ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்கவே இயக்குனர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் இயக்குனர் விக்ரமனின் பதவிகாலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு இயக்குனர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பாரதிராஜாவை தலைவராக தேர்ந்தெடுக்க சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்தது தவறு என்று இயக்குனர் ஜனநாதன் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “தேர்தல் முறையாக நடந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவதுதான் சரி. முதலில், விக்ரமன் போட்டியிட்டு தலைவராகத் தேர்வானார். இரண்டாவது முறை தேர்தலே நடத்தாமல் விக்ரமனைத் தேர்வு செய்தது தவறு. அது போல இப்போது பாரதிராஜாவை தேர்வு செய்ததும் தவறானது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்கவே இயக்குனர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.