’ஜனவரியில் கட்சி தொடக்கம்; டிசம்பர் 31 ல் தேதி அறிவிப்பு’ என்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அறிவித்தபோது, ’புலி வருது .. புலி வருதுன்னு சொன்னாங்க .. ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துக்கள் சார்” என்று மகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்த இயக்குநர் லிங்கும்சாமி, தற்போது, ரஜினியின் கட்சி தொடங்கவில்லை என்ற முடிவையும் ’1000 சதவீதம் வரவேற்கிறோம்’ என்று வரவேற்றுள்ளார்.
தனது உடல்நிலையை காரணம் காட்டி தற்போது ’கட்சி தொடங்கவில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை. என்னை மன்னியுங்கள்’ என்று தெரிவித்துள்ள ரஜினியின் இந்த முடிவுக்கு அரசியல்வாதிகளும் சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவா.. உங்கள் ஆரோக்கியம் தான் எங்கள் அதிசயம், அது தான் அற்புதம். 1000 மடங்கு வரவேற்கிறோம்” என்று ரஜினியின் இந்த முடிவையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.