ஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன் web
சினிமா

’குத்தி குத்தி கிழிச்சாங்க; இன்னும் அழுதிட்டே இருக்கன்’-ஆயிரத்தில் ஒருவன் குறித்து செல்வராகவன் வேதனை

Rishan Vengai

காலங்காலமாக கமர்சியல் மசாலா திரைப்படங்களை மட்டுமே கொடுத்துவந்த தமிழ்சினிமாவுக்கும், அதையே பார்த்து பார்த்து கொண்டாடிய தமிழ்சினிமா ரசிகர்களுக்கும் 2010-ம் ஆண்டு புதிய ஜானரில் உலகத்தரம் வாய்ந்த சினிமாவை ’ஆயிரத்தில் ஒருவன்’ மூலம் தமிழ்த்திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் செல்வராகவன்.

ஆயிரத்தில் ஒருவன்

சோழர்களின் இசை, புராணம் என அனைத்து துறைகளிலும் இயக்குநரின் ஆய்வுப்பணி சிறந்து விளங்கியிருந்தது, அவரின் தேடுதலுக்கும் அர்ப்பணிப்புக்கும் ஏற்ற நடிகர்கள் மற்றும் கலை இயக்குநர்களையும் செல்வா படத்தில் கொண்டிருந்தார். நடிகர்கள் என பார்த்திபன், கார்த்தி, ரீமேசென் என அனைவருமே அசத்தலான நடிப்பையும், படத்தின் ஆன்மாவாக இசையை கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் மற்ற கலை இயக்குநர்கள் அனைவருமே படத்திற்காக உயிரை கொடுத்து வேலை செய்திருந்தனர்.

ஆயிரத்தில் ஒருவன்

12 ஆம் நூற்றாண்டில், சோழர்கள் பாண்டியர்களால் தோற்கடிக்கப்படுகின்றனர், இதனால் சோழ மன்னனும் அவனது மக்களும் பாண்டியர்களுடைய மீன் சிலையுடன் தலைமறைவாக சென்று வாழ்ந்துவருகின்றனர். எப்படியும் நல்லகாலம் வரும், செய்தியை தூதன் ஒருவன் எடுத்துவருவான், சோழர்குலம் அழியாமல் தழைத்து வாழும் என்ற நம்பிக்கையுடன் சோழ மக்கள், தங்களை யாரும் நெருங்கி விடக்கூடாது என 7 பொறிகளை வைத்து வாழுகிறார்கள். அதற்குபிறகு 8 நூற்றாண்டுகளுக்கு பின் அவர்களை தேடிச்செல்லும் ஒரு ஆராய்ச்சியாளரை பின்தொடர்ந்துவரும் எதிரிக்குழு என படம், அதுவரை தமிழ்சினிமா பார்க்காத கதைக்களத்தை கொண்டிருந்தது. படத்தின் இயக்கமும், பின்னணி இசையும் எக்காலத்திற்குமான சிறந்த படைப்பாற்றலை கொடுத்திருந்தது.

ஆயிரத்தில் ஒருவன்

ஆனால், படம் திரையரங்கில் வெளியானபோது அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை, படத்தை எடுத்த இயக்குநர் என்னதவறு செய்தோம் என புரியாமலேயே தன்னுடைய திறமையை அவருக்குள் பூட்டிக்கொண்டுவிட்டார். தற்போது இருக்கும் பான் இந்தியா கலாச்சாரம் அப்போது இருந்திருந்தால், தமிழ்சினிமா கனவுகாணும் ஆயிரம்கோடி வசூல் என்ற சாதனையை 2010-ம் ஆண்டே ஆயிரத்தில் ஒருவன் மூலம் தமிழ்த்திரைத்துறை எட்டியிருக்கும், தமிழ்சினிமா பாகுபலியை ஆச்சரியத்துடன் பார்த்திருக்காது.

இந்நிலையில் ஆயிரத்தின் ஒருவன் திரைப்படம் கொடுத்த வலியை பகிர்ந்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

பாம்புகள், தேள்கள், அட்டைகள் கூடதான்..

எப்போதும் ஆயிரத்தின் ஒருவன் திரைப்படம் குறித்து பேசாத செல்வராகவன், சமீபத்திய இண்டர்வியூ ஒன்றில் மனம்திறந்து பேசியுள்ளார். அந்த இண்டர்வியூவில் அவர் தன்னுடைய டீமுக்காக ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.

செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் குறித்து பேசியிருக்கும் அவர், “நிறைய பேரு என்னை எத்தனையோ முறை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து பேச சொல்லிருக்காங்க, எனக்கு என்னமோ பேசவே தோணல. ஏன்னா அந்த படம் கொடுத்த ரணங்கள், மனசு முழுக்க காயங்கள், தழும்புகள், அது இன்னைக்குமே கூட வலிச்சிக்கிட்டே தான் இருக்கு. எனக்கு பேச தோணல, அவ்வளவு வலியை யாருமே எதுக்குமே அனுபவிச்சு இருக்க மாட்டாங்க.

ஆயிரத்தில் ஒருவன் படம் ஆரம்பிக்கும் போது, அது ஒரு புது அனுபவமா மக்களுக்கு கொடுக்கனும்னு நினைச்சன். ஆரம்பிச்ச உடனே எனக்கு மிக நல்ல விசயமா புரிஞ்சது, அந்த படத்துல இணைந்த நடிகர்கள், டெக்னீசியன்ஸ் எல்லோருமே உயிரை கொடுத்து உழைக்குற ஒரு நல்ல தங்கமான டீம் எனக்கு கிடைச்சாங்க. அது எனக்கு மட்டுமில்ல எல்லோருக்குமே மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.

ஆயிரத்தில் ஒருவன்

எல்லாரும் சேர்ந்து உழைக்க உழைக்க படத்தை எடுப்பது எவ்வளவு கடினமான விசயம் என புரிஞ்சது. இருந்தாலும் நாங்க எங்கள் முயற்சியை விடாம ஒவ்வொரு நாளும் பாம்புகள், தேள்கள், அட்டைகள் கூடனு ஒரு போராட்டத்தோட ஷூட்டிங் பண்ணோம். ஒவ்வொரு நாளும் அவ்வளவு கஷ்டத்தோட போச்சு ஆயிரத்தில் ஒருவன் படம்.

பாதி படத்தின் ஷூட்டிங்போதே எனக்கு நல்லா புரிஞ்சது, இந்த படத்தை நிர்ணயிச்ச பட்ஜெட்ல எடுக்க முடியாதுனு, உடனே தயாரிப்பாளரை அழைத்து சார் நம்ம நினைச்ச பட்ஜெட்ல இந்த படத்தை பண்ணமுடியாது, நான் உங்கள சிரமப்படுத்த விரும்பல, மீதிபணத்தை நான்போட்டு படம் பன்றன், உங்களுக்கு வட்டியோட திரும்ப கொடுத்துடுறன்னு சொன்னன். ஆனால் தயாரிப்பாளர் ரவீந்திரன் நல்ல மனுஷன், இல்ல நான் இப்படி ஒரு படம் பண்ணனும்னு சொல்லி இன்னும் 5கோடி கொடுக்குறதா சொன்னாரு. ஆனால் 5கோடிக்கு மேலையும் படத்திற்கான செலவு இழுத்ததால, நானே வட்டிக்கு கடன்வாங்கி படத்தை எடுத்து முடிச்சன்.

ஆயிரத்தில் ஒருவன்

படத்தை முடிச்சிட்டு போஸ்ட் புரடக்சனுக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம், முக்கியமா VFX-க்குலாம் என்ன பண்ணபோறோம்னு நினைச்சோம், எத்தனையோ இரவுகள் தூக்கத்தை இழந்து எடுத்த படத்தை விடக்கூடாதுனு ப்ரைம் போக்கஸ் கம்பெனிலயே கிடந்து ஒருவழியா புரடக்சன் வேலையையும் முடிச்சோம்.

குத்தி குத்தி கிழிச்சாங்க.. இப்பவும் அழுத்துட்டுதான் இருக்கன்!

ஆனால் படம் வெளியான தருணத்திற்கு பிறகு எல்லாமே தலைகீழாக மாறியது. படம் வெளியான நேரத்துல இருந்து ஒவ்வொருவரும் குத்தி குத்திக் கிழிக்குறாங்க, ரத்தம் ரத்தமா துண்டு போடுறாங்க, இவன் யாரு இப்படி படம் எடுக்குறதுக்குனு போஸ்டர் ஒட்டுறாங்க, எனக்கு ஒன்னுமே புரியல.. எதனால இப்படி நடக்குது. நாட்கள் போகப்போக இன்னும் எதிர்ப்புகள் சேர்ந்துகிட்டே போகுதே தவிர குறையவே இல்ல.

இதுக்கு நடுவுல ஆயிரத்தில் ஒருவன் படம் தெலுங்குல ரிலீஸ் ஆகுது, அங்க படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்குது, படம் நல்லா ஓடுது, அது கொஞ்சம் ஆறுதலா இருந்தது, அங்கபோய் படத்துக்கு புரமோசன் பன்றோம்.

ஆயிரத்தில் ஒருவன்

ஆனா ஆயிரத்தில் ஒருவன் படத்தால எனக்கு இருக்குற வலி என்னனா, எனக்கு எதுவும் வேணாம், எனக்கு தேவையில்ல, ஆனா படத்துல உழைச்ச கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன், டெக்னீசியன்ஸ்னு பல்லாயிரக்கணக்கான பேருக்கு எதாவது அங்கீகாரம் கிடைக்காமலேயே போயிடுச்சேன்ற வலி அதிகமா இருக்கு. முக்கியமா ராம்ஜி சொல்லலாம், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ சொல்லலாம், அவரெல்லாம் தூங்கவே இல்ல படத்தோடவே வாழ்ந்தார்னு சொல்லணும், இப்படி உழைச்சவங்களுக்கு ஒரு அங்கீகாரம் கூட யாருமே கொடுக்கலேயேன்ற வலிதான் அதிகமா இருக்கு. அத நினைச்சு இன்னைக்கு வரைக்குமே அழுதுட்டே தான் இருக்கன்.

இந்த ஒன்னே ஒன்ன மட்டும்தான் கேட்குறன்..

நான் ஒன்னே ஒன்னு மட்டும்தான் கேட்க நினைக்குறன், ஆயிரத்தில் ஒருவனுக்கு முன்னாடி வரைக்கும் அரசர்கள் பத்தி படம் எடுக்கனும்னா எந்தமாதிரி படங்கள எடுத்துட்டிருந்தோம், நமக்கு தெரிஞ்ச அரசர்கள் எல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி அழகா அலங்காரம் பண்ணிகிட்டு இருக்குற மாதிரியான படங்கள் தான் வந்திருக்கு.

ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக நாங்க நிறைய ரிசர்ஜ் பண்ணி தான் காமிச்சோம், சோழ அரசர்கள் இப்படிதான் இருந்தாங்க இப்படியெல்லாம்தான் நடந்தது, எவ்வளவோ கல்வெட்டுகள் மூலமாக தேடிப்பிடிச்சு கிடைச்ச உண்மை இதுதான். இப்போ எல்லாருமே சோழர்கள்னு ஆயிரத்தில் ஒருவன் படத்தை அங்கீகரிக்குறாங்க, சோழப்பயணம் தொடரும்னு சொல்றாங்க, ஆனா படம் வெளியானபோது ஏன் கிடைக்கலனு நினைச்சா சிரிப்பா இருக்கு.

ஆயிரத்தில் ஒருவன்

கார்த்தி மட்டும் படம் வெளியாகுறதுக்கு முன்னாடியே ஒரு விசயத்தை கேமராமேன்கிட்ட சொனனாரு, ஆயிரத்தில் ஒருவன் கிளைமேக்ஸ் ரொம்ப உணர்ச்சிகரணமான விசயமா இருக்கு, சார் கிட்ட கேளுங்க பண்ணனுமா சரியா வருமானு சொன்னாரு. ஆனா அந்தநேரத்துல அது சரியாதான் இருக்கும்னு நினைச்சு படம் எடுத்தாச்சு. ஆனால் எனக்கு இப்போ புரியுது நம்மளோட வேதனை, பக்கத்துல நமக்கு நடந்த கொடுமை, தமிழர்கள் இப்படி இறந்துபோறது எதையும் மக்கள் திரையில பார்க்க விரும்பலனு எனக்கு இப்போ புரியுது.

ஆயிரத்தில் ஒருவன்

இப்போவும் நான் ஒன்னுமே கேட்கல தமிழ் அரசர்கள் பற்றி இப்போது படம் பன்றவங்க எங்களுக்கு ஒரு நன்றிகார்டாவது போடுங்க, ஏன்னா எங்களுக்கு முன்னாடி அந்த கரடுமுரடான முள்பாதைல உருண்டுட்டு போனவங்க யாரும் இல்லை. நானும், என் டீமும் தான் அதை செய்தோம், அதுக்கான சின்ன அங்கீகாரம் மட்டும் போதும், இதுதான் என்னோட தாழ்மையான வேண்டுகோள்!” என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.