சினிமா

அடிமட்ட அரசியல் தொண்டனைப் பற்றி பேசும் ‘பப்ளிக்’ : இயக்குநர் ரா.பரமனின் பிரத்யேக பேட்டி

அடிமட்ட அரசியல் தொண்டனைப் பற்றி பேசும் ‘பப்ளிக்’ : இயக்குநர் ரா.பரமனின் பிரத்யேக பேட்டி

சங்கீதா

இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி மற்றும் காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ளது ‘பப்ளிக்’ என்ற திரைப்படம். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு யுகபாரதி பாடல் எழுதுகிறார். செய்தியாளராக இருந்து, தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ள ரா.பரமன் என்பவர், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நாம் பெரும்பாலும் அறியப்படும், பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இல்லாமல், வித்தியாசமாக இருந்தது. சிங்காரவேலர், டாக்டர் சி. நடராசன், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன், காயிதே மில்லத் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள இந்தப் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அரசியல் கட்சி தொண்டர்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த சில தினங்களுக்கு முன்னர், நடிகர் விஜய்சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபும் இணைந்து வெளியிட்டனர். இதனால் இந்தப் பட போஸ்டர் வைரலானநிலையில் இயக்குநர் ரா. பரமனிடம், அவரைப்பற்றியும், அவரது படங்கள் குறித்தும், நமது ‘புதிய தலைமுறை’ இணையதளத்திற்காக, பிரத்யேகமாக அளித்த தகவலை இங்கு சிறு தொகுப்பாக காணலாம்.

செய்தியாளராக இருந்து திரைப்பட இயக்குநராக மாறியதற்கு என்ன காரணம்?

எனக்கு சொந்த ஊர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுர். கடந்த 12 வருடங்களாக செய்தித்துறையில் இருந்துள்ளேன். தமிழகத்தில் பெரும்பாலான செய்தி நிறுவனங்களில், அரசியல் சார்ந்த நிருபராக பணிபுரிந்துள்ளேன். செய்தித்துறை மற்றும் திரைப்படத்துறை இரண்டுமே மக்களிடம் உலக நடப்புகளை கொண்டு சேர்க்கும் ஊடகங்களாக இருந்தாலும், திரைப்படத்துறை சற்று மாறுதல்பட்டது. அதிகளவிலான மக்களை சென்றடையும் என்பதால், திரைப்படத்துறை மூலம் நமது கருத்துகளை வெளிக்கொணரலாம். அதனால், தற்போது திரைப்பட திறையை தேர்ந்தெடுத்துள்ளேன்.

திரைப்படத்துறையில் தங்களது அனுபவம்?

இயக்குநர் கரு பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’, ‘மந்திரப்புன்னகை’ மற்றும் இயக்குநர் ராஜூமுருகனின் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். 

படத்தின் போஸ்டரில் பெரியார், அண்ணா போன்றோர்கள் இல்லாமல், அதிகளவில் நாம் பேசப்படாத அரசியல் தலைவர்கள் இருப்பது குறித்து?

போஸ்டரில் இருக்கும் அரசியல் தலைவர்கள் குறித்து, ஒரு விளக்கம் மட்டுமே சரியாக இருக்காது. என்னுடைய அரசியல் பார்வையில் பார்க்கும்போது, எனக்கு ஒரு விளக்கம் தோன்றும். மற்றொருவருக்கு வேறு ஒரு விளக்கம் தெரியும். ஒவ்வொருவருக்கும் அரசியல் பார்வையின் அடிப்படையில் மாறுபாடு தெரியும். படத்திற்கு தேவையான மாதிரிதான், போஸ்டரில் அரசியல் தலைவர்கள் வைத்துள்ளேன். ‘பப்ளிக்’ என்ற கதைக்களத்தில், போஸ்டரில் இருக்கும் தலைவர்களின், அரசியல் எல்லைகளை எடுத்துவிட்டுப் பார்த்தால், அவர்களை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கலாம். ஆனால் நாம் எல்லோரும் இவர்கள் அனைவரையும், அரசியல் எல்லையிலேயே பார்த்துக்கொண்டிருப்போம். நமக்கு இருக்கிற அரசியல் பார்வையின் அடிப்படையில், அந்தத் தலைவர்களை பார்ப்போம். ஆனால், அவர்கள் யாரும், தனிப்பட்ட அரசியல் பார்வையில் செயல்படவில்லை. அதேமாதிரி இவர்கள் எல்லோரும் தொண்டர்களோடு தொண்டர்களாக, மக்களோடு மக்களாக இணைந்திருந்தார்கள். இவர்கள் எல்லாருமே தமிழர்கள் என்ற பார்வையிலும் பார்க்கலாம். இவ்வாறு பலப் பார்வையாளர்கள் இருக்கிறது.

‘பப்ளிக்’ திரைப்படத்தின் கதைக்களம் பற்றி?

பொதுவாக அரசியல் கட்சிகளின் முக்கிய தூண்களே அக்கட்சியின் தொண்டர்கள்தான். என்னதான் மக்கள் அந்தக் கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டாலும், அந்தக்கட்சியின் ஓட்டு வங்கித்தான் அந்தக் கட்சியை ஜெயிக்க வைக்கிறது. அதனால் தொண்டர்களுக்குள்ளான அரசியல், அவர்கள் அரசியல் எப்படி செய்கிறார்கள், அரசியல் அவர்களுக்கு எப்படி இருக்கிறது, அரசியல் கட்சி ஆளும் கட்சியாக இருக்கும்போது, தலைவர்களுக்கு கிடைக்கும் அதிகாரம், கீழ்மட்ட தொண்டர்களுக்கு கிடைக்காதது, ஒரே கட்சியில் இருவேறு நிலைப்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட, தொண்டனின் வாழ்க்கைத்தான் இந்தப்படத்தின் கதைக்களம்.

படத்தின் வேலைகள் தற்போது எந்த நிலையில் உள்ளது?

தற்போது ‘பப்ளிக்’ திரைப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது. பிப்ரவரி மாத இறுதியில், அதாவது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘பப்ளிக்’ திரைப்பட போஸ்டரில் பெரியார், அண்ணா ஏன் இல்லை?

இந்தப் போஸ்டரில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும், ஒரு தளத்தில் இருந்து, அடுத்த தளத்திற்கு அரசியலை எடுத்துச் சென்றவர்கள். போஸ்டரில் முதலாவதாக இருக்கும் சிங்காரவேலர், சயின்ஸ் பிக்ஷன் பற்றி அதிகம் எழுதியிருக்கிறார். அறிவியலில் இருந்து அரசியலை பார்த்திருக்கிறார். அதுபோல், இந்தப் போஸ்டரில் இருக்கும் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் உள்ளது.

தற்போது மக்களால் அதிகம் அறியப்பட்ட எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாமல், ‘பப்ளிக்’ போஸ்டர் இருப்பது குறித்து?

இந்தப் போஸ்டரில் இருப்பவர்களுக்கும், இந்தப்படத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால், இந்தப் போஸ்டரில் இருப்பவர்களின் அரசியலுக்கும், இந்தப் படத்தில் இருக்கிற கதையோட அரசியலுக்கும் சின்ன தொடர்பு இருக்கிறது. அண்ணா ஏன் இல்லை, கக்கன் ஏன் இருக்கிறார் என்று சொல்லுகிறோம் இல்லையா, அதற்கான விடைப் படத்தில் உள்ளது. தொண்டர்கள் மூலமாக சொல்ல வருகிறோம்.

அரசியல் தலைவர்களுக்காக எதையும் செய்யும் தொண்டர்கள் சார்ந்த படமா இது?

இல்லை. பொதுவாக எந்த ஒரு கட்சிக்கும் உண்மையாக உழைக்கும் தொண்டர்கள், அந்தக் கட்சியை வைத்து எந்த பலனையும் அனுபவித்துக்கொள்ள மாட்டார்கள். அரசு அலுவலகங்களிலோ, எந்த இடங்களிலுமே, கட்சியை பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை கட்சி தலைவர்கள் மட்டுமே. அதைத்தாண்டி பிழைக்கும் தொழிலாக கட்சியை பார்க்காமல் இருக்கும் அடிமட்ட தொண்டர்களின் கதையைத்தான் படமாக்கியுள்ளோம்.

சமுத்திரக்கனி படங்கள் என்றாலே கருத்து என்பதற்கு ஏற்ப இந்தப் படமும் கருத்து சொல்லப்போகிறதா?

இல்லை. இந்தப்படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு தொண்டர் தான். பொதுவாக தமிழக அரசியலை மையமாக வைத்து எடுக்கும்போது, திராவிடக் கட்சிகளை பற்றியும் சொல்லாமல் போக முடியாது. அதனால் இந்தப் படத்திலும் திராவிடக் கட்சிகள் பற்றி இருக்கும்.

அரசியல் படம் என்பதால் எந்த காலக்கட்டத்தை சார்ந்தது?

சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதான படம் இது இல்லை. திராவிடக் கட்சிகள் காலத்தில் சொல்லப்படும் கதைதான். குறிப்பாக 2000-ம் ஆண்டை ஒட்டிய கதைக்களம்தான் ‘பப்ளிக்’ திரைப்படம். திராவிடக்கட்சிகளின் தொண்டர்கள் குறித்தான கதைதான் இது.

அரசியல் கட்சி குறித்த படம் என்பதால் தொண்டர்கள் மோதல் பற்றிய படமா இது?

நிச்சயமாக இல்லை. ஒரு கட்சி ஒரு சித்தாந்தத்தில் இயங்குகிறது. அந்தக் கட்சி அந்த சித்தாந்தத்தை விட்டு விலகுகிறது. அப்போது அந்தக் கட்சியின் தொண்டர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது பற்றிய கதைதான். ஒரு கட்சியில் ஒரு தொண்டர் இணைகிறார் என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒரு கட்சியின் தலைவரை (எடுத்துக்காட்டு : கருணாநிதி, எம்.ஜி.ஆர்,, ஜெயலலிதா) விரும்பி வந்திருக்கலாம். ஆனால் அந்த தலைவர்கள் இல்லை என்றால், அந்தக் கட்சியின் தொண்டன் எதற்காக அந்தக் கட்சியில் இருக்க வேண்டும், அந்த தொண்டனின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்பது பற்றியது. அரசியல்வாதியாக இருந்து மக்களாக மாற வேண்டும் என்பதை சார்ந்ததுதான் இந்தப்படத்தின் கதைக்களம். சாதாரண மக்களாக இருந்து அரசியல்வாதியாக ஆனவர்கள் உண்டு. ஆனால், அரசியல்வாதியாக இருந்து மக்களாக மாறுவது எப்படி என்பதுதான் இந்தப்படத்தின் கதை. ஒரு கட்சியில் இருக்கும்போது நாம் அதிகளவில் கேள்விகள் கேட்க முடியாது. ஆனால், சாதரண மக்களாக மாறும்போது, நாம் இருந்த கட்சி தவறு செய்யும்போது கேள்வி கேட்கமுடியும். பொதுக்கள் ஒன்றாக இருந்தால், நாம் அந்தக் கட்சியை கேள்வி கேட்க முடியும். ஆனால் அரசியல் பிடிக்குள் இருக்கும்போது சாமானியர்கள் கேள்வி கேட்க முடியாது. கட்சிகள் எப்படி சாமானிய தொண்டர்களை ஏமாற்றுகிறது, அரசியல்வாதியிலிருந்து தொண்டன் விடுபடுவது ஆகியவைதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

அரசியல் தொண்டர்களை கதைக்களமாக எடுத்திருப்பதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்தப்படம் தாக்கத்தை ஏற்படுத்துதா இல்லை அதனால் ஏதாவது ஏற்படுதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு இயக்குநர் ரா. பரமன் பதிலளித்துள்ளார்.

- சங்கீதா