சினிமா

‘தியேட்டரும், ஓடிடியும் அண்ணன் தம்பி மாதிரிதான்.. பார்வையாளர்களை புரிந்துகொண்டால்’-வசந்த்

webteam

தங்கள் காலத்தில் இருந்ததைவிட இப்போது தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டதாகவும், சினிமா இப்போது பொற்காலத்தில் இருப்பதால் அதைப் பயன்படுத்தி எல்லோரும் வெற்றியடைய வேண்டும் என்றும் இயக்குநர் வசந்த் தெரிவித்துள்ளார். 

தனியார் நிறுவன சேனல் நடத்திய மொபைல் குறும்படப் போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் நடுவர்களாக இயக்குநர் வசந்த், இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கினார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் வசந்த் பேசும்போது, “ஒரு திரைப்படத்தை ஓடிடியில் பார்ப்பதற்கும் திரையரங்கில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திரையரங்கில் பலதரப்பட்ட பார்வையாளர்களுடன் பார்க்கும் அனுபவம் ஓடிடியில் இருக்காது.

சினிமாவை பொருத்தவரை நம்பிக்கையை எப்போதும் விடக் கூடாது. ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ பாடலில் கூட நம்பிக்கை தரும் விதமான வரிகளை அமைத்திருப்பேன், விழுந்தால் எழுந்துகொண்டே இருங்கள். எங்கள் காலத்தில் இருந்ததைவிட இப்போது தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சினிமா இப்போது பொற்காலத்தில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி எல்லோரும் வெற்றியடைய வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.

50 ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு 100 ரூபாய் கொடுத்தால் திருப்தி அடைவார்கள். ஆனால், 5 ரூபாய் கொடுத்தால் ஏமாற்றமடைவார்கள். சிம்புதேவன் கூறியதுபோல ஓடிடி பார்வையாளர்கள் மற்றும் திரையரங்க பார்வையாளர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்றவாறு மாற்றியமைத்தால் எந்த மாதிரியான படங்களும் ஓடும். திரையரங்கமும், ஓடிடியும் அண்ணன் தம்பி மாதிரி தான்.

சமீபத்தில் வெளியான ‘ராக்கெட்ரி’ படத்தை இயக்கிய மாதவனை இயக்குநராக பிடித்திருக்கிறது. ‘மாமனிதன்’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு மிகவும் பிடித்திருக்கிறது. அதேபோல் அப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கமும் பிடித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படமும் எனக்கு பிடித்த படம். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நித்யா மேனன் நடிப்பும், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் துஷாராவின் நடிப்பையும் பிடித்திருக்கிறது” இவ்வாறு தெரிவித்தார்.

5000 குறும்படங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 90 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 31 லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டது.