நந்தன் முகநூல்
சினிமா

"சூரி அண்ணன் நடிக்க எழுதிய கதைதான் ‘நந்தன்’.. ஆனால்.." - இயக்குநர் இரா.சரவணனின் நெகிழ்ச்சியான பதிவு

ஜெனிட்டா ரோஸ்லின்

உடன்பிறப்பே படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த படம்தான் நந்தன். சமீபத்தில் இப்படம் குறித்து நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதில், “ படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது - நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை! அன்பு இரா. சரவணனன் அண்ணனுக்கும், சசிகுமார் அண்ணனுக்கும், ஜிப்ரான் சகோதரருக்கும் நந்தன் குழுவினர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் சூரி படம் பார்த்த தருணம் குறித்து நந்தன் பட இயக்குநர் இரா. சரவணன் நெகிழ்ச்சியாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிடுள்ளார். அந்தப்பதிவில், ”சூரி அண்ணன் நடிக்க எழுதிய கதைதான் ‘நந்தன்’. ஆனால், ‘விடுதலை’க்காக அண்ணன் தன்னையே ஒப்படைத்திருந்த நேரம். அதனால், சசிகுமார் உள்ளே வந்தார்.

படம் ரெடியான நிலையில், சூரி அண்ணனுக்குப் போட்டுக் காட்டினோம். இரவு 9 மணிக்கு வள்ளுவர் கோட்டம் டி.எஸ்.ஆர். திரையரங்கில் படம் முடிந்தது. வெளியே வந்து என் விரல்களைப் பற்றியவர், படம் குறித்துப் பேசி முடித்தபோது மணி அதிகாலை 1:30. அண்ணா சாலை பிலால் ஹோட்டலுக்கு அழைத்துப்போய் உணவு வாங்கிக் கொடுத்தார்.

15 வருடங்களுக்கும் மேலான பழக்கம். ஆனால், எதையும் உரிமையாகக் கேட்கிற, வற்புறுத்துகிற அளவுக்கு என் குணம் இல்லாததை வேதனையாகக் குறிப்பிட்டார். “பிடுங்கிட்டுப் போறவங்களுக்குத்தான் இங்க வாழ்க்கை. அன்பும் தயக்கமும் நமக்கு எதையுமே செய்ய மாட்டேங்குதே…” எனச் சூரி அண்ணன் சொன்னபோது, நான் உடைந்துபோய் நின்றேன். மறுபடியும் ‘நந்தன்’ குறித்தே பேசத் தொடங்கியவர், “உங்க படம்கிறதுக்காக சொல்லலை… இந்த பாதிப்பு எனக்குள் அடங்க ரொம்ப நாளாகும்ணே” என்றார் கைகளை அழுந்தப் பிடித்துக்கொண்டு.

அதிகாலை 2:30 மணிக்கு காரில் ஏறிக் கிளம்பும்போதும், சூரி அண்ணனின் கண்களில் நிலைத்திருந்த கண்ணீர், ‘நந்தன்’ படத்துக்கான நெகிழ்ச்சி முத்தம்." என்று பதிவிட்டுள்ளார்.”