இயக்குநர் மகேந்திரன் எக்ஸ் தளம்
சினிமா

பூட்டிக்கிடந்த உணர்வுகளை திறந்த மேதை; தமிழ் சினிமாவின் உதிரா பூ ’இயக்குநர் மகேந்திரன்’ பிறந்தநாள்!

அழுத்தமான படைப்புகளை மக்கள் மனதில் விதைத்தவர்கள் சிலரே. அதில் ஒருவராக இன்றும் வலம் வருபவர் இயக்குநர் மகேந்திரன். அவருக்கு இன்று 85வது பிறந்த நாள்.

Rajakannan K

அன்றுமுதல் இன்றுவரை தமிழ் சினிமா எத்தனையோ இயக்குநர்களைப் பார்த்துவருகிறது. ஒவ்வோர் இயக்குநர்களும் தனக்குரிய பாணிகளில் படமெடுத்தவர்கள் என்றாலும், அதில் மிகச் சிலரே தனித்த அடையாளத்துடன் தெரிந்தனர். அதாவது, அழுத்தமான படைப்புகளை மக்கள் மனதில் விதைத்தவர்கள் சிலரே. அதில் ஒருவராக இன்றும் வலம் வருபவர் இயக்குநர் மகேந்திரன். அவருக்கு இன்று 85வது பிறந்த நாள்... கலைஞனுக்கு மரணமில்லை என்பது போல், அவர் மறைந்துவிட்ட போது இன்றும் அவரது உன்னதமான படைப்புகளால் மக்கள் மனதில் வாழ்கிறார். இந்நன்னாளில் அவரது படப்புகள் பற்றியும், அவரது சினிமா உலகம் உருவான விதம் பற்றியும் சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு அறிவோம்.

அவர் இயக்கிய படங்கள் கொஞ்சமே என்றாலும், அனைத்தும் மக்களிடம் வரவேற்பு பெற்றவை. ஆணாதிக்கச் சமுதாயத்தையும் அவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் உணர்வுகளையும் உணர்வுபூர்வமாய்த் தீட்டியிருந்தார். உதிரிப்பூக்கள், மெட்டி ஒலி என அவரது படங்கள் ஒவ்வொன்றும் பெண்களின் உணர்வுகள் மூலம் கதைகளை சொன்ன காவியங்களே. அதனால்தான் இன்றும் திரைவானில் நட்சத்திர இயக்குநராய் மின்னுகிறார்.

இதையும் படிக்க: அமெரிக்கா | செய்யாத குற்றத்துக்காக 43 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பெண்.. உண்மை வெளிவந்தது எப்படி?

எம்.ஜி.ஆரும்... மகேந்திரனும்..

கல்லூரி மேடையில் ’சினிமா’ என்ற தலைப்பில், “நம் கல்லூரிகளில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது” என்று மகேந்திரன் பேசியதை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர்., “நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்வுடன்கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்கத் தகுந்தவர், வாழ்க” என்று எழுதிக் கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார். பின்னாளில், அதே மகேந்திரனை, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் இயக்குநர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

தவிர, அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ’பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினத்தைத் திரைப்படமாக்கத் திரைக்கதை, உரையாடல் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அதனைத் திரைப்படமாக்க முடியாமல் போனது. அதுபோல், எம்.ஜி.ஆரின் நாடக மன்றத்துக்காக, ‘அனாதைகள்’ என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை, ’வாழ்வே வா’ என்ற பெயரில் படமாக்க முடிவு செய்து அதுவும் பாதியில் நின்றுபோனது. என்றாலும் பின்னாளில் மகத்தான பல வெற்றிப் படங்களைக் கொடுத்து பெரிய இயக்குநராக வலம் வந்தார். 1964ஆம் ஆண்டு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான ’நாம் மூவர்’ திரைப்படம்தான், அவரின் கதையில் உருவான முதல் படைப்பு ஆகும்.

இதையும் படிக்க: அமெரிக்கா| ஒரேநாளில் ரூ.677 கோடி நிதி திரட்டிய கமலா ஹாரீஸ்.. அடுத்த அதிபர் பெண்தான்.. கணித்த ஜோதிடர்

மகேந்திரன் இயக்கிய படங்கள்

1978-ஆம் ஆண்டு அவருடைய திரைக்கதை, வசனம், இயக்கத்தில் ’முள்ளும் மலரும்’ வெளிவந்தது. இப்படத்தில் ரஜினி, சோபா, சரத்பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படத்தில், ரஜினிக்கு உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போன்று ஒரு முத்தான கதபாத்திரம் இன்னும் தமிழ்த் திரையில் உருவானதாகத் தெரியவில்லை. ‘கெட்டப்பய சார் இந்த காளி’ என்ற பஞ்ச் வசனங்களுடன் ரஜினிக்கான தனி அடையாளத்தை கொடுத்தது இந்தப்படம். படம் முழுவதும் இயல்பான மனிதர்களின் இயல்பான நடிப்பு. பாலுமகேந்திராவின் கேமிராவின் கண்களில் மலைகளின் அழகு ரசிகர்களை அப்படி பரவசப்படுத்தியது.

அடுத்து, அவருடைய இயக்கத்தில் 1979-ஆம் ஆண்டு வெளியான படம், ’உதிரிப் பூக்கள்’. இதுதான் மகேந்திரனின் மாஸ்டர் பீஸ் படம். ஏன் இந்திய சினிமாவின் 100 சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் நிச்சயம் இந்தப் படம் இடம்பெறும். இந்தப் படத்தில் சரத்பாபு, அஷ்வினி உட்பட மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஆணாதிக்க கணவர்களின் கொடுமைகளை பொறுத்துக் கொண்டு வாழும் பெண்களின் அமைதியான மனதுக்குள் அவ்வப்போது எழும் புயலை திரையில் அற்புதமாகக் காட்டியிருந்தார்.

அடுத்து, 1980-ஆம் ஆண்டு மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்தது ’பூட்டாத பூட்டுக்கள்’. இத்திரைப்படத்தில் ஜெயன், சாருலதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மகேந்திரனின் படங்களில் அவரது ரசிகர்களுக்கு பேவரட்டான படம் இது. அன்று பலரும் பேசத் தயங்கிய ஒரு கதை. அதை மிகவும் யதார்த்தமாக கையாண்டிருப்பார். திருமணமான தம்பதிக்கு குழந்தை இல்லாத போது, வெறொரு இளைஞனால் ஈர்க்கப்படும் மனைவி என்ற கதையை நெருடல் இல்லாமல் அதன் உண்மைத் தன்மையோடு எடுத்து இருப்பார் மகேந்திரன்.

விதிவிலக்காக உருவான இந்தப் படமும் அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாகத்தான் அமைந்தது. இந்தப் படத்தில், நடிகர் ரஜினிதான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், என்னவோ மாறிப் போனது.

இதைத் தொடர்ந்து 1980-ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான ‘ஜானி’ திரைப்படம் அவரது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மாறுபட்ட பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவான இந்தப் படத்தின் மூலம் இளையராஜாவும் ஸ்ரீதேவியும் மகேந்திரனைவிடப் பெயரைத் தட்டிச் சென்றார்கள். ஜானி படத்திற்காகவே ரஜினிக்கு தனி ரசிகர்கள் உண்டு. இசைஞானி தன்னுடைய கைவண்ணத்தில் வெறொரு தளத்திற்கு படத்தை கொண்டு சென்றிருப்பார். பின்னணி இசை உலக தரத்திற்கு இருக்கும். ரஜினி - ஸ்ரீதேவி காதல் காட்சிகளுக்கு வரும் பின்னணி இசை எப்பொழுது கேட்டாலும் ஏகாந்தமான உணர்வை தரும்.

அதுபோல் அதே ஆண்டில் நடிகர் மோகன், சுஹாசினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம், ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ சூப்பர் ஹிட் அடித்தது. தேசிய விருதுகளை அள்ளிய திரைப்படம். 100 நாட்களை கடந்து தமிழத்தில் ஓடியது.

இதைத் தொடர்ந்து 1981-ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான, ’நண்டு’ திரைப்படம், அப்போதே வடமாநில இளைஞர் வாழ்வைத் தேடி தென்னகத்தை வருவதாக இருந்தது. அதைத் தொடர்ந்து 1982இல் அவருடைய இயக்கத்தில் வெளியான ’மெட்டி’யும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்றுவரை, அதன் பாடல்களைக் கேட்டால் போதும், நம்மை எங்கோ அழைத்துச் செல்வதுபோல இருக்கும். இது தவிர, 1982-இல் வெளியான ’அழகிய கண்ணே’ திரைப்படமும், 1984இல் வெளியான ’கை கொடுக்கும் கை’ திரைப்படமும், 1986இல் வெளியான ’கண்ணுக்கு மை எழுது’ திரைப்படமும் மற்றுமொரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதையும் படிக்க: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்| முதல் இடத்தில் சிங்கப்பூர்..இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்!

மகேந்திரனால் சினிமா ஆன இலக்கியங்கள்!

இன்றைய காலத்திலும் பல நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதை அந்தக் காலத்திலேயே செய்த இயக்குநர்களில் மகேந்திரனும் ஒருவர். அவர், பிரபல எழுத்தாளர்களின் நாவல்களைத் திரைப்படமாக்கி வெற்றி கண்டவர். அந்த வகையில், எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய ’உறவுகள்’ என்ற நாவல்தான் ’பூட்டாத பூட்டுக்கள்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. அடுத்து, எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ’சிற்றன்னை’ கதையின் கருவை வைத்துத்தான் ’உதிரிப்பூக்கள்’ படம் எடுக்கப்பட்டது. அதுபோல் எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய, ’முள்ளும் மலரும்’ நாவல்தா ’முள்ளும் மலரும்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது. இப்படங்கள் அனைத்தும் மகத்தான வெற்றிபெற்றவையாகும்.

பெண் கதாபாத்திரங்கள் முன்னிலை!

எப்படி தன் திரைப்படங்களில் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளித்தாரோ, அதேபோல் பெண் கதாபாத்திரங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அழகு பார்த்தவர் இயக்குநர் மகேந்திரன். அதனாலேயே, அவருடைய பல படங்கள் வெற்றிபெற்றன. மகேந்திரனின் பல திரைப்படங்கள் பெண் கதாபாத்திரத்தை முன்னிலையாக வைத்து உருவாக்கப்பட்டவை. ஒரு பெண்ணின் பார்வையில் கதை சொல்வது என்பதே, அன்று அரிதாக ஒரு வழக்கம். அதை பல படங்களில் நிகழ்த்திக் காட்டியவர் மகேந்திரன்.

இதையும் படிக்க: ”என் மகன் இறந்துவிட்டான்” - எமோஷனலான எலான் மஸ்க்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ரஜினியும்.. மகேந்திரனும்

இயக்குநர் மகேந்திரன் தாம் இயக்கிய படங்களில், ரஜினியைவைத்து, ’முள்ளும் மலரும்’, ’ஜானி’, ’கை கொடுக்கும் கை’ ஆகிய மூன்று படங்களை இயக்கியிருந்தார். இதனால் ரஜினியின் திரைப் பயணமும் மாற்றம் பெற்றது என்பது அவரே ஒப்புக்கொண்ட உண்மை. இதையடுத்து அவரே ஒருமுறை, "நடிப்பில் எனக்கு புதிய பரிமாணத்தை கற்றுக்கொடுத்தவர் மகேந்திரன். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர்" என பெருமைபடச் சொன்னார். இன்னும் சொல்லப்போனால், ரஜினிகாந்தின் இன்றைய ஸ்டைலை உருவாக்கியவரே மகேந்திரன்தான் என்று பலரும், இன்றும் சொல்வதைக் கேட்கலாம்.

சினிமா பற்றி..

“நாட்டின் உண்மையான பிரச்னைகளைப் படமாக்கி, நாம் நினைக்கிறமாதிரி மக்களுக்குத் தர முடியலை. கால மாற்றத்திலேயே, ஒருவேளை போகப்போக அதிலே மாற்றங்கள் ஏற்பட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். ஒருவகையில், பார்த்தா நாம நம்மையே ஏமாத்திக்கிறோம்னுகூட நினைக்கிறேன். எத்தனை நாளைக்குத்தான் மூடிமறைக்க முடியும்? உண்மை, ஒருநாளைக்கு வெளிவரத்தான் போகுது; அதில் சந்தேகமில்லை” என சினிமாவின் நிலை குறித்து 1981இல் சுதந்திர தினம் ஒன்றில் மகேந்திரன் பேசியிருந்தார்.

அடுத்து சினிமா குறித்து நிகழ்வொன்றில் பேசிய மகேந்திரன், ”சினிமா ஒன்றும் தேவலோகமும் அல்ல. சினிமா சார்ந்த நபர்கள் ஒன்றும் தேவதூதர்களும் அல்ல. இதைப் புரிந்துகொண்டால், எளிய விஷயங்களைப் பார்த்து ஆச்சர்யப்படத் தேவை இருக்காது” எனப் பேசினார்.

அதுபோல் இன்னொரு சமயம் பேசிய அவர், “மக்கள் மனநிலையை ஆரோக்கியமான திசைகளை நோக்கி மோல்டு பண்ற கலைதான் சினிமா. சும்மா ரசிகர்களுக்குப் பிடிக்கும்னு தியேட்டர்ல அரட்டை அரங்கம் நடத்தக் கூடாது” என்றார்.

'உதிரிப்பூக்கள்' குறித்து...

சினிமா குறித்து தன் கருத்துகளைப் பல இடங்களில் பதிவுசெய்த மகேந்திரன், 'உதிரிப்பூக்கள்' குறித்தும் பேசியிருக்கிறார். இதுகுறித்து ஒருமுறை அவர், ”சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகரவேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள்மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ, அதையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படம்தான் 'உதிரிப்பூக்கள்' “ என்றார். அதே 'உதிரிப்பூக்கள்' குறித்து மேலும் பல சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சில கதைகளுக்கு நடிகர்கள் தெரியக்கூடாது. அப்படித்தான், ’உதிரிப்பூக்கள்’ கதையும். புதுமுகங்களைத்தான் நடிக்கவைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். குறிப்பாக, ஹீரோயின் கேரக்டர் என் கதைக்கு ஏற்றதுபோல இருக்கவேண்டும் என்று நினைத்தேன். முகம், மூக்கு, கண், தோற்றம் என அந்தப் பெண் கேரக்டரை, கற்பனை செய்துவைத்திருந்தேன். அதற்காக, பல புதுமுக நடிகைகளை வலைவீசித் தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான், பெங்களூருவிலிருந்து நாயகியாக அஸ்வினி கிடைத்தார். என் கதைக்கு எதைத் தேடினேனோ, அவை அனைத்தையும் அஸ்வினியிடம் கண்டேன். அவர் மட்டும் இல்லையென்றால், ’உதிரிப்பூக்க’ளை எடுத்திருக்கவே மாட்டேன்” என ஆச்சர்யம் பொங்கப் பேசியிருந்தார்.

இதையும் படிக்க: குஜராத்| 88 வீடுகள்.. 700 மக்கள்.. போலி ஆவணம் மூலம் ஒரு கிராமத்தையே விற்ற 6 பேர்.. நடந்தது என்ன?