சினிமா

“வெங்கட்பிரபு சார், விவசாயிகளை காமெடி பண்ணாதீங்க”-பாண்டிராஜ் ட்வீட்

“வெங்கட்பிரபு சார், விவசாயிகளை காமெடி பண்ணாதீங்க”-பாண்டிராஜ் ட்வீட்

webteam

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ் எதிர்மறையான கருத்தை பதிவிட்டுள்ளார். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறி பல்வேறு அமைப்புக்கள் சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் அதை எல்லாம் மீறி பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் நேற்று ஐபிஎல் போட்டி வழக்கம் போல் சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதனை தடுத்து நிறுத்த வேண்டி பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், வைரமுத்து உள்ளிட்ட பலர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட முயன்றனர். அதே போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்நிலையில் நேற்று நடந்த போராட்டம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “நேற்று நடந்தப் போராட்டங்களில் நிறைய பேர்களிடன் பொதுநலமின்றி சுயநலமே தெரிந்தது. அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள் ப்ளீஸ்.. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுபவன் விவசாயி.” என்று குறிப்பிட்டு விட்டு இயக்குநர் வெங்கட்பிரபுவை டேக் செய்து “வெங்கட் பிரபு சார் சிஎஸ்கேவை ரசிங்க, அது உங்க உரிமை. விவசாயிகளை காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்” என பதிவிட்டுள்ளார். இவரின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்திட்டு வருகிறனர்.