‘பீஸ்ட்’ படக்குழுவினருக்கு விருந்தளித்துள்ளார் நடிகர் விஜய்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’, ‘கேஜிஎஃப் 2’ ஒரே நேரத்தில் வெளியானாலும் தமிழ் படம் என்பதால், தமிழகத்தில் ‘பீஸ்ட்’ படத்திற்கே அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன. ஆனாலும், ‘கேஜிஎஃப் 2’ படம் வசூலைக் குவித்து வருவதால் திரையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ஷாக் கொடுத்தார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். ‘கேஜிஎஃப் 2’ இதுவரை ரூ.800 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளது. ஆனால், ‘பீஸ்ட்’ குறைவான வசூலையே குவித்துள்ளது. இதற்கு காரணமாக, திரைக்கதையில் நெல்சன் கோட்டைவிட்டுவிட்டார் என்று ரசிகர்கள் மட்டுமல்ல விஜய்யின் அப்பாவே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் ‘தலைவர் 169’ படமும் கைவிடப்பட்டது என்று ட்ரெண்டிங் ஆகும் அளவுக்கு நெல்சனும் விஜய்யும் ‘பீஸ்ட்’ படத்திற்காக விமர்சிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், விஜய் ‘பீஸ்ட்’ படகுழுவுடன் செம்ம கூலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “எங்கள் அனைவரையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி விஜய் சார். பீஸ்ட் படக்குழுவினருடன் அரட்டை நிறைந்த மறக்க முடியாத மாலை அது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
படப்பிடிப்பின்போது அனைவரையும் அன்பால் வசீகரித்தீர்கள். நான் உண்மையில் பெருமைப்படுகிறேன். இந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த கலாநிதிமாறன் மற்றும் காவ்யா மாறன் ஆகியோருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று உற்சாகமுடன் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.