‘பத்மாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தாக்கப்பட்டார்.
மாபெரும் வெற்றி பெற்ற பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் பத்மாவதி. ராஜபுத்திர வம்சத்தை சார்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்கர் கோட்டையில் நடைபெற்று வருகிறது. அலாவுதீன் கில்ஜி மற்றும் ராணி பத்மினி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவிய கதையில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ராஜஸ்தான் வரலாற்று நாயகர்களில் ஒருவரான ராணி பத்மினி பற்றி தவறாக சித்தரிக்கப்படுவதாகக் கூறி ராஜபுத்திர சமுதாய அமைப்புகள் தொடக்கம் முதலே இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் படத்தில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இடையே காதல் காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும் இது வரலாற்றை சிதைக்க முற்படுவதாகவும் கூறி போராட்டக்காரர்கள் படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை தாக்கியதோடு கேமராவையும் சேதப்படுத்தினர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
சஞ்சய் லீலா பன்சாலியை தாக்கிய 5 பேரின் முகம் அங்கிருந்த கேமராவில் பதிவானது. இதையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இச்சம்பவம் குறித்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி காவல்துறையில் புகார் அளிக்காததால் காவல் துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்தனர்.
இயக்குனர் பன்சாலி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கரன்ஜோகர், ப்ரியங்கா சோப்ரா உட்பட பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.