சினிமா

சரசர சார காத்து பாடலில் முடிவெடுத்தது நான் தான் இயக்குநர் சற்குணம்

சரசர சார காத்து பாடலில் முடிவெடுத்தது நான் தான் இயக்குநர் சற்குணம்

webteam

96 படம் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. நிறைய ஹிட் பாடல்களை கொடுத்தாலும் அதிக வெளிச்சத்தில் வராமலே இருந்த கார்த்தி நேத்தா 96க்கு பிறகு அதிகம் பேசப்பட்டு வருகிறார். இதற்கிடையே வாகை சூடவா படத்தில் 'சரசர சாரக்காத்து' பாடலை எழுதியது கார்த்திக் நேத்தா என்றும் அதில் சில வரிகளை வைரமுத்து மாற்றி அமைத்து அவரது  பெயரில் வெளியிட்டதாகவும் செய்திகள் வெளியானது. 

இந்த விவகாரம் குறித்து சம்பந்தபட்டவர்கள் அனைவரும் அமைதிகாத்து வந்த நிலையில் தற்போது வாய்திறந்துள்ளார் வாகை சூடவா திரைப்படத்தின் இயக்குநர் சற்குணம். ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் பாடல் விவகாரம் குறித்து விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

அவர் அளித்துள்ள பேட்டியில், ''பாடல் பதிவின் போதே டம்மி வரிகளை போடுவது உண்டு. பிறகு அந்த டம்மி வரிகள் பாடலாசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். டம்மி வரிகளை நீக்கிவிட்டு பாடலாசிரியர் தங்களது வரிகளை எழுதி அனுப்புவார்கள். இப்படித்தான் சர சர சாரக்காத்து பாடலுக்கும் நடந்தது. பாடலுக்கான டம்மி வரிகளை கார்த்திக் நேத்தா எழுதினார். அந்த டம்மி வரிகள் வைரமுத்துவுக்குப் போனது. அவர் டம்மி வரிகளை நீக்கிவிட்டு அவரது வரிகளை எனக்கு அனுப்பினார்.

நான் தான் டம்மியில் இடம்பெற்ற சில வரிகளைப் பாடலில் பயன்படுத்தினேன். இந்த விஷயம் அப்போது வைரமுத்துவுக்கே தெரியாது. எந்த வரிகள் எங்கே இருந்தால் நல்லா இருக்கும் என்ற முடிவை இயக்குநர்களே எடுப்பார்கள். அப்படி நான் எடுத்த முடிவுதான் அது. நடந்த உண்மை எனக்கும் ஜிப்ரானுக்கும்தான் தெரியும். இந்த சர்ச்சையில் அவர்கள் இரண்டு பேர் மீதும் தவறில்லை. உண்மை என்ன என்பதை விளக்க வேண்டிய இடத்தில் நான்தான் இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமான மதன் கார்க்கி, ''சரசர சாரக்காத்து விவகாரத்தில் இயக்குநர் சற்குணம் விளக்கம் அளித்துள்ளார். இதே போல் சம்பவம் எனக்கும் நடந்துள்ளது. எனக்கு தெரியாமலேயே எனது 3 பாடல்களின் வரிகளை இசையமைப்பாளரும், இயக்குநரும் மாற்றி இருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.