சினிமா

5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி

5 மாதங்களுக்குப் பிறகு ‘நிறவெறிக்கு’ பதிலடி கொடுத்த அட்லி

rajakannan

கறுப்பும் வெள்ளையும் நிறம்தான், அழகு இல்லை என்று நிறம் குறித்த சர்ச்சைக்கு இயக்குநர் அட்லி பதில் அளித்துள்ளார்.

மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் ‘பிகில்’படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இசை வெளியீட்டு விழாவில் சுபஸ்ரீ மரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விஜய் பேசியதுதான் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளில் ஹாட் டாப்பிக். நேரடியாக ஆளும் கட்சியை விஜய் விமர்சித்து பேசியுள்ளதாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல், இசை வெளியீட்டு விழாவுக்கு சென்ற விஜய் ரசிகர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆகியுள்ளது.

இப்படி, ‘பிகில்’ இசை வெளியீட்டு விழா பல்வேறு விவாதங்களுக்கு வித்திடும் அளவுக்கு பரபரப்பை எற்படுத்தியது. இதற்கு இடையேதான், எப்போதோ தன்னுடைய நிறம் குறித்து ட்ரோல் செய்யப்பட்டதற்கு இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி இயக்குநர் அட்லி பதிலடி கொடுத்துள்ளார். அட்லி தன்னுடைய பேச்சில் தொடக்கத்தில், “ராஜா ராணி கதை சொல்லும்போது ஒரு சட்டையோட கதை சொன்னேன் ஒகே அயிடுச்சு! அந்தச் சட்டை ராசினு நினைத்து தெறி கதை சொன்னேன் ஒகே அயிடுச்சு! ராசியான சட்டை மெர்சல் அப்போ இல்லை.! இருந்தாலும் அண்ணனை நம்பி போனேன் மெர்சல் படத்திற்கு ஒகே சொன்னார்!! சட்டை ராசி இல்ல என் அண்ணன்தான் ராசி. 

எனக்கு எப்போமே எங்க அண்ணன்தான் பிடித்த நடிகர்! எங்க அண்ணனை விட்டு என்னால் போக முடியல! எனது அனைத்து உயரமும் தளபதியை சாரும்! எங்க அண்ணனுக்கு நான்தான் படம் பண்ணுவேன். அப்படிதான் பண்ணுவேன். நிறைய பேர் சொல்லுவாங்க நான் பயங்கர நம்பிக்கையோட பேசுறேன்னு. எனக்கு அந்த நம்பிக்கை தருவதே ரசிகர்கள்தான். கமர்சியல் படமா விளையாட்டு படமா என்பதை தாண்டி உங்களுக்கு பிடிச்ச படமா ‘பிகில்’ இருக்கும். படம் ஒவ்வொரு காட்சியும் பார்த்து பார்த்து பண்ணியிருக்கோம்” என்று பேசினார். இறுதியில்தான் நிறம் குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்தார்.

நிறம் தொடர்பான சர்ச்சை குறித்து, “ஆங்கிலம், இந்தி எல்லாம் அறிவு கிடையாது, மொழி. அதே மாதிரி கறுப்பு, வெள்ளை கலர்தான் அழகு இல்லை. என்னை வெறுப்பவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதால்தான் எப்போதும் என்னைப் பற்றியே பேசுகின்றனர். அவர்களை வெற்றி பெறுவதுதான் இங்கு உண்மையான ஆட்டம். இட்லி என்றால் ஆவி பறக்கும், அட்லி என்றாலும் ஆவி பறக்கும்” என நச்சென்று அட்லி பதில் அளித்தார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மைதானத்தின் அருகில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் அமர்ந்து அட்லியும் ஆட்டத்தை கண்டுகளித்தார். அவரது மனைவியும் உடன் இருந்தார். போட்டி முடிந்த பின்னர், ஷாரூக்கான் உடன் அட்லி இருக்கும் புகைப்படம் பதிவிட்டு, அவரது கறுப்பு நிறத்தை சுட்டிக்காடி சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. சர்ச்சை முடிந்து கிட்டதட்ட 5 மாதங்கள் ஆன நிலையில், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவை பயன்படுத்திக்  கொண்டுள்ளார்.