சினிமா

மாரி செல்வராஜின் ‘கர்ணன்’: பெங்களூர் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த இந்தியப் படமாக தேர்வு

மாரி செல்வராஜின் ‘கர்ணன்’: பெங்களூர் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த இந்தியப் படமாக தேர்வு

sharpana

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ சிறந்த இந்தியப் படமாக தேர்வாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வசூல் சாதனையையும் வரவேற்பையும் குவித்தது. கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு தமிழக அரசியல்வாதிகளே பாராட்டினார்கள். கொரோனா சூழலிலும் மக்களை திரளாக தியேட்டருக்கு வரவைத்தது. அந்தளவிற்கு, ‘கர்ணன்’ கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், பெங்களூருவில் நடந்த பெங்களூர் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியப் படமாக தேர்வாகியுள்ளது. இந்தியா உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியிட்ட நூற்றுக்கும் மேற்பட்டப் படங்களில் ‘கர்ணன்’ சிறந்த இந்தியப் படமாக தேர்வாகியுள்ளது.

அதேபோல, விரைவில் திரைக்கு வரவுள்ள ‘கட்டில்’ படம் சிறந்த தென்னிந்தியப் படமாக தேர்வாகியுள்ளது. ஏற்கனவே ‘கர்ணன்’ அமெரிக்காவின் புகழ்மிக்க தி நியூயார்க் டைம்ஸ் ஓடிடியில் பார்க்க சிறந்த 5 சர்வதேசப் படங்களைப் பட்டியலிட்டதில் கர்ணன் 4 ஆம் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற உற்சாகத்துடன் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.