இயக்குநர் வெற்றிமாறன், PT
சினிமா

“படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கு.. அதையெல்லாம் கடந்து ’விடுதலை’யை நீங்கள் கொண்டாடுவது..!” - வெற்றிமாறன் பேச்சு

“யாரும் போய் கஷ்டப்பட்டு படம் எடுங்கள் என்று சொல்லவில்லை, கதைக்கு ஏற்றவாறு தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு எடுக்கிறோம்.”

சங்கீதா

‘விடுதலை’ திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் படக் குழுவினர் நன்றி நவிழும் நிகழ்வு சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி மற்றும் நடிகை பவானி ஸ்ரீ, தயாரிப்பாளர் எல்ரட் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “இந்த மாதிரி படம் எடுக்கிறதில் ரொம்ப எளிமையான விஷயம் என்னவென்றால், இந்த மாதிரி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு எடுப்பதுதான். தனியாளோ அல்லது ஒரு குழுவோ சேர்ந்து எடுக்கிற முடிவுதான். தயாரிப்பாளருக்கு நம்பிக்கை இருந்தால் போதும், படத்தை தயாரிப்பதும் எளிதுதான். யாரும் போய் கஷ்டப்பட்டு படம் எடுங்கள் என்று சொல்லவில்லை, கதைக்கு ஏற்றவாறு தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு எடுக்கிறோம் அவ்வளவுதான்.

ஆனால், இதில் ரொம்ப முக்கியமான சிறப்பான விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு படம் வரும்போது, ஒரு படத்தை ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தான் பெரிய விஷயம் என்று நான் கருதுகிறேன். இந்தப் படத்தின் முதல் காட்சியின் இடைவேளையின்போதே, ஊடகங்கள் எல்லாம் ட்வீட் மற்றும் எங்களுக்கு எஸ்.எம்.எஸ். பண்ண ஆரம்பித்தார்கள். அதுதான் இந்த மாதிரியான படங்களுக்கு மிகப்பெரிய சவால். சொல்லப்போனால் அதுதான் மிகப்பெரிய பங்களிப்பு (contribution) என்று நினைக்கிறேன்.

ஊடகங்கள் இந்தப் படத்தை மக்களிடம் எடுத்துக்கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறதும், அதை அவர்கள் கொண்டாடுறதும், சொல்லப்போனால் இந்தப் படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கிறது; சி.ஜி. வேலைகள் முடியாமலேயே சில காட்சிகள் இருக்கிறது; இந்த குறைகளை எல்லாம் விட்டுவிட்டு, இந்தக் கதை, இந்தப் படம் பேசுகின்ற கருப்பொருள் மற்றும் அதனுடைய எண்ணம், இந்த குழு எவ்வளவு முயற்சி எடுத்து இருக்கிறார்கள் என்பதை மட்டுமே மதிப்பீடு செய்து படத்தினுடைய குறைகளை எல்லாம் ஓரம் வைத்து விட்டு, ‘இது நல்லப் படம், எங்களுக்கு பிடித்திருக்கிறது, நீங்கப் போய் பாருங்க’ என ஒட்டுமொத்தமாக எல்லா ஊடகங்களும் ஆதரவு தந்தது முதலாவது மிகப் பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

அதன்பிறகு மக்கள் இதை ஏற்றுக்கொண்ட விதம், இதை அவங்களோடதா உணர்ந்தது, அதாவது இந்தப் படத்தில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு வலி இருக்கும்; அந்த வலியை அவர்களது வலியாகவும், அதோடு சேர்ந்து அந்தக் கதை உலகத்துக்குள்ளேயே தங்களை இணைத்துக்கொண்டு அவர்களுடைய படமா கொண்டாடுனதும், பெருமைப்படுறதும், நன்றிக்கு உரியது. ஊடகங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றி. இந்த மாதிரி படம், ஒரு கட்டமைப்புக்குள் (template) இல்லை.

இந்தக் கதையின் நாயகன் நல்லவன், நாம சாதாரணமா அவ்வாறு பார்த்து ரொம்ப நாளாச்சு, அதாவது கதையின் நாயகனை நல்லவனா பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. நாங்களுமே அப்படி உருவாக்குவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் நல்லவனை கதையின் நாயகனா பார்த்து, அதை ஏற்றுக்கொண்டு இரண்டாம் பாகத்தை பார்க்க ஆவலா இருக்கிற மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. இது எங்களுக்கு மிகவும் ஊக்கத்தை கொடுக்கிறது. ஊடகம், மக்கள் கொடுத்த வரவேற்பு தான், இந்த குழு அடுத்த கட்டம் நோக்கி உத்வேகத்துடன் செல்ல வாய்ப்பாக இருக்கும், நன்றி” என்று தெரிவித்துள்ளார்.