இயக்குநர் அமீர் web
சினிமா

“தியேட்டரில் வெளியிட்டு கொட்டுக்காளி படத்தின் கண்ணியத்தை கெடுத்துட்டாங்க!” - இயக்குநர் அமீர் காட்டம்

சர்வதேச விருதுகளை வென்ற கொட்டுக்காளி திரைப்படத்தை மெயின் ஸ்ட்ரீம் படங்களோடு போட்டிபோட வைத்ததே ஒரு மிகப்பெரிய வன்முறை என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

Rishan Vengai

கொட்டுக்காளி திரைப்படம் குறித்து இயக்குநர் அமீர் பேசியிருக்கும் விசயம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் ஒரேநாளில் வெளியான வாழை திரைப்படமும், கொட்டுக்காளி திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அதிகப்படியான ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்துச்செல்லும் திரைப்படமாக வாழை இருந்துவருகிறது.

விடுதலை, கருடன் திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சூரி நடித்திருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி. 2021-ம் ஆண்டு வெளியாகி பல சர்வதேச திரைப்பட விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான கொட்டுக்காளி திரைப்படத்தை, நடிகர் கமல்ஹாசன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலிய நட்சத்திரங்கள் பாராட்டி படக்குழுவை வாழ்த்தியிருந்தனர். இயக்குநர்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தனர். தமிழ் சினிமாவில் உலக சினிமா உருவாகி வருவதாக பலரும் சிலாகித்தனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டினர். விமர்சன ரீதியாக 4/5 மதிப்பெண்களை பலரும் கொடுத்தனர்.

கொட்டுக்காளி குழுவினர்

ஆனால் நல்ல திரைக்கதையை கொண்டிருந்தாலும், நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதிகப்படியான ரசிகர்களின் கொண்டாட்ட திரைப்படமாக கொட்டுக்காளி அமையவில்லை என்று சிலர் கூறி வருகின்றனர். அதுகுறித்து பேசியிருக்கும் இயக்குநர் அமீர், ”கொட்டுக்காளி போன்ற சர்வதேச விருதுகள் வென்ற திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டிருக்க கூடாது” என்று தன்னுடைய கருத்தை பதிவுசெய்துள்ளார். அவருடைய கருத்து தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறிவருகிறது.

வாழை போன்ற படத்தோடு வெளியிட்டது பெரிய வன்முறை..

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கெவி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், ”ஒரு படத்தை எடுக்கும்போது அந்தப் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம், பல வேதனைகளை அனுபவித்தோம் என்று சொல்வதால் மட்டும் அப்படம் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு படத்தின் கதை பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் 'வாழை' படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதுஒரு வெகுஜன திரைப்படம், அதனால் தான் அதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றது.

கொட்டுக்காளி

அதேசமயம் சூரியின் 'கொட்டுக்காளி' ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். அது சர்வதேச திரையிடலுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பான படம். அப்படி சர்வதேச விருதை பெற்ற ஒரு படத்தை வெகுஜன படங்களுடன் வெளியிட்டது வன்முறை என்று நினைக்கிறேன், அது ஏற்புடையது அல்ல. கொட்டுக்காளி திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடாமல் அதன் கண்ணியத்தை காப்பாற்றி இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் கொட்டுக்காளி திரைப்படம் குறித்து பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் 'கொட்டுக்காளி' படத்தை நான் தயாரித்திருந்தால், நிச்சயம் தியேட்டரில் வெளியிட்டு இருக்க மாட்டேன். வணிக நோக்கத்தில் அதை கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கிறேன். அது சர்வதேச விருதுகளை பெற்று இருக்கிறது. அந்த கண்ணியத்துடனே அதை விட்டு இருக்கணும். அப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு பெரிய நடிகரா இருக்காரு. அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி நல்ல விலைக்கு படத்தை ஓடிடி தளத்தில் விற்று அத்தோடு முடித்திருக்க வேண்டும். அப்படி பண்ணி இருந்தா தேவைப்படுறவங்க மட்டும் அந்த படத்தை ஓடிடில போய் பார்த்து இருப்பாங்க” என்று பேசினார்.

”எந்த படத்துடன் எந்த படம் வரவேண்டும் என கூறுவது வன்முறை!”

அமீரின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தில் இயக்குநர் லெனின் பாரதி அமீரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமீர் கருத்து குறித்து பேசியிருக்கும் லெனின் பாரதி, “திரையரங்கிற்கு இப்படியான படங்களை மட்டும்தான் கொண்டு வரவேண்டும்.. இந்த இந்தப் படங்களோடு இந்த இந்தப் படம்தான் வெளியாகவேண்டும் என்று அண்ணன் அமீர் அவர்கள் வெறும் பொருளாதார, வெகுஜனப் பார்வையைக் கொண்டு வரையறுப்பது படைப்புலகம் மீது செலுத்தும் வன்முறையாகும்” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.