சினிமா

’மன்னர் வகையறா’வில் காமெடி ஆனந்தி: பூபதி பாண்டியன் தகவல்!

webteam

விமல், ஆனந்தி, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், பிரபு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மன்னர் வகையறா’. வரும் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே, தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, காதல் சொல்ல வந்தேன், பட்டத்து யானை படங்களை இயக்கியவர். 

ஏ3வி சினிமாஸ் தயாரித்துள்ள இந்த ‘மன்னர் வகையறா’ பற்றி பூபதி பாண்டியன் கூறும்போது, “இது, தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டையை பின்னணியாக கொண்ட படம். மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி கதை உருவாகியுள்ளது. தனுஷ், விஷால் படங்களை இயக்கிவிட்டு விமல் படத்தை இயக்குவது பற்றி கேட்கிறார்கள். யார் ஹீரோவாக கிடைக்கிறார்களோ அவர்கள்தான் எனக்கு ரஜினி, கமல். அவர்களை என் கதைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வேன்.

அந்த வகையில் தனுஷ், விஷால் போல இந்த படத்தின் கதைக்கு விமல் பொருத்தமாக இருந்தார். நாயகி ஆனந்தி, இதற்குமுன் பார்த்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்துள்ளார். குறிப்பாக காமெடி காட்சிகளில் நீங்கள் புதிய ஆனந்தியை பார்க்கலாம். இந்த கதையுடன் அவர் ஒன்றிப்போனதால் தான், உங்களது அடுத்த படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை பார்க்க விரும்புகிறேன் என்றார்.

இதுவரை என் படங்கள் ஜனரஞ்சகமாக, கமர்சியலாக, காமெடியாக இருக்கும் என ரசிகர்கள் நம்பி வருவதே  பெரிய விஷயம். எனது முந்தைய படங்கள் போல இந்தப்படத்தின் காமெடி காட்சிகளும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்” என்றார்.