சினிமா

தயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று ரஜினி நினைப்பார் - இயக்குநர் ஷங்கர்

webteam

ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அனிருத் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று ரஜினிகாந்த் நினைத்து வேலை செய்பவர். நான் ரஜினியுடன் பணியாற்றி ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும் தினம் தினம் அவரை நினைத்துக்கொள்வேன்.

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவருடன் முதல் முறை கம்போசிங் அமைக்க அமர்ந்தேன், காட்சி வரும் நிகழ்வை கூறினேன். முதல் ட்யூன் போட்டார். அதுவே ஓகே ஆகிவிட்டது. அதேபோல் இரண்டாவது பாடலும் ஓகே. ஆனால் மூன்றாவது பாடலுக்கு ஐந்து ட்யூன் வரை சென்று விட்டது.

'ஐந்தாவது ட்யூன் போக போக பிடிக்கும்' என்று நான் சொன்னேன். ஆனால் 'ட்யூன் கேட்ட உடனே பிடிக்க வேண்டும்' என்று அனிருத் சொன்னார். சில நாட்கள் கழித்து 'முதல் ட்யூனே நல்ல இருக்கு' என்று கூறினேன். அனிருத்தும் அதையே சொன்னார். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்க வேண்டும் என்று அனிருத் வேலை செய்கிறார் என்று அனிருத்தை புகழ்ந்தும் ஷங்கர் பேசினார்.