தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா நடத்திய நேர்காணல் உரையாடலில் இந்தியாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், பா.ரஞ்சித், மகேஷ் நாராயணன், கரண் ஜோஹர் மற்றும் ஜோயா அக்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்த உரையாடலில் கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை, ஓடிடி தளங்கள் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றங்கள் மற்றும் வரம்புகள் என பல்வேறு விசயங்கள் குறித்து பேசப்பட்டது.
கொரோனோ தொற்றுகாலத்தின் போது மக்களால் தியேட்டருக்கு செல்லமுடியாத நிலையில், திரைப்படங்களை நேரடியாக ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களில் வெளியிடுகிறோம் என உள்ளே வந்த OTT தளங்கள், திரையுலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு தற்போது பின்வாங்கிவிட்டதாக இயக்குநர் வெற்றிமாறன் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தற்போதைய காலகட்டத்தில் படத்திற்கு பணம் கொடுப்பவர்களாக OTT தளங்கள் மாறிய நிலையில், இந்த படத்திற்கு தான் இவ்வளவு விலை, இந்த படங்கள் எங்களுக்கு தேவையில்லை என்ற பாகுபாடையும், உங்கள் திரைப்படத்தில் இதுபோலான காட்சிகள் தான் இருக்க வேண்டும், இந்த காட்சிகள் இருக்க கூடாது என்பது போலான வரம்புகளையும் கொண்டுவந்துள்ளதாகவும் வெற்றிமாறன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
OTT தளங்கள் குறித்து பேசிய வெற்றிமாறன், “திரையரங்க பாக்ஸ்ஆபிஸ் தோல்வியடைவதில்லை, ஆனால் OTT தளங்களால் உருவாக்கப்பட்ட பணவீக்கமே தற்போது தோல்வியடைகிறது. பாருங்கள், தொற்றுநோய் காலங்களில் அவர்கள் உள்ளே நுழைந்து, ’பெரிய ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் படங்களுக்கு நாங்கள் ரூ120 கோடி தருகிறோம், நீங்கள் அதை உருவாக்குங்கள்’ என்று சொன்னார்கள். அதற்குபின்னர், படங்களின் பட்ஜெட் பெரியதாக மாறியது, சம்பளம் பெரியதாக மாறியது. ஆனால் சில மாதங்களிலேயே அது நிலையானது அல்ல என்பதை உணர்ந்த OTT தளங்கள், தற்போது, ‘அவ்வளவு விலை கொடுக்க முடியாது’ என்று கூறுகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் பெரிய படங்களை தயாரிக்கவும், நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கவும் பழகிவிட்டனர். இப்போது நாம் என்ன செய்வது?” என்ற மிகப்பெரிய கேள்வியை முன்வைத்தார்.
வாழை படத்தை குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி இரண்டு மடங்கு லாபம் ஈட்டி, தியேட்டர் பாக்ஸ் ஆபிஸ் இன்னும் குறையவில்லை என்பதை நீருபித்த மாரி செல்வராஜை பாராட்டிய வெற்றிமாறன், “தமிழகத்தில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். இங்கு இன்னும் பாக்ஸ் ஆபிஸ் உள்ளது, ஆனால் நாம்தான் நம்மை மறுசீரமைக்க வேண்டும்… நாம் நம் சம்பளத்தை 30% - 40% குறைத்து பட்ஜெட்டுக்குள் திரைப்படங்களை உருவாக்குவோம். அப்படி செய்தால் திரையரங்க வியாபாரத்தில் பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். நாம் முன்பு போலவே தியேட்டர் பார்வையாளர்களை நேரடியாக உரையாற்ற வைக்கவேண்டுமே தவிர, OTT பார்வையாளர்களை அல்ல” என்று கூறினார்.
அதுமட்டுமில்லாமல் தங்களுக்கென தனி வரம்புகளையும் OTT தளங்கள் நிர்ணயிப்பதாக குற்றஞ்சாட்டிய வெற்றிமாறன், “OTT தளங்கள் தங்களுக்கென தனியாக ஒரு சென்சார் வைத்திருக்கின்றனர். அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை காட்டவிரும்பவில்லை, இதை செய்தால் இந்த சமூகம் புண்படுத்தப்படும், அதைசெய்தால் அந்த மதம் புண்படுத்தப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் சம்பளம் கொடுப்பவர்களாக இருப்பதால் அவர்களின் கோரிக்கைகளும் அதிகமாக இருக்கின்றன. நாம் இதிலிருந்து பின்வாங்க வேண்டும்” என்று வெற்றிமாறன் மேலும் கூறினார்.