நயன்தாரா-விக்னேஷ் சிவன் மற்றும் தனுஷ் web
சினிமா

“திருமணத்தை வியாபாரமாக செய்வதென்பதே புதிது; அதிலும் அதற்கு பணம் கேட்பது..” - இயக்குநர் ராசி அழகப்பன்

தனுஷுக்கு எதிராக நயன்தாரா எழுதியுள்ள கடிதம்தான் தற்போது பெரும் பேசுபொருளாக உள்ளது. அடுக்கடுக்காக நயன்தாரா வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன காரணம் .. இயக்குநர் ராசி அழகப்பன் கூறுவதென்ன என்பதைப் பார்க்கலாம்..

PT WEB

போராடிப் பெற்ற இடம்

கஸ்தூரி ராஜாவின் மகனும், செல்வராகவனின் தம்பியான அன்புக்குரிய தனுஷ் அவர்களே.... இதுதான் நயன்தாராவின் கடிதத்தின் முதல் வரி. இது சாதரணமாக சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல.... உங்கள் அப்பாவும், அண்ணும்தான் உங்களின் முதல் அடையாளம் என்பதே இதற்கு பொருள்.

"போலி முகமூடி அணிந்துவரும் தனுஷ்" - நயன்தாரா

உங்களை போன்றவர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துவிடும்... ஆனால் தனக்கு அப்படி அல்ல... போராடித்தான் இந்த இடத்தை பிடித்துள்ளதாக கடிதத்தில் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். தன் வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள ஆவணப் படத்தில், மகத்துவமான காதலை கண்டடைந்த "நானும் ரவுடி தான்" திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது என நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். அந்த படத்தின் காட்சிகள், பாடல்களை பயன்படுத்தும் வகையில் தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம், தடையில்லாச் சான்றிதழைப் பெற 2 ஆண்டுகள் வரை காத்திருந்ததாகவும், ஆனால் அது பலனிக்காததால் அந்த முடிவை கைவிட்டதாகவும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இன்னும் மறக்கவில்லை

நானும் ரவுடி தான் திரைப்படத்திற்காக இதயத்திலிருந்து எழுதப்பட்ட வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் புரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வெளியான ஆவணப் படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற 3 விநாடி காட்சிகளுக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இருப்பது விநோதமாக உள்ளதாகவும், கீழ்த்தரமான இந்தச் செயல், தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் அந்த கடிதத்தில் நயன்தாரா விமர்சித்துள்ளார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் மற்றும் தனுஷ்

நானும் ரவுடிதான் படம் எடுத்து பத்து ஆண்டுகள் ஆனாலும் நீங்கள் அப்போது சொல்லிய வார்த்தையை இன்னும் நான் மறக்கவில்லை எனவும் சாடியுள்ளார். 2016 பிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா சிரித்துக்கொண்டே தனுஷை வஞ்ச புகழ்ச்சி செய்திருப்பார். நானும் ரவுடிதான் படத்திற்காக விருது பெற்ற நயன்தாரா தனுஷுக்கு தனது நடிப்பு பிடிக்கவில்லை என்றும் என்னை மன்னித்து விடுங்கள் தனுஷ் எனவும் குறிப்பிட்டிருப்பார்.

இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் மட்டும் முகமூடி அணிந்து கொண்டு தனுஷ் பேசுவதாகவும் நயன்தாரா கடுமையாக சாடினார். நீங்கள் எதேனும் கதையை புனைந்து, பஞ்ச் வரிகளுடன் அடுத்த இசை வெளியீட்டு விழாவில் பேசலாம்... ஆனால் கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை தனுஷ் குறித்து சர்ச்சைகள் அவ்வப்போது வந்து செல்லும்... ஆனால் அவை வந்த வேகத்தில் கடந்து செல்லப்படும் ஒன்றாக இருக்கும். ஆனால் நயன் தாராவின் இந்த குற்றச்சாட்டுகள் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

திருமணத்தை வியாபாரமாக செய்வதே தமிழுக்கு புதிது...

இயக்குநர் ராசி அழகப்பன்

இயக்குநர் ராசி அழகப்பன் இதுதொடர்பாக கூறுகையில், “ஒரு படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தும்போது எனக்கு உரிய பணத்தை தாருங்கள் என கேட்பது தயாரிப்பாளரின் உரிமை. அதைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால், பணம் என்பது விஷயமல்ல. நமது திரைப்படத்தில் நடித்த கதாநாயகி என விட்டுக்கொடுத்திருக்கலாம். இருவருக்கும் இடையிலான நட்பில் பிணக்கு ஏற்பட்டதுதான் வியாபாரத்தில் தொந்தரவாக மாறியுள்ளது. அந்த தொந்தரவில்தான் 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்கிறார்.

உண்மையில், 5 நிமிடங்கள் இருவரும் பேசி இருந்தாலே இந்த பிரச்னை தீர்ந்திருக்கும். இது நண்பர்களுக்கு இடையேயான சண்டைதான். திருமணத்தை வியாபாரமாக செய்வது என்பதே தமிழ் உலகுக்கு புதிது. அந்த புதிதான விஷயத்தில் 3 நொடிகளுக்கு காசு வேண்டும் என கேட்பது இன்னும் புதிது” என தெரிவித்துள்ளார்.