வாழை படம் web
சினிமா

“இனிமே வாழைப்பழம் தித்திக்குமானு தெரியல..” - மாரி செல்வராஜை புகழ்ந்த டைரக்டர் சங்கர், விஜய் சேதுபதி!

Rishan Vengai

அழுத்தமான கதைக்களத்தை எடுத்து படமாக்குவது மட்டுமில்லாமல், அதை ரசிகர்களுக்கும் எளிமையான முறையில் எடுத்துச்சென்று நெருக்கமான சினிமாவாக காட்டுவதில் மேலும்மேலும் தேர்ச்சி பெற்றவராக மாறிவருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், வாழை திரைப்படத்தின் மூலம் மீண்டுமொரு அழுத்தமான கதைக்களத்தை படமாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதனால் அனைத்து தரப்பிலிருந்தும் நேர்மறையான விமர்சனங்களை அள்ளிவருகிறார் அவர்.

வாழை

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக பொன்வேல் மற்றும் ராகுல் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். உடன் கலையரசன், நிகிலா விமல், ஜே சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்ட பலபேரும் படத்திற்கு உயிரூட்டியுள்ளனர்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரியின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்தது.

பாராட்டு மழையில் நனைந்த மாரி செல்வராஜ்..

ஆகஸ்டு 23-ம் தேதி திரையரங்கில் வெளியான வாழை திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை மிகப்பெரிய பாராட்டை வைத்துவருகின்றனர்.

முதலில் பிரீவியூ ஷோவை பார்த்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தமிட்டு வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் மிரட்சியுடன் இருந்தார். எப்போதும் ஸ்டிராங்கான பர்சனாலிட்டியாக இருக்கும் பாலா அப்படி ரியாக்ட் செய்தது உண்மையில் எல்லோருக்கும் புதியதாக இருந்தது. அதனைத்தொடர்ந்து நடிகர் சூரியும் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜுக்கு முத்தமிட்டார்.

படத்தை பார்த்த தனுஷ், கார்த்தி மற்றும் பாரதிராஜா முதலியோர் பாராட்டித்தள்ளியுள்ளனர். ஒருபடிக்கு மேல் படத்தை பார்த்துவிட்டு விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று பாராட்டினார். இவர்களை தொடர்ந்து தற்போது டைரக்டர் ஷங்கர் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் பாராட்டியுள்ளனர்.

பாராட்டிய டைரக்டர் சங்கர், விஜய் சேதுபதி!

வாழை படத்தை பார்த்த பிறகு வீடியோ வெளியிட்டு பாராட்டியிருக்கும் இயக்குநர் ஷங்கர், “வாழை படத்தின் தாக்கம் அதிகமா இருக்கு, இன்னும் என்னால வெளியில வரமுடியல. படத்துல வாழைத்தார்களை சுமந்துசெல்பவர்களை பார்க்கும் போது நமது தோள்களில் அந்த வலியை உணரமுடிகிறது.

இனிமே வாழைப்பழத்தை பாருக்கும்போதெல்லாம் அதை சுமந்துசெல்பவர்கள் தான் நியாபகம் வருவாங்க, இனி வாழைப்பழம் முன்னமாதிரி தித்திக்குமானு கூட தெரியல. இயல்பான கதாப்பாத்திரங்களோடு அமைந்திருக்கும் யதார்த்தமான கதையில் அவ்வளவு அழகியல் இருக்கு, நகைச்சுவை இருக்கு, ஸ்டைல் இருக்கு, ரொம்ப அழகா படம் பண்ணிருக்கார்.

இசை, சினிமடோகிராபி, சவுண்ட், லிரிக்ஸ்னு எல்லா டெக்னீசியன்ஸும் நல்லா பண்ணிருந்தாங்க, ஒரு இலக்கியம் மாதிரி இருந்தது படம். வாழ்த்துக்கள்!” என்று பாராட்டி பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி பேசியிருக்கும் வீடியோவில், “வாழை அற்புதமான திரைப்படம். படம் முடிந்ததுபோல் தெரியவில்லை. இன்னும் அதற்குள்ளேயே இருக்கிறேன். செய்தித்தாள்களில் சாதாரணமாக சில விசயங்களை கடந்துபோயிடுறோம், அதுக்கு பின்னாடி எப்படியான வாழ்க்கை இருக்குனு தத்ரூபமா காட்டியிருக்கார். இப்படி ஒரு படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி.

இந்த மாதிரி வாழ்க்கையைத் தெரிந்துகொள்வது நம் வாக்கையில் பல கேள்விகளை எழுப்பும் என நம்புகிறேன். இந்த அற்புதமான படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள், ஒரு அற்புதமான அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்” என்று பாராட்டியுள்ளார்.

அதேபோல், இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகவும் உருக்கமான ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

“படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் என்னால் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. இந்தப் படம் என்னில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார் ஜிப்ரான்.