சினிமா

சிறுமலையில் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு - வெளியானது புதிய அப்டேட்!

சிறுமலையில் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு - வெளியானது புதிய அப்டேட்!

sharpana

சிறுமலையில் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு - தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு அப்டேட்

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சிறுமலையில் நடைபெற்று வருகிறது.

’அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன், பாவக்கதைகள் படத்தில் இடம்பெற்ற நான்கு பாகங்களில் ஒன்றான ‘ஓர் இரவு’ என்ற கதையை இயக்கி இருந்தார். அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை எடுத்து சூரியை வைத்து ’விடுதலை’ படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில், சூரியுடன் விஜய் சேதுபதியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இளையராஜா இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் ஒரு பாடலும் பாடியுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டது படக்குழு.

போலீஸாக நடிக்கும் சூரி, கையில் விலங்குடன் இருக்கும் விஜய் சேதுபதி ஆகியோரின் மிரட்டல் போஸ்டரும் வெளியானது. ஆனால், படம் குறித்து அதன்பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. விஜய் சேதுபதியின் பிஸியாக இருந்தால் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்தமுடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைத்து ‘விடுதலை’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடத்தி வருகின்றனர். கையில் துப்பாக்கியுடன் சூரியும் காட்டில் விஜய் சேதுபதியும் இருக்கும் புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

தற்போது, திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் 50 நாட்கள் ஒரே கட்டமாக நான்காவது ஷெட்யூல் படப்பிடிப்பில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அங்கு விஜய் சேதுபதி 30 நாட்கள் தொடர்ந்து தனது முழு பகுதிக்கான படப்பிடிப்பை முடித்தார். சூரி மற்றும் பிற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜூன் 10 ஆம் தேதிக்குள் முடிவடையும்.

கலை இயக்குனர் ஜாக்கி சிறுமலையின் மேலே மலைகளில் ஒரு பெரிய கிராமப்புற செட்டை அமைத்திருப்பது மிகவும் சுவாரஸ்யமான அம்சமாகும், மிக தத்ரூபமாக ஒரிஜினல் கிராமம் போலவே செட் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்கும் முக்கிய அதிரடி சண்டைக்காட்சிகளில் ஒன்று இங்கு படமாக்கப்பட்டது. இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சண்டைக்காட்சியில் விஜய் சேதுபதி டூப் இல்லாமல் தானே நேரடியாக நடித்தார்.

கடந்த 50 நாட்களாக இப்படத்தினை சார்ந்த 450 படக்குழுவினர் சிறுமலை மலைப்பகுதியில் தங்கியுள்ளனர். விஷப்பாம்புகள், காட்டெருமைகள், காட்டு நாய்கள் மற்றும் பூச்சிகளை கடந்து டீம் உறுப்பினர்கள் வனப்பகுதிக்குள் தொலைதூர இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதால், படப்பிடிப்பின் போது, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக 24×7 மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் அங்கு இருப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த 4 ஆம் கட்ட படப்பிடிப்பில் 3 முக்கிய அதிரடி காட்சிகள் மற்றும் ஒன்றிரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் “சிறுமலையில் நான்காம் கட்டப் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி” என்று தெரிவித்திருக்கிறார்கள். நடிகர் விஜய் சேதுபதியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுதலை புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.