சினிமா

“வாழும்போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே?” - பிக்பாஸ் கவினுக்கு வசந்த பாலன் ஆதரவு

Rasus

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கும் அதேசமயம், பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக கவின் - லாஸ்லியா என்ற இரு போட்டியாளர்கள் இடையே உருவாகியுள்ள காதல் தற்போது பலவித விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் காதலுக்கு இன்னும் எதிர்ப்பு இருக்கிறது என்பதையே இந்தச்அ சம்பவம் காட்டுகிறது என்று இயக்குனர் வசந்த பாலன் கருத்து கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது ஆண்டாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன், இலங்கையை சேர்ந்த தர்ஷன், லாஸ்லியா, தமிழ் திரையுலகை சேர்ந்த சாண்டி, கவின், ஷெரின், வனிதா உள்ளிட்ட 16 நபர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களை கடந்துவிட்டன. 8 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

இந்த ஆண்டு கலந்துகொண்ட போட்டியாளர்களில் கவின் பலவிதமான எதிர்ப்புகளை சந்தித்துள்ளார். குறிப்பாக கவின் - லாஸ்லியா ஆகியோரின் காதல் விஷயங்கள் பல விமர்சனங்களை சந்தித்தது. இவர்கள் இருவரின் காதலுக்கு சேரன், வனிதா உள்ளிட்ட ஹவுஸ் மெட்ஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல் பிக்பாஸ் மற்றும் கமல் ஆகியோரும் உங்கள் விளையாட்டை விளையாடுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர். மேலும் பார்வையாளர்கள் பலரும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் அவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் காதலுக்கு வரும் எதிர்ப்பை பார்க்கும்பொழுது, தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது என்பதையே காட்டுகிறது என்று முகநூல் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதோடு கேரளாவில் நடைபெற்ற முதல் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு காதலித்து கரம்பிடித்த சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அந்த நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்தி கொண்டாடிய தருணங்களை எந்தத் திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக கவின் - லாஸ்லியா காதல் பேச்சுவார்த்தை வரும்போதே 'லாஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க? கேமை கவனித்து விளையாடுங்க என அறிவுரைகள் நாலபுறமிருந்தும் வருகிறது. குறிப்பாக சேரன் இந்தக் காதலை சேரவிடக்கூடாது என்பதில் குறிக்கோளுடன் உள்ளார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் லாஸ்லியாவின் குடும்பத்தினரும் அதே மன நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதை பார்க்கும்பொழுது தமிழகத்தில் இன்னும் காதலுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

வாழும்போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? காதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல் தான் மனதில் ஒலிக்கிறது என்றும் இயக்குநர் வசந்தபாலன் குறிப்பிட்டுள்ளார்.