'இந்தியன் 2' படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்த லைகா நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவன படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
லைகா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “ படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு ஆகியுள்ளது. இருப்பினும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருக்கிறது. ஆகையால் அவர் மீதமுள்ள படத்தின் பணிகளை அவர் முடித்து தர வேண்டும். இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருந்த நிலையில், தற்போது வரை 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருக்கிறோம்”என்று குறிப்பிட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, “ இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆகையால் ஷங்கர் பிற நிறுவன படங்களை இயக்கக் கூடாது என்ற தடையை விதிக்க இயலாது .இந்த வழக்கு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.