இயக்குநர் ஏ.எல்.விஜய் முகநூல்
சினிமா

“ஜல்லிக்கட்டை மையப்படுத்தி திரைப்படம் இயக்க விருப்பம்” - இயக்குநர் ஏ.எல்.விஜய்

“இதுபோன்ற படங்களை இயக்குவதற்கு எனக்கும் ஆர்வம் உண்டு” - மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த இயக்குநர் ஏ.எல்.விஜய் பேட்டி.

ஜெனிட்டா ரோஸ்லின்

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டி வருகிறது. முதல் நாள் அவனியாபுரத்திலும், இரண்டாம் நான் பாலமேட்டிலும், மூன்றாம் நாளான இன்று அலங்காநல்லூரிலும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

திரைத்துறையினர் பலர் இப்போட்டியை காண நேரடியாக களத்திற்கு சென்று கண்டுகளித்து வருகின்றனர். அந்தவகையில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியை காண அலங்காநல்லூர் வந்த இயக்குநர் ஏ.எல்.விஜய், “ஜல்லிக்கட்டை மையப்படுத்தி திரைப்படம் இயக்க விருப்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “எவ்வளவு போராட்டங்களை கடந்து இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது என்பதை நான் நன்கு அறிவேன். எல்லா இடங்களுக்கும் ஒரு சிறப்பான விளையாட்டு என்பது இருக்கிறது. அதில் நம் தமிழ்நாட்டை பொறுத்தவரை பாரம்பரிய விளையாட்டாக கபடிக்கு அடுத்து ஜல்லிக்கட்டுதான் இருக்கிறது. இதுவே எனது முதல் ஜல்லிக்கட்டு போட்டி.

தற்போது இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் ’வாடிவாசல்’ திரைப்படத்தினை இயக்கி கொண்டிருக்கிறார். சினிமாவில் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெற்றிமாறனின் படம் ஒரு நல்ல மற்றும் சிறந்த தொடக்கமாக இருக்கும். இதன்மூலம் உலகம் முழுவதும் இதன் புகழ் நிச்சயம் பரவும். இது மாதிரியான படங்களை நான் இயக்கியது இல்லை. எனக்கும் இதுபோன்ற படங்களை இயக்குவதற்கு ஆர்வம் உண்டு...” என்று தெரிவித்துள்ளார்.