சினிமா

மறைந்தார் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்

webteam

யதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 79.

இயக்குநர் மகேந்திரன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள அவர் தீவிர சிகிச்சை பிரிவில் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு டையாலிசிஸ் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் இயக்குநர் மகேந்திரன் காலமானார். மகேந்திரனின் மறைவை அவரது மகன் ஜான்மகேந்திரன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநரின் மறைவுக்கு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் மகேந்திரன் 1978-ம் ஆண்டு வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ படம் மூலம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மெட்டி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றவர் மகேந்திரன்.

நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த மகேந்திரன்,  தெறி, பேட்ட உள்ளிட்ட படங்களின் மூலம் மீண்டும் தனது முகத்தை திரையில் காட்டினார்.