லோகேஷ் கனகராஜ் புதிய தலைமுறை
சினிமா

தமிழில் ஒரு கிராஃபிக்ஸ் நாவல் இவ்வளவு தரமாக வருவதில் மகிழ்ச்சி.. இது தொடர வேண்டும் - லோகேஷ் கனகராஜ்

"எனக்கு காமிக்ஸ் மீதுள்ள விருப்பத்தை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறேன். எனவே தமிழில் ஒரு கிராஃபிக் நாவல் இவ்வளவு தரமாக வருவதில் மகிழ்ச்சி. இது தொடர வேண்டும்" - லோகேஷ் கனகராஜ்

யுவபுருஷ்

காமிக்ஸ் பிரியர்களுக்காக சென்னையில் முதன்முறையாக ‘காமிக் கான்’ நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது. காமிக் கான் இந்தியா அமைப்பு நடத்தும் இந்த நிகழ்ச்சி, ஏற்கெனவே டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதாராபாத் போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது சென்னையில் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியில் காமிக் கதாப்பாத்திரங்கள் போன்று வேடமணிந்து பலர் கலந்துகொண்டனர். வீடியோ கேம்ஸ், காமிக் புத்தகங்கள் மற்றும் பொம்மை கத்திகள் போன்றவை இதில் விற்பனை செய்யப்படும். நடனம், பாடல் மற்றும் அனிமேஷன் வீடியோக்கள் அனைத்தும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும்.

முதல் நாளான இன்று நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் கனராஜ், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட எண்ட் வார்ஸ் காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “எனக்கு காமிக்ஸ் மீதுள்ள விருப்பத்தை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறேன். எனவே தமிழில் ஒரு கிராஃபிக் நாவல் இவ்வளவு தரமாக வருவதில் மகிழ்ச்சி. இது தொடர வேண்டும். நான் படித்த ஒரு கிராஃபிக் நாவல், ராணி காமிக்ஸில் வந்த ‘இரும்புக்கை மாயாவி’. அதன் பிறகு அதேபோல தரமான புத்தகமாக இந்த இறுதிப்போர் கிராஃபிக் நாவலை பார்க்கிறேன். சினிமாவில் உள்ள ஸ்டோரி போர்ட், காமிக் புத்தகத்தின் தாக்கத்தில்தான் இருக்கும். இதுபோன்ற முயற்சிக்கும் வாழ்த்துகள்” என்றார்.

நிகழ்ச்சியின்போது லோகேஷிடம் கேள்வி எழுப்பிய ரசிகர்கள், நடிகர் சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி படத்தை எப்போது எடுப்பீர்கள் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், “இது அதற்கான மேடை அல்ல. அதனை பிறகு சொல்கிறேன்” என்று சொல்லி மறுத்தார்ர். இயக்குநர் லோகேஷ் கனகராஜும் ஒரு காமிக்ஸ் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.