின் மீது அக்கறையில்லாத நடத்தையைத் தடுக்க சட்டங்கள் தேவை” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து டாக்டரின் தொடர் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டோரி ஒன்றை வைத்திருக்கும் நயன்தாரா, “முட்டாள்களுடன் ஒருபோதும் வாதிடாதீர்கள், அவர்கள் உங்களை அவர்களின் நிலைக்கு இழுத்து, பின்னர் அனுபவத்தால் உங்களை அடிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார். நயன்தாராவின் இந்த செயல் சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதை ஸ்க்ரீன்ஷாட்டுடன் பதிவிட்டுள்ள அம்மருத்துவர், “மன்னிப்புக் கேட்காவிட்டாலும், ‘தன்னைப் போன்ற பிரபலங்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்’ என்று கேட்டு மன்னிப்பு கேட்பது போன்ற பதிவை நயன்தாரா செய்துள்ளார்” என்று கூறியிருக்கிறார். அதாவது, நயன்தாரா மருத்துவரை முட்டாள் என குறிப்பிடும் வகையில் பதிவிட்டதற்கு, மருத்துவரும் நயன்தாராவை முட்டாள் என குறிப்பிடும் வகையில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இவ்விவகாரம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.