இயக்குநர் வெங்கட் பிரபு முகநூல்
சினிமா

“படமென்பது மக்களுக்காகதானே தவிர விமர்சகர்களுக்காக இல்லை” - இயக்குநர் வெங்கட்பிரபு

“தி கோட்” திரைப்படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "தி கோட்" திரைப்படம் உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா என பல திரை பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது "தி கோட்".

திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியா முழுவதும் 137 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேசமயம், இத்திரைப்படம் குறித்தான நெகட்டிவ் விமர்சனங்களையும் சில விமர்சகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், “தி கோட்” திரைப்படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். எக்ஸ் தளத்தின் ஸ்பேஸில் பேசிய அவர் அதில்,

“இவர்கள் (நெகட்டிவ் விமர்சனம் கொடுப்பவர்கள்) கொடுத்தது film review-தானே தவிர.. ஒரு கமிர்ஷியல் பட review இல்லை. இந்த படம் பல திரைப்படத்தின் reference என்றுதான் பேசுகிறார்களே தவிர... இந்த படம் எப்படி வந்துள்ளது என்பது குறித்து யாரும் பேசவில்லை. ஆகவே, எனக்கு இதைப்பற்றிய கவலையே இல்லை.

எந்த சூப்பர் ஸ்டார்களின் படங்களிலும் இதுபோன்ற reference-கள் இல்லைதான். இந்த படத்தில் நான் வேண்டுமென்றுதான் அவற்றை வைத்தேன். ஏனெனில், இப்படத்தை எல்லா ரசிகர்களும் கொண்டாட வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால்தான் இதை செய்தேன்.

thalapathy vijay and venkat prabhu

எனவே, reference தாண்டி, இதில் என்ன கதை இருக்கிறது, எந்தளவு உழைப்பு இருக்கிறது என்பதை பேசியிருக்கலாம்.. எனக்கு மக்களுக்கு பிடித்தவகையில் படத்தை கொடுக்க வேண்டும் என்றுதான் ஆசை. படமென்பது மக்களுக்காகதானே தவிர ரிவ்யூவர்ஸ்-களுக்காக இல்லை. மேலும், எல்லாருக்கு பிடிக்கும் மாதிரியாக படம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் வேண்டும். உண்மையில் எங்களுக்கு நேரம் ரொம்பவும் குறைவாகத்தான் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.