சினிமா

 “சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம் 

 “சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம் 

webteam
 
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.
 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்திலிருந்து நாடும் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
 
 
இதனிடையே சின்னத்திரை தொடர்பான படப்பிடிப்புகளை 20 நபர்களை மட்டும் வைத்து நடத்தாலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் தெரிவித்தார். ஆனால் இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் 20 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு படப்பிடிப்புகளை நடத்துவது என்பது சாத்தியமில்லாதது எனத் தெரிவித்தனர்.
 
இது தொடர்பாகப் பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, சின்னத்திரை படப்பிடிப்புக்கு 40 பேரை அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதனையேற்று சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் வரை பணியாற்றலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதனை அடுத்து மார்ச் மாதத்திலிருந்து நிறுத்தப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் முழு வேகத்துடன் மீண்டும் தொடங்குமென எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 
 
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், “படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள். 
 
அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம்.  பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர்.  சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். 
 
 
முதல்வர் அவர்கள் தயைகூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு , பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறு படங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும். திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றித் திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.