சினிமா

“பெருமாள் பிச்சையின் தம்பி பாபி சிம்ஹா?” - ஹரி ஓபன் டாக் !

“பெருமாள் பிச்சையின் தம்பி பாபி சிம்ஹா?” - ஹரி ஓபன் டாக் !

webteam

பெருமாள் பிச்சை குடும்பத்தினருக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் இடையே நடக்கும் பிரச்னை தான் சாமி ஸ்கொயர் என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சாமி. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். படத்தில் “பெருமாள் பிச்சை” என்ற அரசியல் சார்ந்த கதாபாத்திரத்தை எதிர்த்து விக்ரம் நடித்திருப்பார். இறுதியில் பெருமாள் பிச்சையை விக்ரம் கொன்ற பின்னர், சாமியின் வேட்டை தொடரும் எனக்கூறி படத்தை முடித்திருப்பார் ஹரி. இந்தப்படம் விக்ரம் மற்றும் ஹரி இருவருக்கும் நல்ல வெற்றியை பெற்றுத்தந்தது.

இதைத்தொடர்ந்து இவரும் இணைந்து ‘அருள்’ படத்தை வெளியிட்டனர். அந்தப் படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதன்பின்னர் விக்ரம் ஒருபுறம் பிஸியாக, ஹரி மறுபுறம் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் தான்  சாமி படத்தின் இரண்டாவது பாகம், அதவாது சாமி ஸ்கொயர் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் ஹரி. இதுதொடர்பாக விக்ரமிடம் பேச அவரும் ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து, இசை வெளியிட்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. 

விழாவில் பேசிய ஹரி, சாமி இரண்டாம் பாகத்திற்கான நல்ல கதை தற்போது தான் அமைந்ததாக தெரிவித்தார். படத்தின் கதை தொடர்பாக பேசிய அவர், பெருமாள் பிச்சை குடும்பத்தினருக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை என்றார். சாமி முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையின் குடும்பம் தொடர்பாக எதுவும் காண்பிக்கப்பட்டிருக்காது. இந்நிலையில் சாமி ஸ்கொயர் படத்தில் அவர் குடும்பம் தொடர்பான கதை என்பதால், பாபி சிம்ஹா அவரது தம்பியாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. சாமி ஸ்கொயர் ட்ரெய்லரில் பாபி சிம்ஹா வெள்ளைத் தாடியுடன் இருப்பதால், இவ்வாறு கூறப்படுகிறது. சற்று இளம் வயதில் தோற்றமளித்திருந்தால் பெருமாள் பிச்சையின் மகனாக இருந்திருக்கலாம்.