சினிமா

கண்ணகி பக்தர்களின் மனதை புரிந்துக்கொள்ளுமா இரு மாநில அரசுகள் ?

கண்ணகி பக்தர்களின் மனதை புரிந்துக்கொள்ளுமா இரு மாநில அரசுகள் ?

webteam

தமிழக கேரள வன எல்லையில் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி மங்கலதேவி. கடல் மட்டத்தில் இருந்து ஐந்தாயிரம் அடி உயரமுள்ள இந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது கண்ணகி கோவில்.தனது கணவன் கோவலன் சிலம்பம் திருடிய கள்வன் என குற்றம் சாட்டி பாண்டிய மன்னரால் கொலை செய்யப்பட்டபோது, தனது கணவன் கள்வன் இல்லை என தனது காற்சிலம்பை உடைத்துக்காட்டி நிரூபித்த கண்ணகி கோபத்தில் மதுரையை எரித்த கையோடு கால்நடையாக மேற்குத்தொடர்ச்சி மலையின் மங்கலதேவி மலைக்கு வந்து, அங்கு பல்லக்கில் வந்த கோவலனோடு சேர்ந்து சொர்க்கம் சென்றதாக ஐதீகம் உண்டு.

அவ்வாறு கண்ணகி கோவலனுடன் பல்லக்கில் ஏறிச்சென்ற இடமான இந்த மங்கலதேவியில் சேரன் செங்குட்டுவனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுவதுதான் இந்த கண்ணகி கோவில். தற்போது தொல்லியல் துறையின் ஆய்வில் இருக்கும் இந்த கோவில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது என்பது மட்டும் அங்கு கிடைத்த கல்வெட்டுக்களின் ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. கண்ணகிக்கு கோவில் அமைக்க சேரன் செங்குட்டுவன் இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்ததாக கூறப்படுவது, கண்ணகி கோவிலில் உள்ள குகையின் தொடர்ச்சி மதுரை வரை செல்கிறது என சொல்லப்படுவது எல்லாம் தொல்லியல்துறையின் ஆய்வில் உள்ளது. ஐந்தாயிரம் அடி உயரமுள்ள மலை, மலையின் எந்தப்பகுதியிலும் பாறைகள் உடைத்தெடுக்கப்படாதை கண் கூடாக காணும் நிலை, எப்படி இத்தனை பிரமாண்டமான கோவில் இந்த மலை உச்சியில் கற்களால் எழுப்பப்பட்டது என்பதுதான் எல்லோருக்குள்ளும் எழும் அதிசய கேள்வி.
 


இப்போதே இவ்வளவு அடர்ந்த வனமாக இருக்கும் இந்த மங்கலதேவி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்பதும், வன விலங்குகள் எண்ணிக்கை எத்தனை அதிகமாக இருந்திருக்கும் என்பதும், அப்போதைய அடை மழை, காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றோடு கோவில் எழுப்பப்பட்டதன் கடினம்தான் தற்போது எல்லோரையும் விழி உயர்த்த வைக்கும் விஷயம். கடந்த 1956 ம் ஆண்டு இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழகம், கேரளா உருவானபோது, தமிழகத்தின் பீருமேடு, தேவிகுளம் தாலுகாக்கள் கேரளாவோடு இணைந்தன. அதோடு சேர்த்து முல்லைப்பெரியாறு அணை கேரளாவிற்குள் சென்றது. வன எல்லைகளும் பிரிந்தபோது இந்த மங்கலதேவி கண்ணகி கோவில் யாருக்கு என்ற சர்சையும் எழுந்தது.

கண்ணகி கோவில் தங்களுக்குத்தான் என கேரளாவும், தமிழகமும் உரிமை கொண்டாடி வருவது இன்னமும் தொடர் கதைதான். ஆனாலும், ஆண்டுக்கு ஒரு நாள் சித்திரை மாதத்தின் பவுர்ணமி அன்று ”சித்திரை முழு நிலவு விழா” கொண்டாடுவது சர்ச்சைகளுக்கெல்லாம் ஒரு ஆறுதல். கண்ணகி அறக்கட்டளை தமிழகத்தை போன்று கேரளாவிலும் உருவாகியிருக்கிறது. இரு மாநில மக்களும் கண்ணகியை வழிபடத் துவங்கியிருகின்றனர். கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு உன் நூறு, இருனூறு பேர் சென்று வழிபட்ட கண்ணகி கோவிலில் தற்பொது பக்தர்கள் கூட்டம் இருபதாயிரம், முப்பதாயிரம் என அதிகரித்திருக்கிறது.


 
தமிழ், மலையாள மக்கள் இணைந்து கண்ணகியை வழிபடுகின்றனர். இரு மாநில வன எல்லைக் கோவில் என்பதால் இரு மாநில அரசுகளும் இணைந்து விழாவை நடத்துகிறார்கள். அதிசய கோவில் என்பதால் ஆத்திகம், நாத்திகம் என்று இல்லாமல், இந்து கடவுள் என்றில்லாமல் அனைத்து தரப்பினரும் கண்ணகி கோவிலுக்கு வந்து செல்வது ஆரோக்யமான விஷயமாகியிருக்கிறது. அதோடு, முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் தமிழக கேரள மக்களிடையே ஏற்பட்ட மனஸ்தாபங்கள், போராட்டம் உள்ளிட்ட அனுபவங்கள் ஆகியனவற்றை மறக்கச் செய்யும் வகையில், இந்த இரு மாநில மக்களும் இணைந்து விழாவை கொண்டாடுவது எல்லைச் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு இரு மாநில உறவையும், நட்பையும் பலப்படுத்துவதாக அம்மைந்துள்ளது.

இதற்காக கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனச்சாலை விழா நடக்கும் அன்று ஒரு நாள் மட்டும் திறந்து விடப்படுகிறது. கேரளாவின் குமுளியில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரமுள்ள கண்ணகி கோவிலுக்கு ஜீப்கள் இயக்கப்படுகின்றன. நடந்தும் பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். அதோடு, கண்ணகி கால்நடையாக சென்ற வழியாக கருதப்படும் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பழியக்குடியில் இருந்தும் பக்தர்கள் 6 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக கோயிலுக்கு செல்கின்றனர்.ஆண்டுக்கு ஒரு நாள் விழா சிறப்பாக நடந்தாலும் பக்தர்களிடையே கோரிக்கைகள் பல முன்வைக்கப்படுகின்றன. தேனி மாவட்டம் பழியக்குடியில் இருந்து செல்லும் சாலையை தார் சாலையாக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனச்சாலையை செப்பனிட வேண்டும் என்பதை கேரள அரசிற்கும், புணரமைக்க வேண்டும் என்பதை தொல்லியல் துறைக்கும் முன்வைக்கப்படும் கோரிக்கைகள். கோரிக்கைகளில் இரு மாநில எல்லை பிரச்னை யாருக்கும் ஒரு பிரச்னையே இல்லை என்பது தனிச்சிறப்பு.

 
  
தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் வழி செல்லும்போது கேரள வனத்துறையின் கட்டுப்பாடுகளும் சோதனைகளும் பலருக்கு எரிச்சலையும், கோபத்தையும் வரவழைக்காமல் இல்லை. ஆனால் தமிழக வனத்துறையும், போலீஸாரும் இணைந்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது பக்தர்களின் பாதுகாப்புக்காகத்தான் என்பதும் மறுக்க முடியாததாகியிருக்கிறது. எல்லாவற்றிக்கும் மேலாக இத்தனை பழமைவாய்ந்த கண்ணகி கோவில் சிதலமடைந்து கிடப்பது எல்லோருக்கும் வருத்தமான விஷயம். அதை புணரமைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கை. கண்ணகி கோவில் புணரமைப்பிற்கு திருவனந்தபுரம் தொல்லியல்துறை இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்ட புணரமைப்பு பணிகளுக்காக 60 லட்சம் ரூபாய் தொல்லியல்துறை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் கேரள வனத்துறை பணிகளை செய்யவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

இது குறித்து தேனி மாவட்ட கண்ணகி அறக்கட்டளை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுபோன்ற வனத்திற்குள் இருக்கும் சபரிமலையில் கட்டிட பணிகள் நடக்கும்போது கண்ணகிகோவிலுக்கும் பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. வழக்கில் உயர்நீதிமன்ற ஆணைக்காக தொல்லியல்துறை காத்திருக்கிறது என்பது மற்றொரு எதிர்பார்ப்பு விஷயம். மொத்தத்தில் இந்த கண்ணகி கோவில் அதிசயமும் அபூர்வமும் கலந்தது. அதனால்தான் எல்லைப் பிரச்னைகளையும் சர்ச்சைகளையும் புறந்தள்ளிவிட்டு, மொழி, மதம் கடந்து பழங்கால வரலாற்றை பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. ஆண்டு தோறும் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்தான் அதற்கு சாட்சி!

மக்கள் மனதை புரிந்து… மனது வைக்க வேண்டியது இரு மாநில அரசுகள்  மட்டுமே!!